தமிழகம்

பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் 1000 பேர் பங்கேற்க அனுமதி

சென்னை,பிப்.4- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் 1000 பேர் கலந்து கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தேர்தல் காலங்களில் கொரோனா பெருந்தொற்று பரவாமல் இருக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- சாலை நிகழ்ச்சிகள் நடத்துதல், பாதயாத்திரை, சைக்கிள் , மோட்டார் வண்டிகள் ஊர்வலம் ஆகியவை 11 பிப்ரவரி 2022 வரை தடை செய்யப்படுகிறது. அரசியல் கட்சிகளின் ஊர்வலம், குறிப்பிட்ட வேட்பாளர்கள் அல்லது தேர்தல் தொடர்புடைய எந்த ஒரு குழுவும் ஊர்வலங்களாக செல்ல 11.2.2022 வரை அனுமதி கிடையாது.

இருப்பினும் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றும் அடிப்படையில், அவ்வப்போது வாக்கு சேகரிக்கும் காலத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அப்போதைய நிலையை கருத்தில் கொண்டு பேரணி நடத்த மீள ஆய்வு செய்யும். நியமிக்கப்பட்ட திறந்த வெளி மைதானத்தில் அரசியல் கட்சி அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சம் 1000 நபர்கள் அல்லது கூட்ட திடலின் கொள்ளளவிற்கு 50 விழுக்காடு மக்கள் அல்லது அவற்றில் குறைவான எண்ணிக்கையுடன் கூட்டம் நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது. உள் அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் அதிகபட்சம் 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் அல்லது உள் அரங்க கூட்டத்தின் கொள்ளளவை பொறுத்து 50 விழுக்காடு நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படும். உள்ளரங்குக் கூட்டம் நடத்தப்படும் போது மாவட்ட தேர்தல் அலுவலரால் தேர்தலின் போது கொரோனா தடுப்பு தொடர்பான பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட தொடர்பு அலுவலரிடமிருந்து உரிய சான்று வழங்குவதை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் நபர்களின் எண்ணிக்கை வரையறையை உயர்த்தி பாதுகாவலர்கள் நீங்கலாக 20 நபர்கள் அனுமதிக்கப்படுவர். தேர்தல் நடவடிக்கைகளின் போது, அரசியல் கட்சிகளும், போட்டியிடும் வேட்பாளர்களும் மற்றும் வாக்காளர்களும், பொதுமக்களும் கொரோனா கட்டுப்பாடு தொடர்பான நடத்தை முறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மற்றும் மாதிரி நடத்தை விதிமுறைகளை இணக்கமாக கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும். கொரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள “உள்ளாட்சித் தேர்தல் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கொரோனா தொற்று பரவல் இல்லாத தேர்தலாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடத்திட அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும், பத்திரிக்கையாளர்களும், பொதுமக்களும் அனைத்து வகையிலும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button