பிப்ரவரி 14 ‘பசு தழுவல் நாள்’ அறிவிப்பைத் திரும்பப் பெறுக! – தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வேண்டுகோள்
பசு தழுவல் நாள் அறிவிப்பை ஒன்றிய அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஒன்றிய அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து இவ்வமைப்பின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் த.அறம் வெளியிட்டுள்ள ஊடங்களுக்கான செய்தி பின்வருமாறு:
உலகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதியை ‘காதலர் தினம்’ ஆக இளைஞர்களும், இளம் பெண்களும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த தினத்தை உலகம் முழுவதும் உள்ள, இளைஞர்களும், யுவதிகளும் தங்களது காதலை, வெளிப்படுத்தும் நாளாகப் பயன்படுத்தி மகிழ்கின்றனர். இது பிற்போக்கு சக்திகளுக்கு எரிச்சலைத் தருகிறது.
இந்தியாவில் சங்பரிவார அமைப்புகளும் காதலர் தினத்தை வெறுக்கின்றன. அத்தினத்திற்கு எதிராகச் செயல்படுகின்றன.
ஏனெனில், காதல் சாதி கடந்த கலப்புமணங்களை அதிகரிக்கச் செய்கிறது. கலப்புமணங்களால் ஏற்படும் சாதி கலப்பு, வர்ணாஸ்ரம தர்மத்தை அடித்து நொறுக்கும் மாபெரும் ஆயுதமாகத் திகழ்கிறது.
எனவே, ” வர்ணக் கலப்பு கூடாது, சனாதன தர்மம் தொடர்ந்து நீடிக்க வேண்டும், சாதிய ஏற்றத்தாழ்வு தொடர்ந்து நீடிக்க வேண்டும் ” என சங்பரிவார அமைப்புகள் காதலர் தினத்தை வெறுக்கின்றன.
இந்தியாவில் ,சாதி கடந்த கலப்புத் திருமணங்கள் ,பெரும்பாலும் காதல் திருமணங்களாகவே உள்ளன. எனவே, காதல் என்றாலே, சங்பரிவார அமைப்புகளுக்கு கசப்பாக இருக்கிறது; எரிச்சல் ஊட்டுகிறது; ஆத்திரப்பட வைக்கிறது.
ஆகவே, இவ்வமைப்புகள் காதலர் தினத்தைக் கொச்சைப்படுத்துகின்றன.
காதலர் தினத்தன்று காதலர்களைத் தாக்கும் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுகின்றன.
இந்நிலையில், ஒன்றிய அரசின் இந்திய விலங்குகள் நல ஆணையம், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்ரவரி 14ஆம் தேதியை ‘பசு தழுவல் நாள்’ ஆக அனுசரிக்குமாறு, இந்திய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது உள்நோக்கம் கொண்டது.
காதல் என்பது சாதி,மதம்,இன,மொழி பேதங்களைக் கடந்தது . மனித குலத்திற்கு பொதுவானது. இந்தக் காதல் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து மனிதர்களை இணைக்கிறது.
“ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!” என , உலக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் மகாகவி பாரதியார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
காதலர் தினத்தைக் கொச்சைப்படுத்தும் நோக்கில், காதலர் தினத்திற்கு மாற்றாக ,”பசு தழுவல் நாளை ” முன்னிறுத்துகிறது ஒன்றிய அரசு.
வேதகால கலாச்சாரம் அழியும் நிலையில் இருக்கிறது என்றும், அதற்கு மேற்கத்திய கலாச்சாரத்தின் வளர்ச்சியே காரணம் என்றும், மேற்கத்திய கலாச்சாரத்தின் வீச்சானது இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மறக்கடித்து விட்டது என்றும் இந்திய விலங்குகள் நல வாரிய ஆணையத்தின் செயலாளர் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இது அதிர்ச்சியளிக்கிறது.
எந்தப் பண்பாடும், கலாச்சாரமும் நிலையானதல்ல. சமூகப் பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப, உலகம் முழுவதும் கலாச்சார,பண்பாட்டு மாற்றங்கள் மிக வேகமாக ஏற்பட்டு வருகின்றன. பண்பாட்டுக் கலப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால், தகவல் தொழில்நுட்பப் புரட்சியால், போக்குவரத்து துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால் , உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டது. இது மனிதகுலத்திற்கே பொதுவான, உலகளாவிய பண்பாட்டையும் உருவாக்கி வருகிறது. இது தவிர்க்க முடியாத ஒன்று.
காதலைக் கொண்டாடுவது உலகம் முழுவதும் பல்வேறு பண்பாடுகளில் இருந்துள்ளது. தமிழர் பண்பாட்டிலும், சங்க காலம் தொட்டு காதலும், வீரமும் அடிப்படை பண்புகளாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளது .
காதல் நமது பண்பாட்டிற்கு எதிரானதல்ல. எனவே, காதலை அந்நியக் கலாச்சாரம் போல் சித்தரிப்பது சரியல்ல.
எந்தவித, அறிவியல் மனப்பான்மையும் இல்லாமல், ஒன்றிய அரசின், ஒரு ஆணையத்தின் செயலாளர் இந்த அறிக்கையை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அண்மையில், தோல் கழலை நோயால் இந்தியா முழுவதும் ஏராளமான கால்நடைகள் மரணமடைந்தன. இந்தியாவின் ஒட்டுமொத்த பால் உற்பத்தி 20 விழுக்காடு குறைந்துள்ளது.
இவற்றை எல்லாம் சரி செய்ய , இந்திய விலங்குகள் நல ஆணையம், முயல வேண்டும். அதை விடுத்து, கலாச்சாரம் மற்றும் பண்பாடு விஷயங்களில் தலையிடுவதைக் கைவிட வேண்டும்.
‘பசு தழுவல் நாள்’ குறித்த அறிவிப்பை, இந்திய விலங்குகள் நல ஆணையம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக் கொள்கிறது.
இவண்,
மரு. த.அறம்
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
94432 44633,
takaepe2022@gmail.com