தமிழகம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு அனுமதி: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் (பொறுப்பு) பிஎஸ் மாசிலாமணி கொடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:

டெல்டா மாவட்டங்கள் நதிநீர் பாசனம் மற்றும் ஆழ்குழாய் நீரை நம்பி பிரதான தொழில் வருமானமாக வேளாண்மை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறது. பாரம்பரியமாகப் பல தலைமுறைகள் இப்படி வாழ்ந்து வரும் நிலையில் இந்தச் சூழலையே புரட்டிப் போட்டு மக்களின் வாழ்வு நிலையைச் சீர்குலைத்திட ஹைட்ரோகார்பன் எடுப்பது என்கிற ஒற்றைச் சாளர ஏலம் மூலம் ஒன்றிய அரசு ஒப்பந்தங்களை வழங்கிட செய்தது.

ஒரே ஒரு உரிமத்தில் அனைத்து இயற்கை வாயுக்களையும் படிமங்களையும் எடுக்க இந்த முறை அனுமதிக்கிறது. மன்னார்குடி பகுதியில் நிரம்பி உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்ட நிலக்கரியை எடுத்திட ஒன்றிய அரசு திட்டமிட்டது. இந்த நிலக்கரி படிமங்களின் ஊடே புதைந்திருக்கும் மீத்தேன் வாயுவை எடுத்தால் தான் நிலக்கரி எடுக்க முடியும் என்கிற நிலையில் தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்கிற ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு கிஞ்சிற்றும் மக்களைப் பற்றி கவலைப்படாது அனுமதி வழங்கியது. மாவட்டங்களின் பேரழிவு திட்டமாக வருகிற இந்த அனுமதியையும் திட்ட அமலாக்கத்தையும் எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகள் மற்றும் விவசாயிகளும் தொடர்ந்து போராடியதின் விளைவாய் அன்றைக்கு மாநில ஆளும் பொறுப்பில் இருந்த அரசு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அதற்குப் பின் தான் டெல்டா மாவட்டங்களின் நிரந்தர பாதுகாப்புக்காக காவேரி டெல்டா என்பது வேளாண் தொழிலுக்கான ஒரு பாதுகாப்பு மண்டலம் என்று அறிவித்தது. அது இன்றும் நடைமுறையில் இருக்கிறது என்பதுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இந்தக் குழு கூடி டெல்டா பாதுகாப்பிற்காக மேலும் சில வரையறைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தான், ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசையோ, சட்டப்படி அமையப் பெற்ற வேளாண் மண்டலத்தை பற்றியோ கவலைப்படாது தன் விருப்பத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஒப்பந்தத்தை கோரியிருக்கிறது. அதற்கான ஆய்வு திட்டத்தை தொடங்கிட இருக்கிறது.

ஒன்றிய அரசின் இந்தப் பொறுப்பற்ற செயலை மக்களைப் பற்றி கவலைப்படாத, அக்கறையில்லாத போக்கை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது. ஒன்றிய அரசு இந்தத் திட்டத்தைத் தொடக்க நிலையிலேயே திரும்ப பெற்றிட வேண்டும்.

ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்ட திருத்தத்தின்படி மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை மட்டுமே பெற்று மாநிலங்களில் இப்படியான திட்டங்களைத் தொடங்கலாம். மாநில சுற்றுச்சூழல் துறை அனுமதி தேவையில்லை. இப்படி அமல்படுத்தப்படும் திட்டம் செயலாக்கத்தின் பொழுது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அந்த கம்பெனியே பொறுப்பு ஏற்க வேண்டும் என்கிற ஒரு புதிய திருத்தத்தின்படி இந்த திட்டம் அமலாக்கப்படுவதாகத் தெரிகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை மதிக்காத இப்படியான சட்ட திருத்தத்தை அன்றைக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்த்தது. ஆகவே தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த திட்டங்களை தொடக்க நிலையிலேயே ரத்து செய்திட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். சிவகங்கையில் ஏப்ரல் 3, 4 இரு நாட்கள் நடைபெற்ற சங்கத்தின் மாநிலக் கூட்டத்திலும் இதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button