கட்டுரைகள்

பொதுவுடைமை இயக்கமும், தமிழ்த்தென்றலும்

சி.மகேந்திரன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி 1925 ஆண்டில் பிறந்தாலும், அது காங்கிரஸ் சோசலிஸ்டு கட்சி என்னும் பெயருக்குள் இருந்துதான் சில காலம் செயல்பட்டு வந்தது. முற்றாக கம்யூனிஸ்டுகளை ஒழித்து முடிப்பது என்ற தீவிரத்திலிருந்த பிரிட்டிஷ் ஆட்சியில், இவ்வாறான யுத்திகளோடு செயல்படுவது கம்யூனிஸ்டுகளுக்கு தேவையாய் இருந்தது. ஜீவா, சீனிவாசராவ், ராம்மூர்த்தி முதலான தலைவர்கள் காங்கிரஸ் சோலிஸ்டுகள் கட்சியிலிருந்து செயல்பட்ட கம்யூனிஸ்டுகள்.

‘செல்‘ என்பது கம்யூனிஸ்டுகள் தங்கள் நுட்பமான செயல்பாட்டிற்கு என்று உருவாக்கிக் கொண்ட  குழுக்கள். செல்கள் அமைத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த ‘செல்கள்’ உருக்கு போன்ற திறன் கொண்ட கட்சி அமைப்பை உருவாக்குவதில் முழு கவனம் எடுத்துக் கொண்டன. கட்சியின் வளர்ச்சிக்கு இதைப் போன்ற மற்றொரு செயல்பாடும் பெரும் பங்காற்றியது.

பல்வேறு துறைகளில் மக்களால் நன்கு அறியப்பட்ட சில தலைவர்கள் மார்க்சியமும், கம்யூனிசமும் தவிர்க்க முடியாமல் இந்த மண்ணில் வெற்றி பெற்றே தீரும் என்ற நம்பிக்கை முழக்கத்தை முன் வைத்து, செயல்பட்டு வந்தார்கள். ஒரு காலத்தில் கட்சிக்கு வெளியே இவர்கள் வழங்கிய பங்களிப்பு அளப்பரியது. இவர்கள் ‘செல்’ என்னும் அமைப்புக்குள்ளிருந்து கட்சி வளர்ச்சியில் பங்கெடுத்தவர்கள் இல்லை. அவர்களில் முக்கியமானவர் திரு.வி.க அவர்கள்.

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார்  என்பதன் சுருக்கம் தான்  திரு.வி.க. தமிழ் இலக்கியம், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளில் ஈடுபாடு கொண்டு பல சிறந்த நூல்களை எழுதிய தனித்துவம் மிக்க அறிஞர். அனைவராலும் அறியப்பட்ட மேடை சொற்பொழிவாளர்.
ஆனால் மறுபக்கத்தில் அவர் ஒரு தலைசிறந்த போராளி, தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்பட்ட திரு.வி.க.விடம் பொதுவுடைமைக் கொள்கையின் மீது மாறாத ஈடுபாடு கொண்ட புயல் நிகர் செயல் வேகமும் இருந்தது. தொழிற்சங்க செயல்பாடுகளில் ஈடுபட்டதன் மூலம் இவர் மார்க்சியத்தைக் கற்றறிந்து, பொதுவுடைமை கொள்கைகள் மீது தனித்துவமான ஆர்வத்தைக் கொண்டிருந்தார்.

பூவுலகின் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கும் வலிமை மார்க்சியத்திற்கு உண்டு என்பதை மனப்பூர்வமாக நம்பினார்.

மார்க்சியம், கம்யூனிசம் பற்றி இவர் எழுத்துக்கள் மூலம் பகிர்ந்து கொண்டவை, வாசிப்புக்கு ஆர்வம் ஊட்டுவதாக அமைந்துள்ளன. இன்று வெகுமக்கள் தன்மை கொண்ட, மிகவும் பரந்துபட்ட மக்கள் அணியைக் கட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கம்யூனிஸ்டு கட்சிக்கு இந்த அனுபவம் மிகமிக அவசியமாகத் தேவைப்படுகிறது.

