பேராசான் ஜீவாவையும் பேராயுதமாகிய ஜனசக்தியையும் உயர்த்தி பிடித்திடுவோம்!
இதழாளர் இசைக்கும்மணி
தோழர் ஜீவா என்று அனைவராலும் வாஞ்சையோடு அழைக்கப்படும் ப.ஜீவானந்தம், எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திட வேண்டும் எனும் பொதுவுடைமை பேச்சால், அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து, தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தை அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக வழி நடத்தியவர் .
காந்தியின் கொள்கை, பெரியாரின் களப்பணி, சிங்காரவேலரின் வர்க்க அரசியல் செயல்பாடுகளை கைக்கொண்டு, இந்திய அரசியலில் ஒரு தனித்துவம் மிக்க தலைவராக, பேராசனாகவே திகழ்ந்தவர் .
சாதி சமய பேதங்கள் தவிர்த்த பொதுவுடைமை சமுதாயம் அமைந்திட வேண்டும் என தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர். அதே சமயத்தில் “ஜனசக்தி ” சமதர்மம் ” உள்ளிட்ட பத்திரிகைகளின் ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும், கம்பனை, பாரதியை அவர்தம் படைப்புகளை உயர்த்திப் பிடித்த இலக்கியவாதியாகவும் திகழ்ந்தவர். பாரதியாரின் பாடல்களை உள்வாங்கி பாட்டாளி வர்க்கத்தை எழுச்சிபெற வைத்தவர் .
தான் கொண்ட கொள்கைகளை வெளிப்படுத்திட வேண்டி, காகிதத்தில் ஒரு பேராயுதமாகிய “ஜனசக்தி” பத்திரிக்கையை 1937 ல் தொடங்கி நடத்தி, தொடர்ந்து வழி காட்டியவர். ஜனசக்தியில் அவர் எழுதிய தலையங்கம் ,கட்டுரைகள், அரசியல் பேச்சுக்களின் பதிவுகள் எல்லாம் தமிழக அரசியலில் திசைகாட்டியாகவே இருந்தன.
“கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கானதே” என்பதை வலியுறுத்தி , கலை இலக்கிய பெருமன்றத்தையும் “தாமரை” இலக்கிய இதழையும் தொடங்கி வைத்து வழிநடத்தியவர் .
சாதி, மத தீண்டாமைகளை எதிர்த்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடிவெள்ளியாய் திகழ்ந்தவர். தந்தை பெரியாரோடும், சிங்காரவேலரோடும் இணைந்து வைக்கம் போராட்டம், சுசீந்திரம் தீண்டாமை எதிர்ப்பு போராட்டம் என ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை காத்திட பாடுபட்டவர்.
தன்னை ஒரு பாட்டாளி வர்க்கத் தோழனாக செதுக்கிக் கொண்டு, மக்களுடன் பயணிப்பதையே விரும்பினார். பஞ்சாலைத் தொழிலாளர்கள், அச்சுத் தொழிலாளர்கள், கள் இறக்கும் தொழிலாளர்கள் என அனைத்து பாட்டாளி மக்களின் வாழ்வுரிமைக்காக தன் இறுதி மூச்சு வரை களமாடியவர் .
“நான் மனிதரை நேசிக்கிறேன்” என பாட்டாளி மக்களை விரும்பியது போலவே தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களின் தோழனாகவே வாழ்ந்து மறைந்தார் .
“பிறந்தோம்,வளர்ந்தோம், இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை; சமூக அநீதிக்கு எதிரான போராட்டங்களில் உயிரைத் துச்சமென மதித்து, கலகக் குரல் உயர்த்திடுபவரே மரணத்தை வென்றவராக இருக்க முடியும் என தான் எடுத்துரைத்தவாரே பிறருக்காக வாழ்ந்து மடிந்து புகழுடம்பு எய்தியவர். தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிதாமகனாகவே, பேராசானகவே போற்றப்பட்டவர் தோழர் ஜீவா!
ஜீவாவை யாரும் செதுக்கிடவில்லை; சுயம்புவான நடைமுறை செயல்பாடுகளால் தன்னைத்தானே மேலுயர்த்திக் கொண்டவர். சட்டமன்ற உறுப்பினராக 1952 இல் பொறுப்பேற்று, தொழிலாளி வர்க்க மேம்பாட்டுக்காகவும், தமிழ் மொழியின் மேன்மைக்காகவும், தமிழ்நாடென மொழிவாரி மாநிலம் அமைவதற்காகவுமே பாடுபட்டவர் .
