பெரியார் சிலை அவமதிப்பு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் – குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
கோவை மாநகரில் உள்ள வெள்ளலூர் பகுதியில் அமைந்துள்ள பெரியார் ஈ.வெ.ரா. சிலைக்கு, கடந்த 08.01.2022 ஆம் தேதி இரவில் சமூக விரோதிகள் செருப்பு மாலை போட்டு, காவிப்பொடி தூவி அவமதித்துள்ளனர்.
கடந்த சில வருடங்களாகவே பகுத்தறிவு, சமூக சீர்திருத்தக் கருத்துகளை முன்னெடுத்து, சமூக நீதி சார்ந்த ஜனநாயகத்திற்காக போராடிய தலைவர்களை இழிவுபடுத்தி, தரம் தாழ்ந்து பேசுவது, மறைந்த தலைவர்களை அவமதிப்பது போன்ற ஆத்திர மூட்டும் செயல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டு மக்களின் உயர்கல்வி உரிமையை பறிக்கும் “நீட்” தேர்வுக்கு விலக்களிக்கும் சட்ட முன் வடிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறும் நடவடிக்கையில் கவனம் செலுத்தாத ஆளுநர் நடவடிக்கை கடுமையான கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் 08.01.2022 ஆம் தேதி கூட்டிய சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கலந்தாலோசித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதே நாளில் இரவில் கோவையில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போட்டு, சமூக நீதி உணர்வாளர்களை ஆத்திரமூட்டி, மக்கள் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியில் சமூக விரோதிகள் ஈடுபட்டிருக்கின்றனர். இது ஏதோ தற்செயலாக, மனநிலை பாதித்தவன் செய்து விட்ட காரியம் அல்ல, திட்டமிட்டு நிறைவேற்றிய சதிச் செயலாகும்.
சட்டம் – ஒழுங்கு நிர்வாகத்திற்கு விடப்பட்ட சவாலாகும். ஜனநாயக சக்திகளை சீண்டி விடும் நோக்கம் கொண்ட வன்மம். சமூக விரோதிகளின் இழிசெயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக் கண்டிப்பதுடன், இது போன்ற நேர்வுகளில் மேலோட்டமான, மென்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, குற்றவாளிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் காவல்துறையின் அணுகுமுறையும் குற்றச்செயல்கள் தொடருவதற்கு காரணமாகும் என்பதை கருத்தில் கொண்டு, மறைந்த தலைவர்களை அவமதிக்கும் இழிசெயலை கொடுங்குற்றமாக கருதி, குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடாமல் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.