ஆங்கிலேயேர் காலத்தில் இந்தியாவில் முதன் முதலில் சென்னையில் அமைக்கப்பட்ட பெரிய வணிக நிறுவனம் ஸ்பென்சர். இது இன்று ஸ்பென்சர் பிளாசா என்று அழைக்கப்படுகிறது. தெற்கு ஆசிய நாடுகளிலேயே மிக பிரம்மாண்டம் கொண்டதாக இது அமைந்திருந்தது. 1885 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இது, 80 தனித்தனியான விற்பனை கடைகளைகளை ஒருங்கிணைத்து  உருவாக்கப்பட்டது. இதன் உரிமையாளர் பிரிட்டனை சேர்ந்த ஸ்பென்சர் அண்டு கோ என்னும் பிரிட்டிஷ் நிறுவனம். திரு.வி.க இங்குதான் முதலில் பணியில் சேர்ந்தார். தனக்கு கிடைப்பதற்கு அரிய அரசியல் ஒன்று இங்குதான் கிடைத்ததாக திரு.வி.க அவர்களே குறிப்பிடுகின்றார்.

பிரிட்டன் தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீர் ஹார்டி கம்யூனிஸ்டுக் கொள்கைகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர். அரசியல் நிலைமைகளை ஆய்வு செய்வதற்கு இந்தியா வந்த இவர் சில காலம் சென்னையில் தங்கியிருக்கிறார். அப்பொழுது எதிர்பாராமல் திரு.வி.க.  ஹார்டியை சந்திக்கிறார். இதன் மூலம் மார்க்ஸ் பற்றியும், சமத்துவ உணர்வுகள் பற்றியும் அவரிடமிருந்து தெரிந்து கொண்டேன் என்கிறார் திரு.வி.க. இது 1908 ஆண்டு.

வங்காளப் பிரிவினையை ஒட்டி எழுந்த சுதேசி இயக்கம் 1906 முதல் 1911 வரை வீறு கொண்டு எழுந்தது. வந்தே மாதரம் என்னும் இதழ் 1905 ஆண்டு விபின் சந்திரரால் நிறுவப்பட்டு, அரவிந்தரை ஆசிரியராகக் கொண்டு செயல்பட்டு வந்தது. விபின சந்திரபாலா சென்னை வந்து கடற்கரையில் ஆவேச உரை நிகழ்த்தினார். இது இந்த மாகாணத்தையே தட்டி எழுப்பியது. அந்தக் கூட்டத்திற்கு திரு.வி.க.வும் சென்றிருந்தார். அந்த நாட்களில் ‘வந்தே மாதரம்’ பத்திரிகையை இவர் வரவழைத்தார்.

ஸ்பென்சரில் பலர் முன்னிலையில் பத்திரிகைகயை இவர் வாசிப்பார். உடன் பணிபுரியும் ஊழியர்க்குச் செய்திகளை விளக்கியுரைப்பார். இது அந்த நிறுவனத்தில் செயல்பட்டு வந்த பல ஆங்கிலேயருக்கு இந்தச் செயல் விருப்பம் அற்றதாக இருந்தது. வந்தே மாதரப் பிரசாரகன் என்று இவர் மேல் முத்திரை குத்தப்பட்டது. மேனஜிங் டைரக்டர் ஒருநாள் நேரில் அழைத்து எச்சரிக்கை செய்தார். திரு.வி.க. இது தமது உரிமை இதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறி விட்டு, வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.

இதைப் போலவே, செல்வபதி சந்திப்பு திரு.வி.க வின் வாழ்க்கையில் அமைந்த மற்றொரு நிகழ்வு. சூளை பட்டாளத்திலுள்ள வேங்கடேச குணாமிர்த வர்ஷிணி சபை காரியதரிசி இவர். சபை சமய சொற்பொழிவு அரங்கம் என்ற நிலையிலிருந்து, தொழிலாளர்கள் நலனில் அக்கறை என்ற புதிய எல்லையில் அடியெடுத்து வைத்திருந்தது. அந்தச் சபையில் பேசுவதற்கு திரு.வி.க. செல்வபதியால் அழைக்கப்பட்டிருந்தார். இதுவே திரு.வி.க தொழிலாளர் இயக்கத்தில் அடியெடுத்து வைக்க அடிப்படையாக அமைந்தது.

