இந்தியாகட்டுரைகள்

பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் நிர்மலா சீதாராமன்!

இளசை கணேசன்

இரண்டு விலங்குகள் மோதிக்கொண்டால், ரத்தம் குடிக்க நாக்கை தொங்க போட்டு காத்திருக்குமாம் ஓநாய்! ஆனால், இந்த ஓநாய்கள் சண்டையை தூண்டி விடாது! பாசிச ஓநாய் இருதரப்புக்கும் இடையே சண்டையை மூட்டி, மேலும் தூண்டி விட்டு ரத்தம் குடிக்க தயாராக இருக்கும்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் பேச்சு இதற்கு முற்றிலும் பொருந்தும்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கத் துடிக்கிறார்!

1. திமுகவுக்கும் – அதிமுகவுக்கும் மோதலை ஏற்படுத்துவது!
2. திராவிடத்திற்கும், தமிழ் தேசியத்திற்கும் மோதலை ஏற்படுத்துவது.

1989ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவை திரௌபதியாகவும் திமுக அமைச்சர்களை துச்சாதனர்களாகவும் சித்தரிக்கிறார் நிர்மலா சீதாராமன்.

”ஜெயலலிதா அவர்கள் திரௌபதியும் அல்ல.. துச்சாதனர்களால் துகில் உரியப் படவும் இல்லை.” என அன்றைக்கு ஜெயலலிதாவுக்கு அரணாக இருந்த திருநாவுக்கரசரும், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும் உண்மையை போட்டு உடைத்து இருக்கிறார்கள்.

கோயபல்ஸ் நிர்மலா சீதாராமனுக்கு கொஞ்சமாவது உரைக்கவில்லையா?

நடக்காத ஜெயலலிதா சம்பவத்திற்கும்; நடந்து கொண்டிருக்கும் மணிப்பூர் வன்முறை பாலியல் கொடுமைக்கும் என்ன சம்பந்தம்?
ஒன்றாவது படிக்கும் பிள்ளை கூட இந்த ஒப்பீட்டை ஏற்குமா? நிர்மலா சீதாராமன் அவர்களே மக்கள் மன்றத்தில் பதில் சொல்லுங்கள்!

  • தமிழர்கள் திராவிடர்கள் இல்லையாம்!
  • தமிழகம் திராவிடம் அல்லவாம்!
  • தமிழ்நாட்டு அந்தணர்கள் ஆரியர்கள் இல்லையாம்! அந்தணர்களும் தமிழர்களாம்!
  • ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இருப்பது பகைமை அல்லவாம்! சிறிய அளவுக்கு வேற்றுமை மட்டும்தானாம்!

என்று தமிழக மக்களிடம் கயிறு திரித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

இதில் இன்னொரு முக்கிய சூழ்ச்சியும் இருக்கிறது! எங்கும் சூழ்ச்சி, எதிலும் சூழ்ச்சி என்பதுதானே பார்ப்பனியம்!

அந்தணர்களின் சிறப்புகளை ஒட்டுமொத்தமாக அபகரித்து அந்தணர்களை பார்ப்பனர்களாகவும், தமிழர்களாகவும் சித்தரிக்க நிர்மலா சீதாராமன் முயற்சிக்கிறார்!

இந்தக் கருத்துக்கள் சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டு இருப்பதாக ம.பொ.சி. யை துணைக்கு அழைக்கிறார்!

ம.பொ.சி. அவர்களே கூட திராவிடத்தில் சங்கமமாகி சட்டமன்றத்தில் மேலவை உறுப்பினராக ஆகிவிட்டாரே?

‘நாம் தமிழர்’ என்ற கட்சியை தமிழ்நாட்டில் முதலில் தொடங்கிய ஆதித்தனார் அவர்களே கூட திராவிடக் கட்சியில் சங்கமமாகி அமைச்சராகி விட்டாரே!

ம. பொ. சி. யின், திராவிட எதிர்ப்பை தனக்கு சாதகமாகக் காட்டத் தெரிந்த நிர்மலா சீதாராமனுக்கு அறிஞர் அண்ணாவின் ‘ஆரிய மாயை’ பற்றி தெரியாதா அண்ணாவின் ‘ஆரிய மாயை’ யில் இருந்து எடுத்துக்காட்டத் தொடங்கினால்ஞ் அவர் தலைதெறிக்க ஓட வேண்டி இருக்கும்!

குறைந்தபட்சம் கலைஞர் கருணாநிதியும், அம்மா ஜெயலலிதாவும் திராவிட கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் தற்போதைய திராவிட கட்சிகளின் தலைவர்கள் என்ற புரிதலாவது உண்டா?

நிர்மலா சீதாராமன் அவர்களே, சிலப்பதிகாரம் யாருடைய படைப்பிலக்கியம் என்பது தெரியுமா?

சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இது சமணர்களின் படைப்பிலக்கியம்! ‘அன்பே சிவம்’ என்று போதித்துக்கொண்டு 8000 சமணர்களை கழுவில் ஏற்றி துடிக்கத் துடிக்க கொன்று குவித்தார்களே! அந்த சமணர்களின் படைப்புதான் சிலப்பதிகாரம்!

ஆரிய எதிர்ப்புதானே சமணத்தின் அடிப்படை!

சிலப்பதிகாரத்தின் உள்ளடக்கம் குறித்து மக்கள் மன்றத்தில் விவாதிக்கத் தயாரா?

