இந்தியா

பொதுத்துறை வங்கி ஊழியர்களைக் கழிசடைகள் என்று அவதூறாகப்  பேசிய திரு குருமூர்த்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – சி ஹெச் வெங்கடாச்சலம்

துக்ளக் ஆசிரியர் திரு எஸ் குருமூர்த்தி வங்கி ஊழியர்களைக்  கழிசடைகள் என்று தரக்குறைவாகப் பேசியது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தோழர் சி ஹெச் வெங்கடாச்சலம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது பின்வருமாறு:

2022 மே 9 அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரு எஸ் குருமூர்த்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் குறித்து மிகவும் அநாகரிகமான, தரக்குறைவான கருத்துகளைக் கூறியுள்ளார்.

Verbatim of his comments:

“இந்த வங்கிகள் இருக்கே, இதுல பிரச்சனை என்னவென்றால், இன்னிக்கு வங்கித்துறையில் இருக்கும் திறமையான அதிகாரிகள் எல்லாம் இந்த அரசு வங்கியில் இருந்து வெளியே போறாங்க. காரணம் என்னவென்றால் இங்கே சம்பளம் குறைச்சல், சுதந்திரம் இல்லை. இங்கே இருக்கிறது பூரா கழிசடைகள் (hair thrown away after shaving) எல்லாம் இங்க இருக்காங்க.”

நமது இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில், தனிநபர் என்ற முறையில், திரு குருமூர்த்தி தனக்கு விருப்பமான கருத்துகளைக் கொண்டிருப்பதற்கு அவருக்கு உரிமை உள்ளது. ஆனால், பொது நிகழ்ச்சிகளில் கருத்துகளை வெளியிடும் போது, அவரது உரிமை நாகரிக எல்லையின் வரம்புகளை மீறிவிடமுடியாது; மற்றவர்கள் குறித்து தரக்குறைவான, உண்மைக்குப் புறம்பான கருத்துகளை அவர் பேச வேண்டிய அவசியம் இல்லை. அவரது கருத்துகள் மிகவும் கீழ்த்தரமானவை, அநாகரிகமானவை, வன்மையாக கண்டிக்கத் தக்கவை ஆகும்.

துரதிர்ஷ்டவசமாக, ஒரு பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பு வகிப்பதுடன், திரு குருமூர்த்தி இந்திய ரிசர்வ் வங்கியில் உயர் பொறுப்பு வகித்து வருகிறார். எனவே, பொது நிகழ்ச்சிகள் மற்றும் அரங்குகளில் கருத்து தெரிவிக்கும் போது அவர் கவனமாகப் பேச வேண்டும்.

பிரபலமான மனிதர்கள் மற்றும் நாட்டு நடப்புகள் குறித்து கருத்து  தெரிவித்து வருபவர் என்பதற்காக வங்கி ஊழியர்களின் நேர்மை, திறமை மற்றும் செயல்திறன் குறித்து அவதூறாகப் பேசுவதற்கான உரிமையைத் தான் பெற்றிருப்பதாக அவர் கருதிக் கொள்ளக்கூடாது.

போதிய பணியாளர்கள் இன்றி, உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி, பொதுமக்கள் தரப்பிலான ‘அதிகரிக்கும் எதிர்பார்ப்புகள்’,  வங்கித்துறை அல்லாத சேவைகள் வழங்குவதில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகள் என்று அளவிட முடியாத, கடுமையான மன உளைச்சல் மற்றும் அழுத்தம் நிறைந்த பணிச் சூழலில் பொதுத்துறை வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் பணியாற்றி வருகிறார்கள். எண்ணற்ற இடையூறுகளுக்கு மத்தியில், வங்கி ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடனும், சிரத்தையுடனும் பணியாற்றி வருகிறார்கள். குறிப்பிட்டுச் சொல்வதானால், அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறார்கள். எனவே, பொதுத்துறை வங்கி ஊழியர்களைக் கழிசடைகள், திறமையற்றவர்கள், தனியார் வங்கிகளுக்குச் செல்ல முடியாதவர்கள் என்று அவர் கூறிய கருத்துகள் அவதூறானவை மற்றும் கீழ்த்தரமானவை ஆகும். அவரது கருத்துகள் வரம்பு மீறியவை என்பதால் வன்மையாக கண்டிக்கிறோம்.

மாண்புமிகு நிதியமைச்சர் முன்னிலையில், வங்கித்துறை குறித்த கேள்வி ஒன்றுக்கு, வரம்புமீறி ஆணவப் போக்குடன், தான்தோன்றித்தனமாக, அநாகரிகமான கருத்துகளை அவர் பேசியிருப்பது, எங்கும், எதிலும், எதைப் பற்றியும் தன் இஷ்டப்படி பேசிவிடலாம் என்ற அவரது மமதையின் வெளிப்பாடு ஆகும்.  

குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியில் நீங்கள் உரையாற்றும் போது, வங்கித்துறை ஊழியர்களின் பங்களிப்பு பற்றி, குறிப்பாக பெருந்தொற்று காலத்தின் போது, வங்கித்துறை ஊழியர்களின் பங்களிப்பு மற்றும் சேவைகளை மிகத் தெளிவாக அங்கீகரித்து, பாராட்டிப் பேசியமைக்காக உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவதூறான கருத்துகளைத் திரு குருமூர்த்தி தெரிவித்த போது, அவற்றை மறுக்கும் வகையில் நீங்கள் தலையசைத்ததைக்  காணொலி வாயிலாக நாட்டு மக்கள் அனைவரும் காண முடிந்தது. எனினும், அவரது கருத்துகளை உங்களின் பேச்சின் போது, நீங்கள் மறுத்திருக்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் எதிர்பார்த்தனர்.

பெருந்தொற்று – ஊரடங்கு காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், சோதனைகள் மற்றும் வேதனைகளைப்  புறந்தள்ளிவிட்டு மக்களுக்காகச் சேவையாற்றிட பொதுத்துறை வங்கிகளைச் சார்ந்த இலட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் வங்கி கிளைகளுக்குச் சென்று பணியாற்றினார்கள் என்பதை ஊரடங்கு காலத்தின் போது, தனது வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த திரு குருமூர்த்தி அறிந்து கொள்ள வேண்டும். மேலும் சொல்வதானால், பல ஊழியர்கள் பணியின்போது தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

வங்கி ஊழியர்களின் போராட்டத்தால் தான் வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. அதன் காரணமாகத்தான் மேல்தட்டு மக்களுக்கான வங்கிச் சேவையானது வெகுமக்களுக்கான வங்கிச் சேவையாக மாற்றம் கண்டது. அண்மைக் காலத்தில் ‘ஜன் தன் திட்டத்தின்’ மூலமாக சாமானிய மக்களும் வங்கிச் சேவைகளைப்  பெற்றிட உழைத்தவர்கள் வங்கி ஊழியர்கள் தான் என்பதைத் திரு குருமூர்த்தி தெரிந்து கொள்ள வேண்டும்.

அண்மைக் காலங்களில், அதிகம் படித்த, மிகத் திறமை வாய்ந்த இளைஞர்கள் கடுமையான போட்டிகளைக் கடந்து வங்கிப் பணிகளில் சேர்ந்து வருகிறார்கள். தனியார் வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றிய எண்ணற்ற இளைஞர்கள், பொதுத்துறை வங்கிப் பணிகளில் சேருவதற்காக அவர்களின் வேலைகளையும் தூக்கி எறிந்தனர் என்பதையும் திரு குருமூர்த்தி தெரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்களைக் கழிசடைகள் என்றும், திறமையற்றவர்கள் என்றும் கூறுவது அவரின் அறியாமை மற்றும் பேதைமையை அம்பலப்படுத்துகிறது.

பொதுத்துறை வங்கிகளில் உள்ள அரசாங்கத்தின் பங்குகள் 49 சதவிகிதமாக குறைக்கப்பட்டால், மத்திய புலனாய்வு நிறுவனம், மத்திய கண்காணிப்பு ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் வரம்பிற்கு வெளியே வங்கிகளைக் கொண்டு வந்துவிடலாம் என்ற அவரது கருத்து குறித்து இங்கு நாங்கள் விவாதிக்க விரும்பவில்லை. வங்கிகள் பொதுமக்கள் பணத்தைக் கையாளுகின்றன. எனவே, பொதுமக்களுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பும் வங்கிகளுக்கு உண்டு. பொதுமக்களின் சேமிப்பு பணத்தைக் கையாளும் அமைப்புகள் அனைத்தும் அரசாங்க முகமைகளால் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். அவரது கருத்துகள் பிற்போக்கானவை ஆகும். மத்திய புலனாய்வு நிறுவனம் மற்றும் மத்திய கண்காணிப்பு ஆணையம் உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் வரம்புக்குள் தனியார் வங்கிகளும் கொண்டு வரப்பட வேண்டும்.

பொதுத்துறை வங்கி ஊழியர்களைக் கழிசடைகள் என்று அவதூறாகப்  பேசிய திரு குருமூர்த்தியின் கருத்துகள் வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் மன உணர்வுகளை மிகவும் காயப்படுத்தி உள்ளது. எனவே, அவர் தெரிவித்த மோசமான கருத்துகளுக்காக, திரு குருமூர்த்தி வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை வங்கி ஊழியர்கள் வலியுறுத்துகிறார்கள்.

பொதுவெளியில் கருத்துகளை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பது பற்றிய புரிதல் இன்றி, பொதுத்துறை வங்கிகள் மற்றும் அவற்றின் ஊழியர்கள் குறித்த புரிதலைத் திரித்துக் கூறிய திரு குருமூர்த்தி போன்ற நபர் ரிசர்வ் வங்கியின் உயர் பொறுப்புகளில் தொடரக் கூடாது என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு தோழர் சி ஹெச் வெங்கடாச்சலம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button