பாதுகாப்புத் துறையில் தொடரும் தனியார்மயம், புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக ஏஐடியுசி தமிழ் மாநில 20 வது மாநாடு நிறைவேற்றிய 3 தீர்மானங்கள்
பாதுகாப்புத் துறை ஊழியர் பிரச்சனைகள் குறித்து ஏஐடியுசி தமிழ் மாநில 20 வது மாநாடு நிறைவேற்றிய 3 தீர்மானங்கள் பின்வருமாறு:
தீர்மானம் – 1
படைக்கல தொழிற்சாலைகளைத் தனியார்மயமாக்கும் எண்ணத்தோடு கர்ப்பரேஷன் மயமாக்கியதை மாற்றி பழையபடியே பாதுகாப்புத் துறையில் தொடர்ந்து செயல்படவும், மேலும் தனியாருக்குக் கொடுக்கும் இராணுவ ஆயுத உற்பத்திக்கான ஆர்டர்களை ரத்து செய்து இந்த ஆயுத உற்பத்திகளை போதுமான அளவிற்கு படைக்கல தொழிற்சாலைகளுக்கு வழங்கவும், இந்த 20 வது ஏஐடியுசி தமிழ் மாநில மாநாடு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இதற்கு எதிராகப் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் நடத்துகின்ற அனைத்துவித போராட்டத்திற்கும் ஏஐடியுசி உறுதுணையாக நின்று ஆதரவளிக்கும்.
தீர்மானம் – 2
தமிழகத்தின் பெருந்தலைவர் காமராஜர், V K கிருஷ்ணமேனன் ஆகியோரின் பெரும் முயற்சியால் கொண்டுவரப்பட்ட இராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் அனைத்துவித சீருடைகளையும் தயாரிக்கும், ஆவடியிலுள்ள OCF தொழிற்சாலையில் 2023-24 ஆண்டிற்கான பணி ஆணைகளை வழங்காமல், அதை தனியாருக்கு வழங்க ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் 700 பெண் ஊழியர்கள் உட்பட 1400 ஊழியர்கள் பணியின்றி பாதிக்கப்படுவதோடு, இந்தத் தொழிற்சாலையை நலிவடைய வைத்து, இதைத் தனியாருக்கு தாரை வார்க்க ஒன்றிய அரசு திட்டமிடுகிறது. இதை இந்த 20 வது ஏஐடியுசி தமிழ் மாநில மாநாடு வன்மையாகக் கண்டிப்பதோடு, தனியாருக்குப் பணி ஆணைகளை வழங்குவதை கைவிட்டு, ஆவடி OCF தொழிற்சாலைக்கு போதுமான பணி ஆணைகளை திரும்ப வழங்கவும், தொழிலகத்தை பாதுகாப்பு துறையில் தொடர்ந்து செயல்படவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் – 3
2004 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள, குறைந்தபட்ச ஓய்வூதியம் கூட கிடைக்க வழி இல்லாத, புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த இந்த 20வது ஏஐடியுசி தமிழ் மாநில மாநாடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது .