தமிழகம்

பாலாற்றில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார் இரா.முத்தரசன்

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டமான வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை காரணமாக பாலாற்றில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன், மாநில துணைச்செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன் ஆகியோர் பார்வையிட்டனர். உடன் மாவட்ட செயலாளர் தோழர் A.C.சாமிக்கண்ணு, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் முன்னாள் சட்மன்ற உறுப்பினர் G.லதா,M.சுந்தரேசன்,N.நந்தி, S.R.தேவதாஸ், K.P.மணி,வேலூர் மாநகர செயலாளர் A.ஏழுமலை,மாவட்டக் குமு உறுப்பினர்கள் M.சரோஜா,S.காவேரி, P.R.சுப்பிரமணி,மாதனூர் ஒன்றியச் செயலாளர் வே.குமார்,பேர்ணாம்பட்டு ஒன்றியச் செயலாளர் S.பன்னீர் செல்வம், பேர்ணாம்பட்டு நகரச் செயலாளர் M.மூர்த்தி, குடியாத்தம் ஒன்றியச் செயலாளர் துரை செல்வம்,தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் L.மணி,S.கிருபாகரன், தலித் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.


120 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள பாலாறு தடுப்பணையில் 90 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதையும்,பொன்னையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பாலாற்றில் கலக்குமிடத்தையும், வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் பாலாறு ஆக்கிரமிப்புகளால் சுருங்கிய இடங்களையும் அதனால் குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளச்சேத பாதிப்புகளையும்,குடியாத்தம் நகரில் ஓடும் கவுண்டன்ய ஆற்றின் வெள்ளப்பெருக்கு அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட பீடித் தொழிலாளர் குடும்பங்களையும், பேர்ணாம்பட்டு நகரில் ஓடும் மலட்டாறு அருகில் சிறுபான்மை மக்கள் வாழ்ந்த மாடிக்குடியிருப்பு இடிந்து விழுந்ததால் மரணமடைந்த 9 பேரின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் பாலாற்றில் அமைந்துள்ள ஆம்பூர் துத்திப்பட்டு தரைப் பாலம்,பச்சக்குப்பம் தரைப்பாலம்,மாதனூர் உள்ளி தரைப்பாலம்,விரிஞ்சிபுரம் தரைப்பாலம், குடியாத்தம் R கொல்லப்பள்ளி தரைப்பாலம், மேல் விஷாரம் தரைப்பாலம், அரக்கோணம் வளர்புரம் தரைப்பாலம் ஆகிய அனைத்தும் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதில் மாதனூர் உள்ளி தரைப்பாலம் துண்டிக்கப்பட்டதை தோழர் இரா.முத்தரசன் பார்வையிட்டார்.
மாலையில் வேலூர் கட்சி அலுவலகத்தில் அளித்த பேட்டியில் தமிழக அரசு டெல்டா விசாயிகளுக்கு அறிவித்துள்ள ஹெக்டேருக்கு 20000 என்பதை 30000 ஆக வழங்க வேண்டும் என்றும் வட மாவட்டங்களில் கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மானாவாரி நிலம் பயிர் நிலங்களுக்கும்,வீடுகளை இழந்தவர்களுக்கும்,கால்நடைகளை இழந்த விவசாயக் குடும்பங்களுக்கும் உரிய நிவாரணத் தொகையினை தமிழக அரசு அறிவித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கடும் மழையின் காரணமாக வேலை இழந்துள்ள தோல் தொழிற்சாலை,கட்டுமானம்,விவசாயக்கூலித் தொழிலாளர்கள் ஆகியோருக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தமிழக அரசு கோரும் வெள்ள நிவாரணத் தொகையை ஏமாற்றாமல் முழுமையாக ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


33 கி.மீ தூரம் மட்டுமே ஓடும் பாலாற்றின் குறுக்கே ஆந்திராவில் 17 தடுப்பணைகளை ஆந்திர அரசு கட்டியுள்ளதையும்,222 கி.மீ தூரம் தமிழகத்தில் ஓடும் பாலாற்றின் குறுக்கே ஓரிரெண்டு தடுப்பணைகளே உள்ளதால் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கன அடி தண்ணீர் வீணாக வங்கக்கடலில் கலப்பதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் 120 ஆண்டுகளுக்கு முன் வெள்ளைக்காரன் காலத்தில் கட்டிய பாலாறு அணைக்கட்டு வலுவாக உள்ளதை சுட்டிக்காட்டிய முத்தரசன் அவர்கள் 28 கோடி மதிப்பீட்டில் விழுப்புரத்தில் கட்டப்பட்ட தடுப்பணை மூன்றே மாதத்தில் இடிந்து விழுந்ததை சுட்டிக்காட்டி ஊழல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். மேலும் தமிழகத்தில் ஓடும் பாலாற்றுப் படுகையில் கூடுதலாக தடுப்பணைகளை கட்டி வட மாவட்ட மக்களின் விவசாயத்திற்கும்,குடிநீருக்கும் பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மற்றும் கவுண்டன்ய ஆறு,பாலாறு,பொன்னையாறு கரைகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு மாற்று இடமளித்து வீடுகள் கட்டித்தர வேண்டும் மேலும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்து வட மாவட்ட மக்களின் ஜீவாதாரமான பாலாற்றைப் பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button