பிற மாநிலச் செய்திகள்
பஞ்சாப்
மன்னிப்பு கேள்” : பஞ்சாபில் கங்கனாவின் கார் முற்றுகை
பஞ்சாப் சென்ற நடிகை கங்கனாவின் காரை வழிமறித்த விவசாயிகளின் பெருந்திரள், விவசாயிகள் குறித்து தவறாக பேசியதற்காக மன்னிப்பு கேட்கும்படி கோரியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் போராடும் விவசாயிகளை ”காலிஸ்தான் தீவிரவாதிகள்” என்று விமர்சித்திருந்தார்.. மேலும், இந்த சட்டங்களை ரத்து செய்யப்படுவதையும் விமர்சித்தார். பஞ்சாபியர்களையும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்றார். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இமாச்சலப் பிரதேசம் சென்று விட்டு கங்கனா, காரில் வந்தபோது, பஞ்சாப் மாநிலம், ரூப்நகர் மாவட்டத்தில் கிராத்பூர் சாஹிப் அருகே அவருடைய காரை விவசாயிகள் வழி மறித்தனர். ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் காரை செல்லவிடாமல், விவசாயிகள் குறித்து தவறான கருத்து கூறியதற்காக மன்னிப்பு கேட்கும்படி கங்கனாவிடம் வலியுறுத்தினர். அவர்களிடம் கங்கனா பேச்சுவார்த்தை நடத்தியும் யாரும் அவர் செல்வதற்கு அனுமதிக்க வில்லை.
அரை மணி நேரம் கடந்த நிலையில் அங்கு வந்த போலீசார், விவசாயிகளிடம் சமாதானம் பேசி காரை விடுவிடுத்தனர். அதன் பிறகே கங்கனா காரில் அங்கிருந்து செல்லமுடிந்தது.
டெல்லி
கடந்த ஆண்டில் 5579 விவசாயிகள் தற்கொலை
கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 5579 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த தகவலை மத்திய வேளாண்அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிபரங்களின் படி கடந்த 2019 ஆண்டில் 5957 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், 2020 ஆம் ஆண்டில் 5579 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஃ அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 2567 விவசாயிகளும், கர்நாடாக வில் 1072 விவசாயிகளும், தமிழகத்தில் 79 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்த தகவலை தெரிவித்த வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர், டெல்லியில் விவசாயிகள் நடத்திய 1 ஆண்டுக் கால போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் எண்ணிக்கை பற்றிய விபரம் இல்லை என்றும் அதனால், இழப்பீடு வழங்கும் பிரச்சினை எழவில்லை என ஆணவமாக மக்களைவில் தெரிவித்தற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் அவருக்கு கண்டனம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
மகத்தான தலைவர் பர்வானா நினைவு மணிமண்டபம் திறப்பு
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரில் வங்கி ஊழியர்களின் மகத்தான தலைவர் ஹெச்.எல்.பர்வானா நினைவாக ” பர்வானா பவன்” என்ற நினைவு மணிமண்டபம் திறப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
கிழக்கு மகாராஷ்டிரா வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி பணியாளர்கள், ஏஐடியூசி அமைப்புக்களின் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
ஏஐடியூசி அகில இந்தியப் பொதுச் செயலாளர் அமரிஜித் கௌர் பர்வானா பவன் நினைவு கட்டிடத்தைத் திறந்து வைத்தார் .நினைவு மண்டபத்தில் அமைந்துள்ள, மறைந்த வங்கி ஊழியர் தலைவர் தராகேஸ்வர் சக்ரவர்த்தி பெயரில் அமைந்துள்ள பொது அரங்கிளை ஏஐபிஇஏ தலைவர் ராஜன்நகர் திறந்து வைத்தார்.
ஏஐபிஇஏ பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம், மறைந்த தலைவர் ஏ.பி.பரதன் நினைவு சிலையை திறந்து வைத்தார்.
முன்னதாக பர்வானா பவன் நினைவு இல்லத்தைத் திறந்து வைத்து ஏஐடியூசியின் அகிலஇந்திய பொதுச் செயலாளர் அமர்ஜித் கவுர் பேசுகையில்,” அனைத்துத் தொழிற்சங்கங்களுக்கு மூலமாக விளங்குவது ஏஐடியூசி பேரியக்கம் தான். செறிவான ஆழமான விரிவான பரந்த போராட்ட வரலாற்று மரபு கொண்ட இயக்கம்தான் ஏஐடியூசி. இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் வீறுகொண்டு பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து வீரச் சமர் புரிந்த இயக்கம்தான் ஏஐடியூசி.”
”ஏஐடியூசி பேரியக்கத்தின் தலைமைப் பொறுப்புக்களில் இருந்து பேரியக்கத்தை கட்டி அமைத்தவர்களில் ஜவஹர்லால்நேரு, லாலா லஜபதிராய், சுபாஷ் சந்திர போஸ்,வி.வி.கிரி போன்ற மகத்தான தலைவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.”
தோழர் எச்.எல்.பர்வானாவும், தோழர் பிரபாத் காரும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தங்களை ஆட்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், வங்கி ஊழியர்களையும் அமைப்பு ரீதியாக கொண்டுவருவதில் அரும்பாடுபட்டனர். தனக்கென ஒரு வீடு இல்லாத நிலையில், இன்றைய தினம் வங்கி பணியாளர் ஒவ்வொரும் வீடு காண பாடுபட்ட தோழர்தான் எச் எல் பர்வானா.
ஆனால் ரத்தத்தால் அளப்பரிய தியாகத்தால் பெறப்பட்ட சுதந்திரத்தின் சொத்துக்களான பொதுத் துறை நிறுவனங்களையும் அதன் உடைமைகளையும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கும் ஆட்சி தற்போது மத்தியில் நடைபெறுகிறது..
எந்த திசைவழியில் உழைக்கும் மக்கள் செல்ல வேண்டும்என்பதை நடந்து கொண்டிருக்கும் மகத்தான விவசாயிகள் போராட்டம் வழி காட்டியுள்ளது. உழைக்கும் மக்களின் உரிமைகளை காத்திட அனைத்து தொழிற்சங்கங்களும் பேதம் பாராது ஒன்றிணைந்து ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராட வேண்டியது காலத்தின் கட்டாயம்” என்று ஏஐடியூசி பொதுச் செயலாளர் அமர்ஜித் கௌர் எழுச்சியுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய ஏஐபிஇஏ பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தனது உரையில், தகுந்த முறையில் மகத்தான தலைவர் எச்.எல். பர்வானாவுக்கு நினைவு இல்லம் கட்டி உரிய மரியாதை செலுத்திய நாக்பூர் நகர மக்களை பாராட்டுவதாகக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சி சரியான நேரத்தில் அதாவது விவசாயிகள் தங்களுடைய ஓராண்டு காலபோராட்ட வெற்றி நாளான இந்த தினத்தில் பர்வானா பவன் நினைவு இல்லத் திறப்பு விழா நடைபெறுவது சாலப்பொருத்தமானது என்றும் குறிப்பிட்டார். மேலும் மிகப் பொருத்தமான முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் இந்த மையக் கூடத்திற்கு மறைந்த தலைவர் ஏ.பி.பரதன் பெயரைச் சூட்டியிருப்பது கண்டு மகிழ்ச்சி அடைவதாக சி.எச்.வெங்கடாச்சலம் கூறினார்.
“வங்கிஊழியர்களுக்காக மட்டும் பர்வானா பாடுபடவில்லை. உழைக்கும் மக்கள் அவர்கள் எந்தப் பகுதியாக இருந்தாலும் அவர்கள் நலனுக்காகப் பாடுபட்ட மகத்தான தலைவர் பர்வானா. ரயில்வே தொழிலாளர்களுக்கு ஆதரவாக வங்கி ஊழியர்களை வேலைநிறுத்தம் மேற்கொள்ளச் செய்தது தோழர் பாவானாதான்.“
“பர்வானா மறைந்த செய்தியை மறுநாள் பத்திரிக்கைகள் ஏதும் பிரசுரம் செய்ய இயலவில்லை. காரணம் அனைத்துப் பத்திரிக்கைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் நலனுக்காகப் பாடுபட்ட தலைவன் தோழர் பாவானாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தவும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதால். இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இந்திய வரலாற்றில் காணப் பெறதாக அரிதினும் அரிதாக அவதானிக்கப்பட்டது“. என்று சி.எச்.வெங்கடாச்சலம் முத்தாய்ப்பாக தனது உரையில் குறிப்பிட்டார்.
முகவை பூபேஷ்