பெரு: எண்ணெய் வளம் மீண்டும் பொதுத்துறை வசம்

லிமா, டிச.30- பெருவில் எண்ணெய் உற்பத்தியை பொதுத்துறை நிறுவனமான பெட்ரொபெரு மீண்டும் துவக்கும் என்று அந்நாட்டின் இடதுசாரி ஜனாதிபதி பெட்ரோ காஸ்டில்லா அறிவித்துள்ளார். 1990கள் வரையில் ஒருநாளைக்கு 1 லட்சத்து 87 ஆயிரம் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தியை பொதுத்துறை நிறுவனமான பெட்ரோபெரு மேற்கொண்டு வந்தது. அதன்பிறகு வலதுசாரி ஜனாதிபதிகளின் ஆட்சிகளின் கீழ் எண்ணெய் வளம் தனியார் கைகளுக்குச் சென்றது. இது நாட்டின் வளர்ச்சியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. வளர்ச்சி யை முடக்கும் வகையில் இந்த தனியார் மயக் கொள்கைகள் அமைந்துவிட்டன என்று காஸ்டில்லா விமர்சித்துள்ளார். இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட அவர், “30 ஆண்டு காலம் தனியாரிடம் விடப்பட்டிருந்த சில பகுதிகள் பெட்ரோபெருவின் வசம் வருகிறது.
அடுத்த 22 மாதங்களுக்கு எண்ணெய் உற்பத்தி செய்வதோடு, சுத்திகரிப்பு, விநியோகம் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகிய பணிகளையும் பொதுத்துறை நிறுவனமே மேற்கொள்ளும். இது நாட்டிற்கும், பொதுத்துறை நிறுவனத்திற்கும் மிகவும் முக்கியமானதாகும்” என்றார். தற்போது பெட்ரோபெருவிடம் வழங்கப்பட்டுள்ள பகுதி மிகச் சிறியதாகும். 99 எண்ணெய்க் கிணறுகள் உள்ள இந்தப் பகுதியில், எண்ணெய் வளத்தை தனியார் நிறுவனங்கள் சுரண்டிவிட்டன. தற்போது சராசரியாக 540 பீப்பாய்கள்தான் அன்றாடம் எடுக்கப்படுகின்றன.
ஆனால், இந்தப்பகுதியில் எண்ணெய் எடுக்கும் உரிமை வந்துள்ளதால், தலாராவில் உள்ள சுத்திகரிப்பு ஆலையை மீண்டும் இயக்கும் வாய்ப்பு வந்துள்ளது. இந்த ஆலையை மேலும் நவீனப்படுத்தும் வேலைகளும் துவங்கியுள்ளன. அதேபோன்று அமேசானில் உள்ள இரண்டு எண்ணெய் வளப்பகுதிகளில் தனியார் நிறுவனங்களோடு இணைந்து தனது உற்பத்திப் பணியை பெட்ரோபெரு செய்யப் போகிறது. பகுதி எண் 192 என்பது பெருவிலேயே மிகப்பெரிய எண்ணெய் வளம் உள்ள பகுதியாகும். அங்கு மட்டும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 10 ஆயிரத்து 500 பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு முதல் நாட்டின் இயற்கை வளங்களைப் பயன்படுத்து வதில் பெரும் மாற்றங்களை பெரு சந்திக்கவிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.