1952 இன் சட்டமன்றத் கூட்டத் தொடரிலேயே சென்னை மாகாணத்திற்கு “தமிழ்நாடு” என பெயரிட வேண்டும் என முதன்முதலாக குரல் எழுப்பி பேசியவர். 1967 களில் தமிழ்நாடு என பெயர் மாற்ற மசோதா நிறைவேற்றுவதற்கு அடிப்படை காரணமாக இருந்தவர் .
சாதிய அடக்குமுறைகளை ஏவி, தொழிலாளி வர்க்கத்தை ஒன்றுபட முடியாமல் பிரித்தாளும் சூழ்ச்சிகளை கையாண்ட முதலாளி வர்க்கத்தின் மீது கோபாவேசம் கொண்டு தனது பேச்சாலும் பாட்டாலும் தொழிலாளி வர்க்கத்திற்கு விழிப்புணர்வு ஊட்டி வழிநடத்திட்டவர் தோழர் ஜீவா!
“காலுக்கு செருப்பும் இல்லை
கால் வயித்து கூழும் இல்லை
பாழுக்கு உழைத்தோமடா தோழனே!
பசையற்றுப் போனமடா!! ”
என பாரதியைப் போன்று ரௌத்திரத்தை தன் பாடல்களில் வெளிப்படுத்தியவர் .
1929 ல் தனது 22வது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு 1963ல் தனது 56வது வயதில் இறக்கும் வரை கம்யூனிஸ்டாகவே வாழ்ந்திருந்தவர் .
“அரிதரிது தோழர் ஜீவாவை போல் கொள்கைப் பிடிப்போடு வாழ்தல் அரிது” என்றே அவரது 60வது ஆண்டு நினைவேந்தல் தினத்தில் வீரவணக்கம் செலுத்திடுவோம்!
காந்தியக் கொள்கைகளில் மூழ்கி ,பெரியாரின் சுயமரியாதை சமத்துவத்தை இணைத்து, சிங்கார வேலரின் வர்க்க பொதுவுடைமை தத்துவத்தை ஏற்று, ஜனசக்தி பத்திரிகையில் அரிமா பலத்தோடு எழுத்தாளுமையை காட்டி, மேடைகளில் கம்பனையும் பாரதியையும் இலக்கியத்தையும் போற்றிப் பேசி, முன்னுதாரனமாக வாழ்ந்து காட்டிய பேராசானாகிய ஜீவாவின் புகழையும்,
“புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை
வேரோடு சாய்ப்போம் !
பொதுவுடைமை கொள்கையை
திசையெட்டும் சேர்ப்போம்!
புனிதமோடு அதனை
உயிர் என்று காப்போம்!
என பாரதிதாசனின் வாழ்த்துரையோடு தொடங்கி சமூக மாற்றத்துக்கான சமூக நல்லிணக்கத்தினையும், சமூகநீதியையும் , சமூக சமத்துவத்தையும் வெளிப்படுத்திடும் கருத்தாக்கங்களையும், கட்டுரைகளையும் கொண்டு காகிதத்தில் ஒரு கருத்தியல் பேராயுதமாக பொதுவுடைமையர் கைகளில் கடந்த 86 ஆண்டுகளாக தவழ்ந்து கொண்டிருக்கும் பேராசான் ஜீவாவின் ஜனசக்தியையும்
என்றென்றைக்கும் உயர்த்திப் பிடித்து, காலம் ஏற்படுத்தி வரும் மாற்றத்தின் வீச்சையும் ஒருங்கிணைத்து மேன்மைப்படுத்துவதே ஜீவாவின் நினைவேந்தலுக்கு நாம் செலுத்திடும் சரியான அஞ்சலியாக இருந்து பெருமை சேர்த்திடும்!
பேராசான் ஜீவாவின் புகழ் போற்றிடுவோம்!
பேராயுதமான ஜீவாவின் ஜனசக்தியை
புதிய பொலிவோடும் நடைமுறைகளோடும்
மேலும் மேலும் உயர்த்தி படித்திடுவோம்!!