பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்பது சரியா?
டாக்டர் இரவீந்திரநாத்
பெண்களின் திருமண வயது உயர வேண்டும். அது பல்வேறு வகையிலும் பெண்களுக்கு உதவிகரமாக இருக்கும்.இதில் மாற்றுக் கருத்து இல்லை.ஆனால், மருத்துவ ரீதியான காரணிகளை முன்வைத்து சாதீய மதவாத சக்திகள், தங்களின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பெண்களின் திருமண வயதை பயன்படுத்த முயல்கின்றன.இது ஏற்புடையதல்ல.
இந்தியப் பெண்களின் சராசரி திருமண வயது 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி 22.1 ஆகும். 1961 ல் 15.7 ஆக இருந்தது படிப்படியாக உயர்ந்து 22.1 ஆகஉயர்ந்துள்ளது.பெண்களின் சராசரி திருமண வயது 22.1 ஆக இருக்கும் பொழுது, எதற்காக 21 வயது என உயர்த்த சட்டம் கொண்டுவர வேண்டும்?
மதவாத, சாதிய சக்திகளின் அரசியல் நோக்கம் இதில் அடங்கியுள்ளது.“முஸ்லீம்களின் மக்கள் தொகை இந்தியாவில் அதிகரிக்கிறது.அதற்கு முஸ்லீம் பெண்களின் திருமண வயது 15 ஆக உள்ளதும் ஒரு காரணம்’’ என சங் பரிவார அமைப்புகள் கருதுகின்றன.எனவே ,திருமண வயதை உயர்த்த வேண்டும் என கருதுகின்றன.
அடுத்து இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் சின் நோக்கம்.ஏற்கனவே ,முத்தலாக் விசயத்தை கையிலெடுத்த மத்திய பாஜக அரசு, தற்பொழுது பெண்களின் திருமண வயதில் கையிலெடுக்கிறது.முஸ்லீம் பெண்களின் திருமண வயது குறித்தும், சங் பரிவாரங்கள் திட்டமிட்ட தவறான பிரச்சாரங்களை செய்கின்றன.
சமூகப் பொருளாதார முன்னேற்றத்தின் காரணமாக முஸ்லீம் பெண்களின் திருமண வயதும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்களை கைகொள்வதும் அதிகரிக்கிறது.உதாரணத்திற்கு முஸ்லீம்கள் அதிகம் வாழும் ஜம்மு காஷ்மீரில்,முஸ்லீம் பெண்களின் சராசரி திருமண வயது 24.7 ஆகும். இந்தியாவிலேயே பெண்களின் சராசரி திருமண வயது இங்குதான் அதிகம்.எனவே,பெண்களின்திருமண வயதை இனி மேலும் சட்ட ரீதியாக உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. அது பல்வேறு மோசமான சமூக, பண்பாட்டு விளைவுகளையே உருவாக்கும்.மோசமான கலாச்சார மாற்றங்களுக்கும் வழி வகுக்கும்.18 வயது முடிந்த 19 வயதில் உள்ள உயர் கல்வி பயிலும் பெண்கள் பெரும்பாலும் இப்பொழுது உடனடியாக திருமணம் செய்து கொள்வதில்லை.படிப்பை முடித்த பிறகே திருமணம்செய்துகொள்கின்றனர்.
ஆண்களை போன்றே பெண்களும் லட்சிய உணர்வோடு,வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளோடு உழைக்கின்றனர்.முன்னேறுகின்றனர்.சாதிக்கின்றனர்.அதற்காக, தங்களின் திருமணங்களை தள்ளிப்போடுகின்றனர்.இந்தப் போக்கும் கூட சில நாடுகளில் மோசமான விளைவுகளை உருவாக்கியுள்ளது.
