இந்தியா

பெரியார் பல்கலைக்கழக தேர்வு: வினாத்தாளில் சாதி தொடர்பான வினா! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கடும் கண்டனம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கூட்டம் புதுடெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகமான அஜாய் பவனில் ஜூலை 15 முதல் 17 வரை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதுகலை பட்டப்படிப்பு வரலாறு பாடத் தேர்வில் சாதி தொடர்பான கேள்வி கேட்கப்பட்டதற்கு கட்சியின் தேசியக் குழு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேசியக் குழு நிறைவேற்றிய தீர்மானம் பின்வருமாறு:

சாதிய முறையை பலப்படுத்துவது, சாதிய வன்மத்தைப் பரப்புவது ஆகிய நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பிற்போக்கான செயலை கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ்நாட்டில் பல்கலைக்கழங்களின் வேந்தராகப் பொறுப்பு வகிக்கும் ஆளுநர் ஆர் என் ரவி இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு, உரிய விசாரணை மேற்கொண்டு, இந்தச் செயலுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கிட வேண்டும் என்று கட்சியின் தேசியக் குழு வலியுறுத்துகிறது.

சாதி தொடர்பான அந்தக் கேள்வி சமூக நீதியைக் கேலிக்குரியதாக்கி உள்ளது. கல்வி என்பது அறிவியல் மனப்பான்மையை வளர்த்து, பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். மனிதர்கள் உருவாக்கிய சமூகப் படிநிலைகளைத் தகர்த்தெறிவதற்கு அறிவியல் மனப்பான்மை முன்தேவையாக உள்ளது. அரசியலமைப்பு ரீதியிலான இந்த உறுதிப்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற வண்ணம் பாடத்திட்டம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உறுதிப்பாட்டிற்கு எதிரான எந்த ஓர் அத்துமீறலும் சாதிய வன்மத்தைப் பரப்பும் உள்நோக்கம் கொண்டதேயாகும்.

சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு தடைகளைக் கடந்து சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களும் கற்பதற்காக ஒன்று கூடும் அறிவுப் புலமாக கல்வி நிலையங்கள் அமைந்திட வேண்டும். சாதி தொடர்பான வினா கேட்கப்பட்டு இருப்பது, மதச்சார்பற்ற செயற்களத்தைச் சேதப்படுத்துவதற்கான மறைமுக மற்றும் வெளிப்படையான முயற்சி ஆகும். சர்ச்சைக்குரிய அந்தக் கேள்வி நச்சியல்பு நிறைந்ததாகவும், ஊறு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கம் கொண்டதாகவும் இருக்கிறது.

இந்தப் பிரச்சனை தொடர்பாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அளித்துள்ள விளக்கம் ஏற்கத்தக்கதாக இல்லை. இந்தப் பெருங்குற்றச் செயலுக்கு, தமிழ்நாட்டில் பல்கலைக்கழங்களின் வேந்தரான ஆளுநர் ஆர் என் ரவி தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தேசியக் குழு குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து சாதிய மற்றும் வகுப்புவாத பிளவுகளைத் தூண்டிவிடும் ஆளுநரின் நடவடிக்கைகளைத் தவிர்த்துவிட்டு, இந்தப் பிரச்னையைப் பிரத்யேகமான ஒரு சம்பவமாகக் கருதிவிட முடியாது. திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயலுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு மீண்டும் வலியுறுத்துகிறது.

இவ்வாறு தேசியக் குழு நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button