தமிழகம்

பெரியார் மண்ணில் சுயமரியாதைக்குப் பங்கம் ஏன்? 

ம. இராதாகிருஷ்ணன்

உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், முறைகேடுகளில் ஈடுபட்டால் நானே சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்” என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். அவருடைய அறிவிப்பு வெளிவந்த அதே நேரத்தில், சமூக வலைதளங்களில் வேலூர் மாநகராட்சி 44வது வார்டு  மாமன்ற உறுப்பினர் தவமணி அவர்களுடைய கணவர் தாமோதரன் என்பவர் தூய்மை பணியாளர்களைத் தரக்குறைவாகப் பேசி மிரட்டும் காணொளி ஒன்று வைரலாகிக் கொண்டு இருக்கிறது. 

அதில் சாதிய மேலாதிக்க திமிர், பதவியைப் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடும் வேட்கை, ரவுடித்தனம், ஆணாதிக்கம் என்று சகலமும் அடங்கி இருக்கிறது. மாமன்ற உறுப்பினர் பதவி என்பது முதலீடு செய்த தொழில் அதில் லாபம் அடைவது தன்னுடைய இலக்கு என்று அவர் சொல்லாமல் சொல்லுகிறார். பின்னர், மன்னிப்பு கேட்டதாக தெரிகிறது. 

வேலூரில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இத்தகைய நிலைமை பரவலாக உள்ளது. அதனால் தான் தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளனம்  கடந்த மாதம் 21 ஆம் தேதி அன்று தமிழ்நாடு முழுமையிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த அறைகூவல் விடுத்தது. உள்ளாட்சி தொழிலாளர்களின் ஏஐடியூசி சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. 

இதில் தர்மபுரியில் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பெரும்பாலும் பெண்கள். அவர்கள் பேசும்போது, ஒருமையில் பேசுவதும், தகாத வார்த்தையில் பேசுவதும், சாதிப் பெயரைச் சொல்லி இழிவு படுத்துவதும், தாக்க முற்படுவதும் நீக்கமற நிறைந்து இருப்பதாக கண்ணீர் மல்க கூறினர். மேலும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் நான்கு மாதமாக ஊதியம் வழங்கவில்லை என்று முறையிட்டதற்கு அம்மாவட்ட ஆட்சியர், “நீங்க ஒழுங்கா வேலை செய்திருக்க மாட்டீக” என்று கூறியதாகச் சொன்னார்கள்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சித் தலைவர்களும், உறுப்பினர்களும் தொழிலாளர்களை மிரட்டுவதை ஏற்க முடியாது என கண்டித்தார். 

அதே நாளில், தேவகோட்டை நகராட்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர் தாக்குதல் நடத்தி, தகாத முறையில் நடந்து கொண்டதை கண்டித்து  முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மதுரை மாவட்டம் பனையூர் ஊராட்சி மன்ற தலைவர் இப்படித்தான் நடந்து கொள்கிறார் என்று  ஆர்ப்பாட்ட செய்தியைப் பார்த்த நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்டார். 

ராமநாதபுரம் மாவட்டம், ஆர். எஸ். மங்கலம் பேரூராட்சியில் சங்க கிளை தலைவர் ஜெயராஜன் மீது பேரூராட்சி அலுவலர் ஒருவர் தாக்குதல் நடத்த முயன்று, தகாத வார்த்தையில் பேசி உள்ளார். இதனை கண்டித்து போராடிய பின்பு அவர் மன்னிப்பு கோரியிருக்கிறார். 

ராமநாதபுரம் மாவட்டம், ஆர். எஸ். மங்கலம்

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில், ஒப்பந்ததாரர் சட்டவிரோதமாக பறித்துக் கொண்ட ஊதியத்தை வழங்க தொழிலாளர் உதவி ஆணையர் முன்பு ஒப்புக்கொண்டு, ஒப்பந்தம் போட்ட நகராட்சி ஆணையர், ஊதியத்தை வழங்காத நிலையில் ஆர்ப்பாட்டம் செய்த தொழிலாளர்கள் 5 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழ்நாடு ஏஐடியூசி தலைவர் தோழர் கே. சுப்பராயன் எம். பி., மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேருவின் நேரடி கவனத்திற்கே இந்தப் பிரச்சனை குறித்து கொண்டு சென்றார்.

காரைக்குடி நகராட்சியில், சேகரித்த குப்பைகளை தலையில் சுமந்து வர நிர்பந்திக்கப்பட்டனர். பொதுமக்கள் பிரித்துத் தர வேண்டிய வேலையை தொழிலாளிகளே செய்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர்.