சங்க காலத்தில், சங்க இலக்கியத்தில், வேதங்களில், வேத இலக்கியத்தில், இதிகாசங்களில், புராணங்களில் ‘இந்து ‘ என்ற சொல் எங்காவது இருக்கிறதா?

சமஸ்கிருத இலக்கியங்களில் எங்காவது ‘மதம்‘ என்ற சொல் இருக்கிறதா?

இரண்டையும் சேர்த்து ‘இந்து மதம்’ என்று மூச்சுக்கு 300 தரம் கூப்பாடு போடுகின்றீர்களே ஏன்? பார்ப்பனர்களின் பாதுகாப்பு, பார்ப்பனர்களின் புகலிடம் இந்து மதம் என்பதில் தானே?

ஆரியர்- திராவிடர் இடையே இருப்பது முரண்பாடு!

ஆரியர்- தமிழர் இடையே இருப்பதும் முரண்பாடு தான்!

திராவிடர்- தமிழர் இடையே இருப்பது முரண்பாடு அல்ல நேச வேற்றுமை!

இந்த யதார்த்த உண்மையை அப்படியே புரட்டி போடுகிறீர்களே! தமிழக மக்களை ஏமாற்ற முடியுமா? ஒரு காலமும் முடியாது!

அந்தணர் என்போர் அறநெறியை பின்பற்றுபவர். ஆசைகளைத் துறந்தவர். ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவர்.

வேதங்களை கற்றுத் தேர்ந்தவர்கள் மட்டுமல்ல, சிரா மணம் என்று சொல்லக்கூடிய வேத எதிர்ப்பாளர்களில் கூட அந்தணர்கள் இருந்திருக்கிறார்கள்.

அரசு உருவாக்கத்தின் போது அரசுக்கு அறிவுரை வழங்குவதும் மெய்யியல் துறையில் ஈடுபாடு காட்டுவதும் அந்தணர்களுக்கு உரியதாக இருந்தது.

அந்தணர்கள் என்பது தொழில் பெயர் அல்ல! ஒரு சாதிப் பெயரும் அல்ல.. அது பண்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறப்புப் பெயர். உதாரணத்திற்கு ஒன்று. ‘பதிற்றுப்பத்து’ தொகை நூலில் இரண்டாம் பதிகம் பாடிய குமட்டூர் கண்ணன் என்பவர் ஒரு அந்தணர்.

இவர் சேர மன்னன் இமயவர்மன் நெடுஞ்சேரலாதன் அவையில் அரசருக்கு ஆலோசனை கூறுபவராக இருந்தார். இமயம் வரை படையெடுத்து ஆரிய மன்னர்களை வெற்றி கொண்டதில் குமட்டூர் கண்ணனின் ஆலோசனை வழிகாட்டுதல் முக்கியத்துவம் வாய்ந்தது.

அந்தணர் யார் என்பதை ஐயன் திருவள்ளுவர் அழகாக எடுத்துக்காட்டுகிறார்.

“அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிருக்கும்
செந்தன்மை பூண்டொழுக லான்”

அறநெறியில் சிறந்து விளங்குவதோடு மற்ற உயிர்களிடத்தும் அருள்நெறி காட்டி நடக்க வேண்டும் என்று திருக்குறள் விளக்குகிறது.

பார்ப்பனர்களிலும் அந்தணர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் பார்ப்பனர்கள் மட்டுமே அந்தணர்கள் என்பது வடிகட்டிய பொய்.

தமிழர்கள் உருவாக்கி வைத்துள்ள அடிப்படை மரபுகள் குறித்து நிர்மலா சீதாராமனுக்கு தெரியுமா?

  • அனுபவம் மற்றும் அறிவியல் முறையில் அறியும் அறிவு.
  • அன்பு நிறைந்த சமத்துவ அற வாழ்க்கை.
  • அநீதிக்கு எதிராக வீரச்சமர்.
  • ஒழுக்கம் மிகுந்த காதல்

இவற்றின் மீது தான் தமிழர்களின் பெருமிதம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இது பாசிச பாஜகவினருக்கு தெரியாத ஒன்றல்ல. தமிழ் தேசியர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய ஒன்றாகும்.

இந்து மதம் என்ற பெரும்பான்மையை உருவாக்கி அதில் பாதுகாப்பாக ஒளிந்து கொண்டவர்கள்.

பெரும்பான்மையினரின் வாக்குகளைப் பெறுவதற்காக சிறுபான்மையினருக்கு எதிராக எதையும் செய்ய துணிபவர்கள்.

இவைதான் பாசிச பாஜகவின் தேர்தல் அரசியல் உத்தி. இந்த உத்தியின் விளைவுதான் மணிப்பூரில் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையாக பாலியல் கொடுமை!

மணிப்பூர் வன்முறை திசை திருப்ப ஹரியானாவில் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை.

பாசிச பாஜகவின் நரித் தந்திர உத்தி வட இந்தியாவில் சில பகுதிகளில் எடுபடலாம். தமிழ்நாட்டில் நிச்சயமாக எடுபடாது.

இதிலிருந்து தமிழ்நாட்டு அரசியலை திசைதிருப்பவே பிரதமர் மோடியும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது படாத பாடு பட்டு இருக்கிறார்கள்.

நிர்மலா சீதாராமனின் பொய் மூட்டைகளுக்கு பதில் கூறுவதுடன் நாம் திசைதிரும்பி விடக்கூடாது.

நமது குறி பாசிச பாஜகவை வீழ்த்துவது;- ஆட்சியில் இருந்து வெளியேற்றுவது என்பதாக இருக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button