திரு.வி.க ஒரு தேர்ந்த பத்திரிக்கையாளர். 1917 ஆண்டு முதல் 30 மாதங்கள் தேசபக்தன் என்னும் இதழாசிரியாகப் பொறுப்பேற்றிருந்தார். மிகத் தீவிரமான கட்டுரைகள் பத்திரிக்கையில் வெளி வந்தன.  1918 ஆம் ஆண்டின் அச்சு சட்டத்தின் கீழ் பத்திரிகைகள் மீது அரசு அடக்குமுறையை ஏவியது. 300 அச்சகங்கள் மீதும் 350 பத்திரிகைகள் மீதும் அபராதம் விதிக்கப்பட்டது. சுமார் 500 பிரசுரங்கள் தடை செய்யப்பட்டன. 200 அச்சகங்கள் மற்றும் 190 பத்திரிகைகளிடம் மொத்தம் ரூ.10 லட்சம் ரொக்கப் பணம் கோரப்பட்டது. இதில் ரூ.2 முதல் 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திரு.வி.க. ஆசிரியர் பொறுப்பில் செயல்பட்ட தேசபக்தன் இதழும் தடைசெய்யப்பட்டது.
இந்தப் பின்னணியில் இந்திய சுதந்திரப் போராட்டத்தை விழிப்பணர்வு கொண்ட தொழிலாளர்கள் முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கில் 1918 ஆண்டில் உருவாக்கப்பட்டது தான் ‘சென்னை தொழிலாளர் சங்கம்’. இதில் எஸ். எம். தொழிலாளர் சங்கம், டிராம்வே தொழிலாளர் சங்கம், அலுமினிய தொழிலாளர் சங்கம், போலீசார் சங்கம் ஆகியவை இடம் பெற்றன. போலீஸார் சங்கத் தலைவர் இந்து பத்திரிக்கையின் கஸ்தூரி அய்யங்கார்.

தொடர்ந்து மார்க்சியத்தைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் திரு.வி.க. விடம் பெருகியது. 1919 டிசம்பரில் திலகர் சென்னைக்கு வருகை செய்தார். கடற்கரைக் கூட்டத்திலும் தொழிலாளார் கூட்டத்திலும் சொற்பொழிவாற்றினார். “தொழிலாளார் அமைப்புக்களின் செயலாற்றும் சக்தியும் செல்வாக்கும் நாளடைவில் மேலும் மேலும் அதிகாரிக்கத் தொடங்கிவிட்டது. தொழிலாளர்கள் தான் ஆட்சியாளர்கள் ஆகப்போகிறார்கள்” என்று திலகர் தீர்க்க தரிசனமாக அந்தக் கூட்டத்தில் அறிவித்தார்.

பொதுக் கூட்டம் நடைபெற்ற அந்த இரவில், திலகருடன் உரையாடல் செய்த திரு.வி.க. மார்க்சியம் பற்றி எழுப்பிய வினா முக்கியமானது. “மார்க்சியம் மீது இந்தியா நாட்டம் செலுத்தும் காலம் வரும் வாய்புள்ளது. இந்தியா எதையும் தனது இயற்கையாக்கியே ஏற்கும் பண்புடையது. அதற்குள் மார்க்சியம் இந்த மண்ணுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.” என்று திலகர் பதில் கூறியதாக திரு.வி.க. தனது குறிப்பு ஒன்றில் எழுதியுள்ளார்.

மார்க்சியம், கம்யூனிசம் பற்றி அறிந்து கொள்வதில் சிங்காரவேலர், சக்கரை செடியார் உதவி செய்ததைப் பற்றியும் மிகுந்த நன்றி உணர்வுடன் குறிப்பிட்டு சொல்லுகிறார் திரு.வி.க. மார்க்சியம் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள இவருக்கு சிங்காரவேலர் கூடுதல் கவனமெடுத்து உதவி செய்திருக்கிறார்.

மார்க்சியம் இந்தியாவுக்கு அந்நியம், தேவைப்படாதது, என்பது போன்ற கருத்துக்கள் எழுந்த நேரத்தில் அது இந்தியாவுக்கு ஆக்கம் தந்து, பயன் அளிக்கும் தத்துவம். அதை அப்படியே காப்பியடித்து பிரயோகம் செய்யாமல் இந்திய நிலைமைகளுக்கு ஏற்பச் செப்பம் செய்து கொள்ளவேண்டும் என்ற கொள்கையை தெளிவாக முன் வைத்தவர் திரு.வி.க.