சேலம் மாவட்டம் தேவூர் பேரூராட்சி நிர்வாக அதிகாரி கையால் மலம் அள்ள கட்டாயப்படுத்துகிறார். கையால் மலம் அள்ள மறுத்த தொழிலாளி ராஜ்குமார் வேலையை விட்டு நீக்கப்பட்டு இருக்கிறார். கையால் மலம் அள்ளும் தடைச் சட்டம் தான் இருக்கிறது, கையால் மலம் அள்ளுவதைக் கட்டாயப்படுத்த சட்டம் இல்லை என்று இந்த அதிகாரிக்கு உணர்த்த வேண்டியது யார்? என்று தெரியவில்லை. அதிலும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இந்த அதிகாரிக்கு  இல்லை. 

நாளிதழ் செய்தி ஒன்றின்படி, பழனி நகராட்சியில் பெண் தொழிலாளிகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்படுத்திய மாரிமுத்து என்ற மேற்பார்வையாளர் பணியிடை  நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். இவை அனைத்தும் சமீபத்திய உதாரணங்கள்.

தொழிலாளிகளின் மீதான தாக்குதலின் போது, சில நேரங்களில் தாக்கியவர் “மன்னிப்பு கேட்டார்” என்று முடிக்கப்படுகிறது. நிச்சயமாக இந்த மன்னிப்பு சாவர்க்கர் கேட்ட மன்னிப்புக்கு ஒப்பானது.  உளப்பூர்வமாக தவறை உணர்ந்து கேட்ட மன்னிப்பு இல்லை. தமிழ்நாடு முழுமையிலும் இந்த நிலைமை (விதிவிலக்குகளைத் தவிர) நீக்கமற நிறைந்திருக்கிறது. 

ஆங்காங்கே சிறந்த நிர்வாகிகளும், அலுவலர்களும் இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. மாமன்றங்களில், நகர் மன்றங்களில், பேரூர் மன்றங்களில், ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்காக குரல் எழுப்பவர்களாக இப்போதும் இடதுசாரிகளும், முற்போக்கு எண்ணம் கொண்ட சமூக செயற்பாட்டாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். 

நூறாண்டுகளுக்கு மேலாக சுயமரியாதையை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் பெரியார் மண்ணில் தமிழ்நாட்டினுடைய பொது சுகாதாரத்தை பேணிக் காக்கும், கடை நிலையிலும் கடைநிலையில் இருக்கக்கூடிய, இந்தத் தூய்மை பணியாளர்களுக்கு மட்டும் சுயமரியாதை இருக்கக் கூடாது என்று கருதும் நிலை உள்ளது. ஏன் இந்த நிலைமை? 

சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படுத்துகிற இத்தகைய  நடவடிக்கைகள் மட்டுமல்ல; தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைப்படி குறைந்தபட்ச கூலி கூட கிடைக்காமல் தான் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் பணி புரிகின்றனர். அரசாணையை அமலாக்கு என்றால்  முடியாது, முடிந்ததைப் பார் என்று மிரட்டல் வருகிறது. மாவட்ட ஆட்சியர் தான் சொல்ல வேண்டும் என்கிறார்கள். முன்மாதிரியாக, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆணை வெளியிட்டார். தொடர்ந்து இப்போது கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு இருக்கிறார். இப்போது, மாவட்ட ஆட்சியர் சொன்னாலும் தர முடியாது என்ற நிலை  உள்ளது.

தொழிலாளிக்கு தருவதற்காக ஒப்பந்ததாரரிடம் தரும் தொகை தொழிலாளிக்கு வந்து சேர வேண்டும்; தொழிலாளியின் ஊதியத்தைப் பறிக்க அனுமதிக்க கூடாது என்றால்; பணி நீக்கமும், பணியிட மாற்றமும் பரிசாக கிடைக்கிறது. இவ்வாறு அரசாணை, சட்டம், நீதிமன்ற உத்தரவு என அனைத்தையும் துச்சமாக கருதும் மனநிலை எப்படி உருவானது ???  