பெண்களின் திருமண வயது மிக அதிகமாக உயர்ந்துள்ளது.ஜெர்மனியில் பெண்களின் சராசரி திருமண வயது 33.1. ஜப்பானில் 30.5.பிரேசிலில் 30 .அமெரிக்காவில் 27.9 ஆகஅதிகரித்துள்ளது. முஸ்லீம் நாடான ஈரானில் கூட 25.2 ஆக உள்ளது.பல நாடுகளில் பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்க ஆர்வமின்றி உள்ளனர். முதலாளித்துவம் உருவாக்கும் சமூகப் பொருளாதார பாதுகாப்பின்மையே இதற்கும் மிக முக்கியக் காரணம்.பெண்கள் 30 வயதிற்கு மேலும் ,திருமணம் செய்து கொள்ளாததால், குழந்தை பெற்றுக் கொள்ளாததால், அந்நாடுகளின் மக்கள் தொகையில் பிரச்சனைகள் உருவாகின்றன.அதனால், பெண்களை திருமணம் செய்து கொள்ள, குழந்தைகள் பெற்றுக் கொள்ள அரசுகளே ஊக்கப்படுத்துகின்றன.
பெண்களின் சமூகப் பொருளாதார கலாச்சார வாழ்வில் முற்போக்கான மாற்றங்களை செய்வதின் மூலம், இளம் வயதில், அதாவது 19 முதல் 21 வயதுக்குள் திருமணங்கள் செய்து கொள்வதை தவிர்க்கும் நிலையை உருவாக்க முடியும். அதுவே சரியானதாகவும்,சிறந்ததாகவும்,சிக்கல்கள் குறைந்த தீர்வாகவும் அமையும். நம் நாட்டிலும் கூட இது உறுதியாகியுள்ளது.பெண்கல்வி மற்றும் பொருளாதாரம் மேம்பட்ட நிலையில் உள்ள மாநிலங்களில் , பெண்களின் திருமண வயது அதிகரித்துள்ளது. குழந்தைகள் பிறப்பு விகிதமும் குறைவாக உள்ளது.தமிழகம் ,கேரளம் போன்ற மாநிலங்களை உதாரணமாகக் கூறலாம்.
பெண் கல்வியும்,பொருளாதார வளர்ச்சியுமே சிறந்த குடும்பக் கட்டுப்பாடு சாதனமாகவும் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.பெண்களுக்கு தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை,அனைத்து படிப்புகளிலும் இலவச கல்வி வழங்கிட வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் பெண்களின் கல்விக்கட்டணத்தையும் முழுமையாக அரசே எற்க வேண்டும்.இடை நிற்றல் இல்லாமல் தொடர்ந்து படிக்கும் வகையிலான நிலைமைகளை உருவாக்க வேண்டும்.ஒவ்வொரு கட்ட தேர்ச்சிக்குப் பிறகும் அவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கிட வேண்டும்.மாணவிகளுக்கு முழுவதும் இலவசமான விடுதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.பட்டப்படிப்பு முடிக்கும் ஏழை மாணவிகளுக்கு ரூ 1 லட்சம்,பட்டமேற்படிப்பை முடித்தால் ரூ 2 லட்சம் என திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
மிக முக்கியமாக ,பெண்களின் கல்விக்கு எதிராக உள்ள தேசிய கல்விக் கொள்கை -2020 யை கைவிடச் செய்ய வேண்டும். அடுத்து படிப்பை முடித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும்.அரசு மற்றும் தனியார் துறைகளில் அவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.பெண்களுக்கு சமூகப் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான திட்டங்கள் வேண்டும்.இத்தகையை முற்போக்கான நடவடிக்கைகள் மூலம், விருப்பப் பூர்வமாக பெண்கள் ,20 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளும் நிலைமையை உருவாக்க வேண்டும்.அதை விடுத்து சட்டரீதியாக திருமண வயதை உயர்த்துவது சரியல்ல.அவசியமற்ற ஒன்று. சில நீதிபதிகளின் கருத்தை சுட்டிக்காட்டி, பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது அவர்களின் ஹார்மோன்களும்,காதலும் தான் என தமிழகத்தில் சிலர் கூறுவது, பெண்களை கொச்சைப் படுத்தும் செயலாகும்.பெண்களை இதை விட மோசமாக சிறுமைப் படுத்த முடியாது.பெண்களுக்கு முடிவெடுக்கும் திறன் இல்லை.அதற்குக் காரணம் பெண்களின் ஹார்மோன்கள் என ஹார்மோன்கள் மீது தாக்குதல் நடத்துவது அறிவார்ந்த செயல் அல்ல. அதுவும் மருத்துவப் படிப்பை படித்தவர்கள் அது போன்ற வாதங்களை முன்வைப்பது வேடிக்கையாக உள்ளது.
