பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசிய பா.ஜ.கவின் கேரள மாநில தலைவர் கே சுரேந்திரன் மீது நடவடிக்கை எடுத்திடுக! – இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்தல்
பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசிய பா.ஜ.கவின் கேரள மாநில தலைவர் கே சுரேந்திரன் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தேசிய தலைவர் அருணா ராய் மற்றும் பொதுச் செயலாளர் ஆனி ராஜா கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது பின்வருமாறு:
ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள ஸ்த்ரீ சக்தி சம்மேளன் நிகழ்வுக்கான வரவேற்புக் குழுவை அமைந்திடும் நோக்கத்துடன் கடந்த ஞாயிறு அன்று (26.03.2023) கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற கூட்டத்தைப் பா.ஜ.கவின் கேரள மாநில தலைவர் கே சுரேந்திரன் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள பெண் தலைவர்கள் குறித்து அவர் தரக்குறைவான கருத்துகளைக் கூறினார்.
இன்னும் சில மாதங்களில் ஜி-20 மாநாட்டினை இந்தியா நடத்தவுள்ள நிலையில், கே சுரேந்திரனின் தரக்குறைவான கருத்துகள் தேசத்தின் பெருமை மற்றும் கண்ணியத்தைச் சிதைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
கே சுரேந்திரன் தெரிவித்துள்ள கருத்துகள், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியில் உள்ள பெண்களை மட்டுமின்றி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பெண்களையும் இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்று இந்திய மாதர் தேசிய சம்மேளனம் கருதுகிறது. எனவே, அவரது பெண்கள் விரோத கருத்துகளைக் கண்டிக்கிறோம்.
ஜி-20 அமைப்பிற்கு தலைமையேற்றுள்ள இந்தியாவின் மாண்புமிகு பிரதமராகத் தாங்கள் பொறுப்பு வகித்து வருவதால், கே சுரேந்திரன் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.