பேரறிவாளன் விடுதலை: கலங்கரை விளக்காக வழிகாட்டும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
நாட்டின் உச்சநீதிமன்றம், அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 142 வழங்கியுள்ள அதிகாரத்தின் மூலம், கு.பேரறிவாளன் வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கு.பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், இது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து விட்டதை கருத்தில் கொண்டு பேரறிவாளன் உட்பட 7 பேர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு ஒருமுகமாக வலியுறுத்தி வந்தது. இது தொடர்பாக கு.பேரறிவாளன் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தார். அவரது தயார் திருமதி அற்புதம்மாள், மக்களியக்கத்தை கட்டமைக்கும் முயற்சியில் சலிப்படையாது ஈடுபட்டார்.
அரசியல் கட்சிகளும், சமூக செயல்பாட்டாளர்களும், உரிமைப் போராளிகளும் போராட்டத்தில் பங்கேற்று ‘எழுவர் விடுதலை’ பெரும் இயக்கமானது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையும், அமைச்சரவையும் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றியது. மக்கள் உணர்வை பிரதிபலித்த சட்டமன்றத் தீர்மானங்களுக்கு ஆளுநர் மதிப்பளிக்காமல் காலம் கடத்தி வந்தார்.
“சட்டத்தின் ஆட்சி”க்கு காவலனாக இருக்க வேண்டிய ஆளுநர் மாளிகை மாநில அரசின் உரிமைகளை மனிதாபிமானத்தை நிராகரித்தது. தன் சுயவிருப்பத்தை நிறைவேற்றி கொள்ளும் உணர்வில் செயல்பட்டது. ஆளுநர் மாளிகையின் நீண்டகால தாமதத்தையும், முடிவெடுக்காமல் தட்டிக் கழித்து வந்த பொறுப்பற்ற செயலையும் உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. மாநில அரசின் உரிமைகளை ஒன்றிய அரசு மதித்து நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஒரளவு எச்சரிக்கையும் செய்துள்ளது.
அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பாதுகாக்க சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து, நீதிபரிபாலன மகா சமுத்திரத்தில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்காக அமைந்துள்ள உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மகிழ்ச்சியோடு வரவேற்கிறது.
இந்தத் தீர்ப்பின் வெளிச்சத்தில் இதே வழக்கில் சிறைபடுத்தப்பட்டுள்ள சாந்தன், முருகன், ஜெயகுமார், ராபர்ட், பையாஸ், ஜெயச்சந்திரன் மற்றும் நளினி ஆகியோரை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறது.