பிரிட்டன் இரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் – பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பு
சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் படைத்த நாடு பிரிட்டன் என்று வரலாற்று பதிவு உண்டு. ஆனால், “வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறு” என்பதை மீண்டும் முரசறைந்து முழங்குவது போல் பிரிட்டன் தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட நடவடிக்கைகள் அமைந்து வருகிறது.
வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரிட்டனில், கடந்த ஆகஸ்ட் மாதம் 18 அன்று பிரிட்டன் நாட்டு இரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கு முன்னதாக, ஜூலை மாதத்திலும், 30 ஆம் நாள் அன்று 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பிரிட்டனில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, பல தசாப்தங்களில் கண்டிராத அளவிற்கு, பணவீக்கம் அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வு, ஊதியக் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இரயில்வே உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளைச் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்நிலையை மிகவும் மோசமாகப் பாதித்து வருகின்றது.
இந்தச் சூழலில், பிரிட்டன் இரயில்வே தொழிலாளி வர்க்கம் தொடர்ச்சியாகப் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அண்மையில், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற இரயில்வே வேலை நிறுத்தப் போராட்டமும் நடைபெற்றது. வார இறுதியில் நடைபெற்ற இப்போராட்டத்தால் பிரிட்டன் நாட்டின் இரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது; பல பகுதிகளில் இரயில் சேவை முற்றிலுமாக முடங்கியது.
இரயில்வே துறை மட்டுமின்றி இதர தொழில் துறைகளைச் சார்ந்த தொழிலாளர்களும் ஊதிய உயர்வு, மேம்பட்ட பணிச்சூழல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டக் களம் கண்டு வருகிறார்கள்.
“தீர்மானகரமான பலன் ஏதுமற்ற ஒப்பந்தங்கள் மூலமாக தொழிலாளி வர்க்கத்தை ஏமாற்றும் முயற்சிகளை இனிஒருபோதும பொறுத்துக் கொள்ள முடியாது” என்று இரயில்வே போக்குவரத்துச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மைக் லிஞ்ச் கருத்துத் தெரிவித்துள்ளார்.