பிறருக்கு உதவி செய்து வாழனும் எனும் எண்ணமே நம்மை மேலும் பல ஆண்டுகள் வாழ வைத்திடும் – புத்தக வெளியீட்டு விழாவில் இரா நல்லகண்ணு பேச்சு !
செய்தித்தொகுப்பு: இதழாளர் எஸ். இசைக்கும்மணி
சென்னை: பிறருக்கு உதவி செய்து வாழனும் எனும் நல்ல எண்ணமே நம்மை மேலும் பல ஆண்டுகள் வாழவைத் திடும். தனது நேர்மையான நாணயமான செயல்பாடுகளால் சிறப்பான சேவைகளை எல்லாம் மலைச்சாமி தனது பதவி காலத்தில் எப்படி நிறைவேற்றி இருக்கிறார் என்பதை தான் அய்யாசாமி தனது நூலில் எழுதி சிறப்பு சேர்த்துள்ளார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் இரா நல்லகண்ணு மலைச்சாமி பற்றிய நூலை வெளியிட்டு பாராட்டி பேசினார்.
க அய்யாசாமி எழுதிய “மக்கள் சேவையில் க.மலைச்சாமி ஐ.ஏ.எஸ்” என்னும் நூல் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூர் சிஐடி காலனி யிலுள்ள “கவிக்கோ” மன்றத்தில் மார்ச் 26 ஞாயிறு அன்று நடந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ் .இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தகைசால் தமிழரும், இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவருமான இரா. நல்லகண்ணு நூலை வெளியிட, மலைச்சாமியின் புதல்வி திருமதி மலர்விழி முதல் பிரதியை பெற்றுக் கொண்டு சிறப்பித்தார்.
இதழாளர் இசைக்கும்மணி முன்னிலையில் நடைபெற்ற விழாவில், சமூக ஆர்வலரும் திரைப்பட நடிகரு மான இராஜேஷ் , ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தா. சவுண்டையா, தமிழ் செம்மல் யு. எஸ் .எஸ் .ஆர். நடராஜன், இதய நோய் நிபுணர் மருத்துவர் வி. சொக்கலிங்கம், கவிஞர் திருவை பாபு உள்ளிட்டோர் வாழ்த்து ரைத்து பேசினர்.
நூலை வெளியிட்டு நல்லகண்ணு பேசியதாவது: மக்கள் சேவகர் மலைச் சாமி பற்றி அய்யாசாமி எழுதியிருக்கும் நூல் அவரைப் போல பலருக்கும் பலப்பல வகையில் உதவி செய்ததை எல்லாம் எடுத்துச் சொல்லும் விதமாக இருக்கிறது.
இங்கு பேசியவர்கள் எல்லாம் அவரவர் அனுபவங்களை விவரமாக எடுத்துச் சொல்லியதிலிருந்தும் அதை அறிய முடிகிறது; மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
பிறருக்கு உதவி செய்து வாழனும் எனும் எண்ணமே நம்மை மேலும் பல ஆண்டுகள் வாழவைத்திடும். தனது நேர்மையான செயல்பாடுகளால் சிறப்பான சேவைகளை மலைச்சாமி தமது பதவி காலத்தில் எப்படியெல்லாம் நிறைவேற்றி இருக்கிறார் என்பதைத்தான் அய்யாசாமி எழுதியுள்ளார்.
அய்யா மலைச்சாமி போல அரசு உயர் அதிகாரிகள் நிர்வாகத்தை சீரமைத்து மக்கள் பணியாற்றிட முன் உதாரணமாக இருந்திட வேண்டும் . நாணயம், தைரியம், மனிதநேயம் ஆகியவையே மலைச்சாமி அவர்களின் குணாம்சங்களாக இருந்திருக்கிறது. அத்த கைய மலைச்சாமியின் சிறப்பம்சங்களை பெருமைகளைத்தான் அய்யாசாமி தனது எழுத்தின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
மக்களை மேம்படுத்துவதற்கான வாழ்க்கையை அவர் வாழ்ந்து காட்டி யிருக்கிறார். பிறருக்கு வழிகாட்டியாக அவரது வாழ்க்கை இருந்துள்ளது. அவரது நேர்மையான நாணயமான வாழ்க்கையைப் பற்றி அவருடன் பணியாற்றிய சக அதிகாரிகளும், பழகிய குடும்ப நண்பர்களும் இங்கு பாராட்டி பேசியிருப்பதை நாம் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .
அவர் பிறந்து வளர்ந்த சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் அண்டக்குடி பகுதிகளில் எல்லாம் நான் போய் வரும்போது “அறிவைக் கூர்மைப் படுத்துங்கள் ” அய்யா மலைச்சாமி போல் வாழ்ந்து காட்டுங் கள் என்றே அங்குள்ள மக்களிடம் எடுத்து சொல்லி பேசி வருவேன். அதைத்தான் அய்யாசாமி தனது நூல் மூலம் எடுத்துரைத்து மலைச்சாமிக்கு சிறப்பு சேர்த்துள்ளார் என நல்லகண்ணு பேசினார்.
நூலாசிரியர் க. அய்யாசாமி வாழ்த்துரைத்த அனைவருக்கும் பயணாடை அணிவித்து, சிறப்பித்து, ஏற்புரை வழங்கி பேசினார்.
ஏ.ஐ.டி.யு.சி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் இரா. துரைசாமி வரவேற்புரை வழங்கி நிகழ்வை ஒருங்கிணைத்திட்டார். அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகி வ.மோகனகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.
அய்யா மலைச்சாமி குடும்பத்தினர் உட்பட இலக்கிய ஆர்வலர் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.