பெண்களின் இளம் வயது திருமணம் என்பது ஒரு சமூகப் பொருளாதார பிரச்சனை.அவர்கள் படிப்பை நிறுத்துவதும் சமூகப் பொருளாதாரப்பிரச்னை சார்ந்த ஒன்றே.அதை ஹார்மோன்களோடும்,காதலோடும் முடிச்சு போடுவது உள்நோக்கம் கொண்டது.
பெண்களின்படிப்பு பாதிப்பது ,இடை நிற்றல் குறித்த தேசிய குடும்ப நல மாதிரி (NFHS) 2015-16 அறிக்கையும், சர்வதேச மக்கள் தொகை அறிவியல் நிறுவன ஆய்வும் தெரவிக்கும் காரணங்கள் என்ன வென்றால்….• 24.8 விழுக்காட்டினருக்கு படிப்பில் விருப்பம் இல்லாமல் போகிறது என்கின்றனர்..• 19.3 விழுக்காட்டினர் ,கல்விக் கட்டணம் அதிகம் என்கின்றனர்.• 14.5 விழுக்காட்டினர் வீட்டில் வழங்கப்படும் ,சம்பளம் இல்லாத வேலைகள் காரணம் என்கின்றனர்.• 7.9 விழுக்காட்டினர் மட்டுமே திருமணம் காரணம் என்கின்றனர்.“குழந்தை திருமணத்தால் பள்ளி இடை நிற்றலைவிட , இடை நிற்றலே குழந்தை திருமணங்களுக்கு மிக முக்கிய காரணமாகின்றது’’ என , பார்ட்னர்ஸ் ஃபார் லா இன் டெவலப் மென்ட் அமைப்பைச் சேர்ந்த மது மேரா தெரிவித்துள்ளார்.
பெண்களின் முன்னேற்றத்திற்கு வறுமையை விட பெரிய தடையாக இருப்பது காதல் தான் என்பதும் தவறான கருத்தாகும்.பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது வறுமையும், இன்றைய வாழ்க்கை நிலைமைகளும் தான் என்பது பல ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது.காதலும்,திருமணமும், பெண்களின் வாழக்கையை சீரழித்துவிடுகின்றன என்பதும் மேம்போக்கான வாதமே.திருமணம் செய்து கொண்ட பெண்கள் வாழ்க்கையில் முன்னேற மாட்டார்களா?அதற்குப் பிறகு அவர்களால் சாதிக்க முடியாதா?முடியும் என நமது பெண்கள் நிரூபித்துள்ளனர்.அவர்களுக்கு மேலும் உதவ, இளம் குடும்பங்களின் பொருளாதார மற்றும் இதர பிரச்சனைகளை தீர்க்க அரசு முயலவேண்டும்.குறிப்பாக சாதி கடந்த திருமணங்களை செய்து கொண்டவர்களின் சமூகப் பொருளாதார பாதுக்காப்பை உத்தரவாதப் படுத்த வேண்டும்.இன்றைக்கு வழங்கப்படுகின்ற நிதி உதவிகளை மேலும் அதிகரிக்க வேண்டும்.அவர்களின் குழந்தைகளுக்கு தனி இட ஒதுக்கீடு கல்வி,வேலைவாய்ப்பில் வழங்கிட வேண்டும்.இளம் பெண்களுக்கு பாலியல் கல்வி, மற்றும் சுகாதாரக் கல்வியை வழங்கிட வேண்டும்.இதை விடுத்து, பெண்கள், சுயமாக சிந்திக்கத் தெரியாதவர்கள்.ஹார்மோன்களால் ஏற்படும் காம உணர்வால் தவறு செய்பவர்கள் போன்று சித்தரிக்கக் கூடாது.பெண்கள் முடிவெடுக்கத் தெரியாதவர்கள்.முட்டாள்கள் என்ற தோற்றதை உருவாக்கக் கூடாது. இது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு.