மார்க்சியத்தை தமிழ் வழி நின்று யோசித்தவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள். டார்வினுடைய பரிணாம தத்துவத்தை, திரு.வி.க. கூர்தல் அறம் என்று சுட்டிக் காட்டுகிறார். கூர்தல் என்று இவர் பயன்படுத்திய செந்தமிழ்ச் சொல் நம்மை யோசிக்க வைக்கிறது. “கூர்தல் அறம் உலகைச் சிந்திக்க வைக்கிறது. உலக மாற்றத்தை இயற்கை வழி நின்று சிந்திக்கத் தூண்டுகிறது. டார்வின் ஆராய்ச்சியில் கூர்தல் அறத்தை முதன் முதல் எனக்கு அறிவுறுத்தியவர் சிங்காரவேலு செட்டியார்” என்பதையும் திரு.வி.க. குறிப்பிடுகிறார்.

டார்வின் உயிர் இனங்களின் பரிணாம வளர்ச்சி விதியினை எவ்வாறு கண்டுபிடித்தாரோ அவ்வாறே மார்க்சும் மானுட வரலாற்றின் வளர்ச்சி விதியினைக் கண்டுபிடித்தார் என்று மார்க்சின் சக தோழரான எங்கெல்ஸ் சொன்னதை மேற்கோள் காட்டி, இது மானுட விடுதலைக்கான கண்டுபிடிப்பு என்று வியந்து பேசகிறார்.

ஐரோப்பாவில் சக்தி வாய்ந்த சில வல்லரசு சக்திகள் உள்ளன. அதைவிட மற்றும் ஒரு மாபெரும் சக்தியும் இருக்கிறது. அது எல்லாவற்றையும் நடுங்க வைக்கும் திறன் கொண்டது. அதன் பெயர் தொழிலாளி வர்க்கம். அது மக்கள் துணை கொண்டு, இப்பொழுது புரட்சிக்கு தயார் நிலையில் இருக்கிறது. உரிய காலம் வரும்போது அது பொங்கி எழும் என்று 1854- ஆண்டில் மார்க்ஸ் எழுதியதை திரு.வி.க. மிண்டும் மீண்டும் குறிப்பிட்டு புரட்சிகர மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்கிறார்.

முதலாளித்துவம், ஏகாதிபத்தியமாக மாறும் காலத்தில் ஏற்படும் தீமையை லெனின் சிந்தித்தார். இதைத் திரு.வி.க. ஏகாதிபத்திய கொடுமையால் உலகம் பசி, பட்டினி, நோய், அகால மரணம், அடக்குமுறை, உரிமை மறுப்பு, போர் முதலியவற்றால் மக்கள் சிதைக்கப்படுகிறார்கள் என்கிறார். இந்த காரணங்கள் தான் மார்க்சின் புது உலகைப் படைக்க வேண்டும் என்ற கொள்கைக்கு அடிப்படையாக அமைந்தது.

இதனால்தான் அவரது கல்வியும் கேள்வியும் அறிவும் அன்பும் ஆராய்ச்சியும் அனுபவமும், மூலதனக் குவியல் இல்லாத ஓர் உலகை, வறுமைக் கொடுமை செல்வத் திமிர் அற்ற ஓர் உலகை, போலீஸ், பட்டாளமற்ற ஓர் உலகை, அரசு என்னும் அதிகார நிறுவனம் உதிர்ந்து விழுந்துவிடும் ஓர் உலகை, உற்பத்தி சாலை, போர்க் கருவிகளை உருவாக்கும் நிலை காணாத ஓர் உலகை, எல்லா மக்களும் ஒரே சமூகம் என்று கொள்ளும் ஓர் உலகை, தனிமை அதாவது தன்னலம் அற்று, எல்லாரும் சேர்ந்து தொழில் புரிந்து வாழும் ஓர் உலகை, படைக்க ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

