பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறுக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
ஏழை எளிய மக்களைக் கடுமையாக பாதிக்கக்கூடிய பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறுக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
பெட்ரோலியப் பொருட்களின் கடும் விலை உயர்வை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பதுடன், விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இது குறித்து கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
அனைத்து பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை, குறிப்பாக சமையல் எரிவாயு 50 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு வாரங்கள் முடிவதற்குள் மார்ச் 22, 2002 அன்று ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க அரசாங்கம் விலை உயர்வை அறிவித்து இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக இல்லை. இந்த விலை உயர்வு காரணமாக மார்ச் 22, 2022 முதல் ஒரு சமையல் எரிவாயு உருளையின் விலை ரூபாய் 949.50 ஆக அதிகரிக்கும்.
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விற்பனை விலை டெல்லியில் 80 காசுகள் அதிகரிக்கப்பட்டு, பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 96.21, டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 87.47 என்று உயர்ந்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் மார்ச் 20 அன்று பல்க் டீசல் விலையை லிட்டருக்கு ரூபாய் 25 உயர்த்தி இருப்பதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு காரணமாக, ஏழை எளிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட இதர அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயரும். எனவே, துன்பங்களை எதிர்கொண்டு வரும் வெகுமக்களை மேலும் பாதிக்கக்கூடிய இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.