தமிழகம்

பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல!

பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியல் சட்டத்தின் 103வது அரசியல் திருத்த சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பளித்து உள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:

உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல !

பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியல் சட்டத்தின் 103வது அரசியல் திருத்த சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பளித்து உள்ளது. இதில் இரண்டு நீதிபதிகள் 103-வது அரசியல் திருத்த சட்டம் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது அல்ல என்று கூறியுள்ளனர். இது சரியல்ல. இது அதிர்ச்சி அளிக்கிறது.

அரசியல் அமைப்பு சட்டம் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய பிரிவினருக்கு நீதி வழங்க வழிவகை செய்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசின் சட்டத் திருத்தம் பொருளாதார அடிப்படையை மட்டும் அளவுகோளாக கொண்டதும், அது உயர் சாதி பிரிவினருக்கு மட்டுமானதும் என்பதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

பொருளாதார அடிப்படையில் மட்டுமே உலகில் எந்த நாட்டிலும் இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதில்லை. பொருளாதாரம் என்பது நிரந்தரமான ஒன்றல்ல என்பதே இதற்கு முக்கிய காரணம். எனவே, நீதிபதிகளின் இக்கருத்து ஏற்புடையதல்ல. இட ஒதுக்கீடு கொள்கை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். இட ஒதுக்கீடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்படுவது சரியல்ல என்ற கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன. இவை பழங்குடி, பட்டியல் இன, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகளைப் பறிக்க வழி வகுக்கும்.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடே 2006க்குப் பிறகுதான் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் நடைமுறைக்கு வந்தது. அதுவும் கிரிமி லேயர் நடைமுறைப்படுத்தப்பட்டதனால் முழுமையாக பயனை இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கிடவில்லை. அதைப் போலவே, மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு சென்ற ஆண்டு தான் நடைமுறைக்கு வந்துள்ளது. அதுவும் சரியாக நடைமுறைபடுத்தப்படவில்லை. இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத காலகட்டத்தில், இட ஒதுக்கீடு நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி இருப்பது மிகவும் வருந்துத்தக்கது.

எனவே, சமூக நீதிக் கோட்பாட்டிற்கு எதிரான இந்தத் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்து கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button