பிரேசில்: ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிரான வெகுமக்கள் போராட்டம் வெடிக்கட்டும்! – பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்!
தென்னமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் போல்சோனாரோவை 2% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்நாட்டின் அதிபராகப் பதவி ஏற்றார் இடதுசாரி தலைவரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா. இதன்மூலம் பிரேசிலில் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வந்த வலதுசாரி தலைவர் போல்சோனாரோவின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
இடதுசாரி தலைவரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, தொழிற்சங்கத் தலைவராக இருந்தவர். பிரேசிலின் அதிபராக 2003 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் பதவி வகித்தவர் சில்வா. 2022-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போல்சோனாரோவை வெற்றிகொண்டு மூன்றாவது முறையாக அதிபராகப் பொறுப்பேற்றார். தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளாமல், போல்சோனாரோ ஆதரவுடன் வலதுசாரி சக்திகள் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தன.
இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு லுலா டா சில்வாவின் வெற்றியை எதிர்த்து போல்சோனாரோவின் வலதுசாரி வன்முறையாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (08.01.2023) பிரேசில் நாடளுமன்றம், உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அரசாங்க அலுவலக கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறை நடவடிக்கைகள் அனைத்தும் இணையதளங்களில் காணொலிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இந்த வன்முறை நடவடிக்கைகளை உலகம் முழுவதிலுமுள்ள இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் வன்மையாகக் கண்டித்து வருகின்றன. இந்த அசாதாரண சூழல் குறித்து பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (08.01.2023) முன்னாள் அதிபர் ஜெயர் போல்சோனாரோவின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசாங்க கட்டிடங்களை முற்றுகையிட்டு, கைப்பற்ற முனைந்தனர். வன்முறை சம்பவங்களைத் தூண்டிவிட்டு ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட முயன்றனர்.
பிரேசிலில் உள்ள தீவிர வலதுசாரி சக்திகளின் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்கு வணிகத்துறையில் உள்ள பெரும் நிறுவனங்களின் நிதி ஆதரவு உள்ளது; இராணுவம் மற்றும் காவல்துறையின் சில பிரிவுகளும் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக இயங்கி வருகின்றன.
தீவிர வலதுசாரி சக்திகள் தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்க மறுத்து, ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை மிகவும் வெளிப்படையாக சமூக ஊடகங்களில் மேற்கொண்டு வருகின்றன.
தலைநகர் பிரேசிலியாவில் உள்ள காவல்துறையினரின் சில பகுதியினரும், வலதுசாரி வன்முறையாளர்களுக்கு ஆதரவாக இருந்ததைத் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் உள்ள காணொலிகள் புலப்படுத்துகின்றன. எதிர்பார்க்கப்பட்ட இந்த வன்முறை நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்குப் போதுமான பாதுகாப்பு படையினர் நிறுத்தப்படவில்லை. குறைவான அளவில் இருந்த காவல்துறையினரும் வன்முறையாளர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டனர். சுமார் 100 பேருந்துகளில் வலதுசாரி வன்முறையாளர்கள் தலைநகரம் நோக்கி வருகிறார்கள் என்ற தகவலும் அங்குள்ள அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தது.
தேர்தலில் லுலா டா சில்வா வெற்றிபெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைகள் வெளிப்படையாகவே பிரேசிலியா நகரில் டிசம்பர் 24 அன்று திட்டமிடப்பட்டன. போல்சோனாரோ அரசாங்கத்தின் இறுதி நாளன்று கூட, பிரேசிலியா விமான நிலையத்திற்கு அருகில் ஒரு பீரங்கி வாகனத்தை வெடிக்கச் செய்வதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. இராணுவ தலையீட்டுக்குச் சாதகமான ஒரு சூழலை உருவாக்குவதற்காகவே இது போன்ற குழப்பங்கள், வெறுப்புணர்வு, அரசாங்க அமைப்புகளுக்கு இடையே மோதல் ஆகியன திட்டமிடப்பட்டன.
ஜனநாயக அமைப்புகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுவதாகப் பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். இத்தகைய வன்முறை நடவடிக்கைகளுக்கு ஆதரவாக உள்ள தலைவர்கள் மற்றும் நிதி உதவி செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்திட வேண்டும்.
நவீன பாசிச மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக இடதுசாரி கட்சிகளும், ஜனநாயக சக்திகளும், வெகுமக்கள் இயக்கங்களும் ஒன்றிணைந்து, உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று இன்றைய சூழல் வலியுறுத்துகிறது. எனவே,
ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரம், பொதுமக்களை அணிதிரட்டுவது ஆகியவை குறித்து விவாதிக்க இடதுசாரி மற்றும் இதர முற்போக்கு அரசியல் கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் வெகுமக்கள் போராட்ட இயக்கங்களை அனைத்து மாநிலங்களிலும் நடத்திட வேண்டும்.
ஜனநாயகத்தைப் பாதுகாத்திட, ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகப், பரந்துபட்ட, மாநில அளவிலான சிறப்பு கூட்டங்களை நடத்திட வேண்டும்.
இவ்வாறு பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.