பெட்ரோலிய பொருட்களின் தொடர் விலை உயர்வைக் கண்டித்து ஏப்ரல் 4 முதல் 10 வரை நாடு தழுவிய போராட்ட இயக்கம் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்!
பெட்ரோலிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:
பெட்ரோலிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். கடந்த 10 நாட்களில் தொடர்ந்து 9 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது, அனைத்து மாநிலங்களிலும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயைத் தாண்டிவிடும்; டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை எட்டிவிடும். மும்பையில் வசிக்கும் மக்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 116.72 ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூபாய் 100.94 ம் செலவிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. நாட்டிலேயே மும்பை மாநகரில் தான் பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகமாக உள்ளது.
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலின் போது வாக்காளர்களை ஏமாற்றத்தான் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்த்தப்படாமல் இருந்தது என்பதைப் பொதுமக்கள் உணர வேண்டும்.
சமையல் எரிவாயுவுடன் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் எரிவாயுவின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க அரசாங்கத்திற்குப் பிரச்சனையில் தவிக்கும் மக்கள் மீது சிறிதும் அக்கறையில்லை என்பதைத்தான் தொடரும் விலை உயர்வு நிரூபிக்கிறது. இது போன்ற விலை உயர்வு, அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்கச் செய்யும் என்ற உண்மையைக் கூட மோடி அரசாங்கம் புறந்தள்ளுகிறது.
இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், பெட்ரோலிய பொருட்களின் விலையை அரசாங்கமே தீர்மானிக்கும் முறையைத் திரும்பக் கொண்டு வர வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.
இந்த விஷயத்தில் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு, அன்றாட வாழ்வில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களின் விருப்பத்திற்கு விட்டுவிட முடியாது என்பதை அந்த நிறுவனங்களுக்கு உணர்த்த வேண்டும்.
பெட்ரோலிய பொருட்களின் இந்தத் தொடர் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதிலும் ஏப்ரல் 4 முதல் 10 வரை ஒரு வார காலத்திற்கு தொடர் போராட்ட இயக்கங்களைக் கட்சி அமைப்புகள் தனித்தும், வாய்ப்புள்ள இடங்களில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்தும் நடத்துமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு அறைகூவல் விடுக்கிறது.
இவ்வாறு தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.