ஈரோடு நகர்மன்ற தலைவராக தந்தை பெரியார் பணிபுரிந்த போது, ராஜாஜி நகர் மன்ற தலைவராக இருந்த சேலத்தில் இருந்து வந்த கடிதம் “ஈரோட்டில் சுகாதார வேலைகள் சிறப்பாக நடப்பதையும், பராமரிக்கப்படுவதையும் நேருக்கு நேர் பார்த்தோம். தங்களுடைய சுகாதாரத் துறை அதிகாரியை எங்களுக்கு தர முடியுமா? ” என்று கேட்கிறது. சுகாதார வேலை என்றால் தொழிலாளர் நலனும் இணைந்தது. அது மட்டும் அல்ல, பிளேக் நோய் ஏற்பட்டு மக்கள் அவதியுற்ற போது மருத்துவ சிகிச்சைக்கு உதவியது மட்டும் அல்லாமல் மரணம் அடைந்தவர்களை தனது தோளில் தூக்கிக் கொண்டு போய் அடக்கம் செய்தவர் தந்தை பெரியார். 

சுயமரியாதை இயக்கத்தை தமிழ்நாட்டில் கட்டி அமைத்ததில் தந்தை பெரியாருக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதற்கு நிகரான பங்கு சிந்தனை சிற்பி சிங்காரவேலருக்கு இருக்கிறது என்று பேரறிஞர் அண்ணா எழுதினார். அந்த சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சென்னை நகர மன்ற உறுப்பினராக இருந்தபோது, பாதாள சாக்கடை, கழிவு நீரை, குப்பைகளை அகற்றுவது, இவைகளை செம்மையுறச் செய்தல் , பிச்சைக்காரர் பாதுகாப்பு, ஏழைகளுக்கு (உள்ளதை விட) நல்ல வீடுகளை அமைக்க வழிவகை செய்தல் முதலியவைகளைப் பற்றியே  அதிகம் கேள்விகளைக் கேட்டார். காலரா நோய் ஏற்பட்ட அறிகுறி தோன்றிய உடனே சானிட்டரி இன்ஸ்பெக்டர் (சுகாதார ஆய்வாளர்கள்) தீவிரமாகப் பணியாற்ற ஏற்பாடு செய்தார். சாக்கடை கழிவு, குப்பைகளை, மல ஜலங்களை அகற்றுவது, நகரத்தில் நிலவும் சுகாதார நிலைமையை மேம்படுத்துவது முதலியவைகளில் கவனம் செலுத்துவது, ஆகியவை நகரான்மை கழக இலாகாக்களின் தலையாய கடமையாகும் என்று நகர்மன்றத்தில் முழங்கினார்.

தொழிலாளர் உரிமைக்காக நகர்மன்றத்தில் மட்டுமல்ல, அவர்களை சங்கமாக அணிதிரட்டி, தலைமையேற்று தொடர்ந்து போராடினார் சிந்தனை சிற்பி சிங்காரவேலர். தெருக்கூட்டுவோர் சங்கம், சென்னை நகராண்மைக் கழக ஊழியர்கள் சங்கம், கார்ப்பரேஷன் லேபர் யூனியன் ஆகியவை அவர் வழிகாட்டுதலில்  தொடங்கிய சங்கங்களே!

சிங்காரவேலருக்கும், தந்தை பெரியாருக்கும் உற்ற தோழர், தொழிற்சங்கத்தின் தந்தை என போற்றப்பட்ட – தோழர் சக்கரை செட்டியார் – சென்னை மாமன்ற உறுப்பினராகவும் மேயராகவும் இருந்தார். அக்காலங்களில், “தூய்மை பணியாளர்கள் குறித்து குற்றம் சொல்ல நம்மில் யாருக்கும் தார்மீக உரிமை இல்லை. அவர்கள் செய்யும் வேலையை செய்வதற்கு நாம் தயாராக இல்லாத போது அவர்களை குற்றம் சொல்வதை ஏற்க முடியாது. ஒரே ஒரு நாள் அவர்கள் வாழும் இடங்களில் நீங்கள் இருக்க முடியுமா? ” என்று மாமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அவர்களுடைய ஊதியம், பணி நிலைமைகளை மேம்படுத்துவதற்காக மாமன்றத்திலும் வீதிமன்றத்தில் தொடர்ந்து போராடினார். 

நான்கு முறை சென்னை மாமன்ற உறுப்பினராக இருந்தார் எஸ். கிருஷ்ணமூர்த்தி. காங்கிரசை  எதிர்த்து  சுயேட்சையாக மேயருக்கு போட்டியிட்டார்.அறிஞர் அண்ணா ஆதரித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. வெற்றி பெற்று மேயரானார். 

