பாரதியின் பேத்தி லலிதா பாரதி மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
மகாகவி பாரதியார் மகள் வழிப் பேத்தியான லலிதா பாரதி (94) வயது முதிர்வு காரணமாக நேற்று (26.12.2022) சென்னையில் காலமானார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது.
“நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்று துடிப்பாகச் செயல்பட்டு, படைப்புலகில் இன்றும் துருவ நட்சத்திரமாக விளங்கி வரும் மகாகவி பாரதியாரின் வாழ்நெறியை நேசித்துப் பின்பற்றியவர் திருமதி லலிதா பாரதி.
காலத்தை வென்று நிற்கும் பாரதியாரின் படைப்புகளை நிகழ்கால தலைமுறைக்கும், எதிர்கால தலைமுறைக்கும் எடுத்துக் கூறும் வகையில் இசை வடிவில் படைப்புகளை வழங்கியுள்ளார். லலிதா பாரதியின் மறைவால் இசை உலகம் தலைசிறந்த ஆசிரியரை இழந்துள்ளது.
அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இசை மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.