மார்க்சியம், பொதுவாகச் சமதர்மம் என்றும், பொதுவுடைமை என்றும் பேசப்படுகிறது. இதை அறிந்து கொள்ள சமூகத்தின் நுண்மையில் நுழைந்து பார்த்தல் வேண்டும். பார்த்தால் மார்க்ஸ் பொதுமையில் முக்கூறுகள் இருத்தல் இனிது விளங்கும். முதற்கூறு சோஷலிசம். இரண்டாவது கம்யூனிசம். மூன்றாவது பர்பெக்ட் கம்யூனிசம், அதாவது முழுக் கம்யூனிசம். இதைச் சுத்தக் கம்யூனிசம் என்று சொல்லலாம்.” என்கிறார். சோசலிசத்தின் வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களைக் குறித்து எவ்வளவு தெளிவான கருத்துக் கொண்டிருந்தார், திரு.வி.க. என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.

வாழ்நாள் முழுவதும் சோவியத் நண்பராகவே வாழ்ந்தவர் திரு.வி.க. சோவியத் நண்பர்கள் சங்கம் நிறுவ வேண்டும். சோவியத் மக்கள் நடத்தி வரும் வீரஞ்செறிந்த போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்பதற்காக இயக்கம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்னும் எண்ணம் சிலரிடம் எழுந்தது. இதை ஒட்டி ஒரு வேண்டுகோள் தயாரிக்கப்பட்டது. இதில் நாட்டின் பல்வேறு துறைகளையும் சேர்ந்த தலைவர்கள் கையொப்பமிட்டனர். தமிழ்நாட்டில் இந்த வேண்டுகோளில் முதல் கையொப்பமிட்டவர் திரு.வி.க. அது மட்டுமா? சோவியத் நண்பர்கள் சங்க ஸ்தாபகருள் ஒருவராகவும், பின்னால் செயலாளருள் ஒருவராகவும், தலைவராகவும் செயல்பட்டார்.
தமது இறுதி நாட்கள் வரை அவர் உள்ளத்தில் இரண்டு இயக்கங்கள் குடியிருந்தன. ஒன்று தொழிலாளர் இயக்கம், மற்றொன்று  சோவியத் நட்புறவு இயக்கம்.

“சோவியத் நாட்டைப் போல!” என்று ஒப்புமை காட்டும் இயல்பை, திரு.வி.க. கொண்டிருந்தார். சோவியத் நாட்டில் நூற்றுக்கணக்கான தேசிய இனங்கள் இருப்பதையும், அவர்கள் சர்வ உரிமைகளும் பெற்று சமமாக விளங்குவதையும், தாய்மொழியில் சகல மட்டத்திலும் சர்வ துறைகளிலும் கல்வி போதிக்கப் பெறுவதைப் பெரும் பிரச்சாரமாகவே செய்து வந்தார்.

“தொழிலாளர் சுயராஜ்யமே எனது குறிக்கோள். தொழிலாளர் சுயராஜ்யமே உலக விடுதலை” என்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்த திரு.வி.க அவர்கள் ஆங்கில ஏகாதிபத்தின் கொடிய அடக்குமுறையால், ‘செல்‘ என்னும் பெயரில் தனிக்குழுக்களாகச் செயல்பட்டு வந்த கம்யூனிஸ்டுகளால் செய்ய முடியாத கடமையைச் செய்து வந்தார்.

கம்யூனிஸ்டுகளால் தங்கள் கொள்கைகளை வெளியில் பிரச்சாரம் செய்ய முடியவில்லை. தங்கள் மீது சுமத்தப்படும் அவதூறுகளுக்காகப் பதில் சொல்ல முடியவில்லை. இயக்கம் தலைமறைவாகச் செயல்பட்து. அந்தக் காலத்தில் உற்ற தோழனாய் நின்று, தந்தை பெரியாரைப் போல கம்யூனிஸ்டு கட்சியின் கொள்கைகளை உலகுக்கு எடுத்துச், சொல்வதில் தன்னை அர்ப்பணித்தக் கொண்டவர் திரு.வி.க.

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி பிறந்த இந்த நாளில், கம்யூனிசத்தின் உயர்வைத் தன் தோளில் சுமந்து மக்களிடம்  எடுத்துச் சென்ற அந்தத் தோழனை நினைவு கூர்வது அவசியமானதாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button