மக்கள் தன்னை தேடி வர வேண்டாம் என்று பூங்காக்களின் சிமெண்ட் பெஞ்சே  தனது  தங்கும் இடமாக மாற்றிக் கொண்டு பணிபுரிந்தார். எங்காவது சாக்கடை அடைத்துக் கொண்டால், குப்பை குவிந்திருந்தால் தானே நேரில் சென்று களத்தில் இறங்கி விடுவார். அதிகாரிகள் பதறிப் போய் ஓடி வந்து சரி செய்வர். சென்னையில் இவர் நடத்திய குடிசைவாழ் மக்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பேரறிஞர் அண்ணா, ‘குடிசைகள் கோபுரம் ஆகும் ‘ என்று அறிவித்ததின், விளைவு குடிசை மாற்று வாரியம். 

ஒருமுறை மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் துர்நாற்றம் வீசுவதாக முகம் சுளித்தனர். ஆமாம்! கழிவுநீர் அடைப்பை சரி செய்ய இறங்கிய காலோடு மேயர் கிருஷ்ணமூர்த்தி மாமன்ற கூட்டத்திற்கு வந்து விட்டார். இதனைக் கண்டறிந்து மாமன்ற உறுப்பினர்கள் சொன்ன போது, “இங்கு இருப்பவர்களிடம் உள்ள நாற்றத்தை விட இது ஒன்றும் மோசமானதல்ல”  என்று முகத்தில் அறைந்ததைப் போல்  கூறினார். மாமன்றம் அமைதியானது. இவர் தமிழ்நாட்டு தொழிலாளி வர்க்கத்தின் முதல் தொழிலாளர் இதழான “தொழிற்சங்க செய்தி” – ன் முதல் ஆசிரியர் சக்கரை செட்டியாருடன் இணைந்து 1953இல் இந்த இதழைத் தொடங்கினார். (இன்றும் தொடர்ந்து தொழிலாளர் நலன்களுக்காக முழங்கி வருகிறது அந்த இதழ்..) தூய்மை பணியாளர் வாழ்வு மேம்பட, திட்டங்கள் தீட்டி நிறைவேற்றினார். சென்னை வரலாற்றில் மக்கள் மேயர் என்று மக்களால் அழைக்கப்பட்ட ஒரே மேயர் இவர் தான். 

மதுரை மாமன்ற உறுப்பினராக, தொழிற்சங்க தலைவராக இருந்த தோழர் எஸ். பி. ஆண்டி மரணம் அடைந்த போது, அவரது வீடு இருந்த பகுதியில் , தெருக்கள் அனைத்திலும் பல நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் விழுந்து, புரண்டு, கதறி கதறி அழுத காட்சியை நேரில் பார்த்த தோழர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். 

சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்ந்த ஏஐடியுசி யின் மாபெரும் தலைவர் கே .டி.கே தங்கமணி உள்ளிட்ட தலைவர்களோடு இணைந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் அமைச்சராக இருந்த திரு. அன்பில் தர்மலிங்கம் அவர்கள் தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை கலைஞர் ஆதரவோடு மேற்கொண்டார். அவர் அமைச்சராக இருந்தபோதுதான் தூய்மை பணியாளர்கள் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை உள்ளடக்கிய முதல் அரசாணை தமிழ்நாட்டில் வெளிவந்தது. 

இன்றைய முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்கள் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது தான் கால மாற்றத்திற்கு ஏற்ப தொழிலாளர்களின் வேலை அளவு நிர்ணயம் செய்து  அரசாணை வெளியிடப்பட்டது. 

ஆனால், இன்றைய சூழலில் சுயமரியாதை இயக்கம்  வழிகாட்டிய விழுமியங்கள் அனைத்தும் காணாமல் போனதே… ஏன்? தனியார்மயம், காண்ட்ராக்ட் மயம் போன்ற உலகமயத்தின் விளைவுகள் கடைக்கோடியிலும் கடைக்கோடியில் இருக்கிற இத்தொழிலாளிகளின் சுயமரியாதையை, கண்ணியத்தை, வாழ்க்கையை நித்தம் நித்தம் பறித்துக் கொண்டிருக்கிறதே! சாதியமும், வருண தர்மமும் நீடித்திருக்க வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்ட கோட்ஷேயின் சீடர்கள், சமநீதியையும், சமூக நீதியையும் நிலைநாட்ட போராடும் திமுக அரசுக்கு, இது விசயத்தில் அறிவுரை கூறும் அளவுக்கு நிலைமைகள் உள்ளனவே. தமிழகம் மீண்டெழ வேண்டாமா? அதற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவித்ததை போல, நிச்சயமாக, இந்த நிலைமைகளை மாற்ற அவர் சர்வாதிகாரியாக மாறத்தான் வேண்டும்!

சொன்னதைச் செய்வார் என்று நம்புவோம்!

தொடர்புக்கு – 9486362703

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button