கொரோனாவால் பொது முடக்கம் நடைமுறைக்கு வந்த பிறகு, 2020 ஆகஸ்ட் 11 வரையில் இந்தியா முழுவதும் 9570 க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் குறித்த புகார்கள் வந்துள்ளன. பல திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன( ஆகஸ்ட் 17 ,டைம்ஸ் ஆஃப் இந்தியா ) பல ஆயிரம் குழந்தைத் திருமணங்கள் கமுக்கமாக நடந்துள்ளன. தமிழகத்திலும் பல மாவட்டங்களில் இவை நடைபெற்றுள்ளன. இவை அனைத்தும் காதல் திருமணங்கள் அல்ல.பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணங்கள் தான். இவற்றிற்கு என்ன காரணம்?பொதுமுடக்கக் காலத்தில் திருமணச் செலவு மிச்சம்.இதனால் ஏழை எளிய குடும்பங்கள் இதை வாய்ப்பாக பயன்படுத்தி, தங்கள் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு,தங்களின் பெண் குழுந்தைகளுக்கு அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்தனர்.இந்த குழந்தை திருமணங்கள் அனைத்தும் ஹார்மோன்களாலும் ஏற்படவில்லை.காதலாலும் ஏற்படவில்லை !குடும்பங்களின் வறுமை நிலைமைகளால் ஏற்பட்டவை என்பதை அறிய வேண்டும்.வறுமை நிலைமையில் உள்ள பெண்கள் மத்தியில் தான் குழந்தை திருமணங்கள் அதிகம் நடப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிவரங்கள் கூறுகிறது.
அடுத்து, வரதட்சணை கொடுமையால் லட்சக்கணக்கான பெண்கள் திருமணமாகாமல் உள்ளனர். ஆண்டு தோறும் 8 ஆயிரம் பெண்கள் ,வரதட்சணை பிரச்சனைகளால் சித்திரவதை கொடுமைகளுக்கு உள்ளாகி இறக்கின்றனர்.இவை எல்லாம் ஹார்மோன்களால் ஏற்பட்டவில்லை. காதலாலும் ஏற்பட வில்லை. பொருளாதாரா பிரச்சனைகளால் ஏற்படுவன.அடுத்து ,அன்பை பெற காதலிக்க வில்லை.பணத்தை குறிவைத்து,சொத்தை குறிவைத்து காதலிக்கின்றனர் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.இதை முற்றிலும் நிராகரித்து விட முடியாது.அப்படியும் சில கயவர்கள் உள்ளனர். ஆனாலும், காதலுக்காக சொத்துக்களையும்,உயிரையும் விடுபவர்களும் உள்ளனர்.ஆயினும் ,இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பில் காதலும் கமாடிட்டி ( வணிகப் பொருள்) ஆகிவிட்டது !அது சரி, ஏற்பாட்டு திருமணங்களில் என்ன நடக்கிறது?முதலில் பார்ப்பது சாதி.அடுத்து பார்ப்பது குடும்பங்களின் பொருளாதார நிலையை.ஏற்பாட்டுத் திருமணங்களே வணிகமாக மாறிவிட வில்லையா?
