புதுடெல்லி ஜஹான்கீர்புரியில் அநீதிக்கு எதிராக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள்
புதுடெல்லியில் உள்ள ஜஹான்கீர்புரியில் சட்டத்திற்கு புறம்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவையும் தூக்கியெறிந்துவிட்டு ஏழை மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. அவர்களின் வீடும், வாழ்வாதாரமும் பறிபோயுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மக்களைச் சந்திக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் குழு இன்று (22.04.2022) சம்பவ இடத்திற்கு விரைந்தது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் குழுவில் பொதுச் செயலாளர் டி.ராஜா, மாநிலங்களவை உறுப்பினர் பினாய் விஸ்வம், பல்லப் சென் குப்தா மற்றும் ஆனி ராஜா ஆகியோர் இடம்பெற்றனர். இக்குழு சம்பவ இடத்திற்குச் சென்ற போது, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க போலீசார் அனுமதி மறுத்தனர். பாதிக்கப்பட்ட மக்களின் துன்ப துயரங்களில் அவர்களுடன் தோளோடு தோள் நிற்பவர்கள் கம்யூனிஸ்டுகள். அரசியல் கட்சிகள் மக்களுக்கு கடமைப்பட்டவர்கள் என்று டி ராஜா உள்ளிட்ட தலைவர்களின் உறுதியான வாக்குவாதம் காரணமாக, போலீசார் பின்வாங்கினர்.
பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய டி ராஜா, எந்தச் சட்டத்தின் கீழ் ஏழைகளின் வீடுகள் இடிக்கப்பட்டன என்று கொதிப்புடன் கேள்வி எழுப்பினார். டெல்லி போலீஸ் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், வெறுப்புணர்வு அரசியலை முறியடிக்கவே நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்று கூறினார்.