1848 ல் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையிலேயே ,மார்க்சும் ,ஏங்கல்சும் ,முதலாளித்துவத்தின் கீழ் குடும்ப உறவுகளே,தனிப்பட்ட நபர்களின் உறவுகளே பணப்பட்டுவாடா உறவுகளாக மாறிவிட்டது என்பதை வெட்ட வெளிச்சமாக்கவில்லையா?“மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான சுயநலம் தவிர, பரிவு உணர்ச்சியற்ற ”பணப் பட்டுவாடா” தவிர, வேறெந்த உறவும் இல்லாமல் செய்துவிட்டது……முதலாளித்துவ வர்க்கம், குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிபூர்வ உறவுத்திரையைக் கிழித்தெறிந்துவிட்டது. குடும்ப உறவை வெறும் பண உறவாகக் குறுக்கிவிட்டது” என்ற கம்யூனிஸ்ட் அறிக்கையின் வாசகங்களை படிக்க வேண்டாமா?எனவே, காதலில் மட்டும் இத்தகைய மோசடித்தனங்கள் நடக்கவில்லை.ஏற்பாட்டு திருமணங்களிலும் நடக்கிறது.சொத்துக்காக குடும்பங்களில் கொலைகள் நடப்பது குறையவில்லையே?இவற்றிற் கெல்லாம் ,காரணம் முதலாளித்துவ சமூக அமைப்பே !அந்த அமைப்பை ஒழித்துக்கட்ட வேண்டாமா?உண்மையான அன்பும் ,காதலும் மிளிரும் சோசலிச சமூக அமைப்பையும், கலாச்சாரத்தையும், குடும்பங்களையும், வாழ்க்கை முறையையும் கட்டி எழுப்ப வேண்டாமா?
ஹார்மோன்களையும், காதலையும் சுட்டிக் காட்டி ,சமூகப் பொருளாதார மாற்றத்திற்கான போராட்டங்களிலிருந்து மக்களை திசை திருப்புதல் சரியல்ல. வாக்கு வங்கி அரசியலுக்காக ,மத மற்றும் சாதி அடிப்படையில் மக்களை அணி திரட்டுவதற்காக பெண்களை பகடைக் காய்களாக மாற்றுவது கண்டனத்திற்குரியது.
ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய திருமண வயதை உயர்த்த வேண்டும் என்பதும் அபத்தமானது. 21 வயதை கடந்து திருமணம் செய்து கொண்ட பெண்களிடையேயும் இப்பிரச்சனை அதிகம் உள்ளது.இதைத் தீர்க்க உணவுப் பாதுகாப்பையும்,அனைத்து வயது பெண்களுக்கும் சத்தான ,சரிவிகித உணவு கிடைப்பதையும்உறுதிப்படுத்த வேண்டும்.
ஆணாதிக்க சமுகத்தில் ஆண் குழந்தைக்கு கிடைக்கும் சத்தான உணவு பெண் குழந்தைக்கு கிடைப்பதில்லை.இதை சரி செய்ய வேண்டாமா?பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது, பேறு காலத்தாய்மார்கள் இறப்பு விகிதத்தை குறைக்க உதவும் என்பதும் மேம்போக்கான காரணமே. பெண்களின் திருமண வயது உயர்வது மட்டுமே இப்பிரச்சனையை தீர்த்துவிடாது. இதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.அவை களையப்பட வேண்டும்.கியுபாவில் பெண்கள் 14 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், திருமணத்தை பதிவு செய்து கொள்ள 18 வயது முடிந்திருக்க வேண்டும்.ஆனாலும் அங்கு பெண்களின் சராசரி திருமண வயது 21.3 ஆக உள்ளது. பேறுகாலதாய்மார்கள் இறப்புவிகிதமும்,பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதமும் இந்தியாவைவிட குறைவு.பெண்களின் சராசரி வாழ்நாளும் அதிகம். இதற்கு அந்நாட்டின் சமூகப் பொருளாதார நிலைமையே காரணம். எனவே, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது என்ற போர்வையில், சாதி மற்றும் மத அடிப்படையில் மக்களை மேலும் பிளவுபடுத்த முயல்வது கடும் கண்டனத்திற்குரியது.சாதிய மதவாத சக்திகளின் அரசியல் நோக்கங்களை முறியடிக்க வேண்டும்.