பாசிச பா.ஜ.க ஆட்சியில் பெருக்கெடுத்துப் பாயும் கார்ப்பரேட் முறைகேடுகள்
த லெனின்
வேலியே பயிரை மேய்ந்த கதையாக சமீபத்தில் வெளிவந்துள்ள தேசிய பங்குச் சந்தை ஊழலின் நவீன முகமாக மாறியுள்ள மேனாள் பங்குச் சந்தை தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் அவரது இல்லங்கள் கட்டிடங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியால் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இமயமலையைச் சார்ந்த பெயர் குறிப்பிடப்படாத யோகி என்பவருடன் சித்ரா ராமகிருஷ்ணா கடந்த 2017 பிப்ரவரி மாதத்திலிருந்தே தகவல் தொடர்பில் இருந்ததும், பங்குச் சந்தை குறித்த பல ரகசிய செய்திகளைப் பத்தி பத்தியாக அவருக்கு அனுப்பியதும், அந்த யோகி இவருக்கு அனுப்பிய சங்கேத மொழியிலான செய்தியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
முற்றும் துறந்தவர்களை முனிவர்கள் என்கின்றனர். ஆனால், கார்ப்பரேட் யுகத்தில் எல்லாவற்றையும் அனுபவிக்கும் போலிகளே யோகிகளாக அழைக்கப்படுகிறார்கள்.
சித்ரா ராமகிருஷ்ணனுக்கு யோகி அனுப்பிய செய்தி, “பைகளைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள் நான் அடுத்த மாதம் செய்ஷெல்ஸ் செல்ல வேண்டும்; நீங்களும் என்னோடு வர வேண்டும். அதற்கு முன்பு காஞ்சனா மற்றும் பர்கோவாவோடு லண்டனுக்குச் சென்று வர வேண்டும். நீங்கள் நியூசிலாந்திற்கு இரண்டு குழந்தைகளோடு செல்ல வேண்டும். ஹாங்காங் வழியாக அல்லது சிங்கப்பூர் வழியாக உங்கள் பயணத் திட்டம் அமைய வேண்டும்.” என்பது போன்ற செய்தியை அனுப்பியிருந்தார்.
செய்ஷெல்ஸ்க்கு இந்தியாவிலிருந்து 4 மணி நேரத்திற்குள் செல்லும் நேரடி விமானம் கடந்த 2014 ஆண்டு முதல் இருக்கிறது. அப்படி இல்லையென்றாலும் துபாய் அல்லது இலங்கை வழியாக செய்ஷெல்ஸ் செல்ல முடியும். ஆனால் யோகி சித்ரா ராமகிருஷ்ணாவிற்கு சிங்கப்பூர் அல்லது ஹாங்காங் வழியாக செல்ல வேண்டும் என்று ஏன் அறிவுறுத்தினார்? அங்கிருந்து செச்சல்சுக்கு நேரடி விமானங்கள் இல்லை. எட்டு மணி நேரத்திலிருந்து 10 மணி நேர பயணமாகும். எனவே இந்தப் பயணத் திட்டத்திலேயே பல ரகசியங்கள் மண்டிக் கிடக்கின்றன.
செய்ஷெல்ஸ், சிங்கப்பூர், மொரீசியஸ், சுவிட்சர்லாந்து ஆகியவை வரி ஏய்ப்பு செய்து கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக்கும் முக்கிய இடங்களாகும். இதற்கும் யோகிக்கும் என்ன சம்மந்தம்?
சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஒரு பெண் குழந்தை தான் இருக்கிறது. அவர் இரண்டு குழந்தைகளோடு பயணத்திட்டம் வகுத்தது ஏன்? அப்படி என்றால் வேறொருவரை அவரோடு அழைத்துச் செல்வதற்கான சமிஞ்கையாகவே இந்தச் சொல்லாடலைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
மும்பை பங்குச் சந்தைதான் (பி.எஸ்.இ.) இந்தியாவில் ஒரே பங்குச் சந்தையாக இருந்தது. இதையொட்டியே மற்றொரு பங்குச் சந்தையை அரசே உருவாக்கியது. அதுவே தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ.)ஆகும். முதலில் தேசிய பங்குச் சந்தையின் தலைவராக அரவிந்த் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டார். அதன் பின்பு அவரால் நியமிக்கப்பட்டவர் தான் இந்த சித்ரா ராமகிருஷ்ணா.
இதுபோல இருவருக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட மின் அஞ்சல் தகவல்கள் பல, செய்ஷெல்ஸ் நாட்டுடன் இந்தியா கருப்பு பணம் குறித்த தகவல்களைத் தர வேண்டும் என்ற ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே இந்த ரகசிய தகவல்கள் பரிமாறப்பட்டிருக்கின்றன. கடந்த 2015 ஆகஸ்டில்தான் இந்த ஒப்பந்தம் நிகழ்ந்தேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, ஏதோ ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக, பண ஆதாயத்திற்காக இவர்கள் செயல்பட்டிருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
பொதுவாக அரசுகளே இது போன்ற உளவு வேலைகளில் ஈடுபட்ட காலங்கள் உண்டு. பழங்காலத்தில் தொழிற்புரட்சிக்குப் பிறகு இங்கிலாந்தில் இருந்து தொழில்நுட்பங்களைத் திருடுவதற்கு அமெரிக்க அரசை நிறுவிய மூதாதையர்களே முயன்றிருக்கிறார்கள். அலெக்சாண்டர் ஹாமில்டன் மற்றும் பெஞ்சமின் பிராங்களின் போன்றவர்கள் பிரிட்டிஷ் தொழில்நுட்பத்தையும், தொழில்நுட்ப பணியாளர்களையும் அமெரிக்காவிற்கு கொண்டு வந்து சாமுவேல் சிலேட்டர் என்பவர் முதன் முதலாக நீராவி சக்தியின் மூலம் இயங்கும் நூற்பாலையை கட்டினார். இதனை இங்கிலாந்து பத்திரிகைகள் ‘முதுகில் குத்திய துரோகி’ என்று எழுதின.
நவகாலனியாதிக்க அமலாக்கத்திற்குப் பிறகு 1990களில் ஆண்கள் முகச்சவரத்திற்குப் பயன்படுத்தும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜில்லெட் ரேசர் தனது ஒரு பணியாளரைச் சந்தேகித்தது. அவர் மூலமாகத்தான் தொலைநகல் மற்றும் இமெயில் வாயிலாக இந்தத் தொழில்நுட்பங்கள் அனைத்தும் போட்டியாக உள்ள தொழிற் நிறுவனத்திற்கு அனுப்பியது தெரிய வந்தது. எனவே, அமெரிக்காவில் இதுபோன்ற உளவுகளுக்கு எதிராகச் சட்டமே கொண்டு வரப்பட்டு பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், வழக்குக்கு ஏற்ற ரொக்க அபராதமும் விதிக்க முடியும்.
கணினி, மின்னணு, வலைப்பின்னல் வழியாக ரகசியமாக ஊடுருவுவது, சைபர் அட்டாக் செய்வது, உளவாளிகளை நியமிப்பது, லஞ்சம் கொடுப்பது ஆகியவை வியாபித்து வருகிறது. ஜெர்மனியில் ஒட்டுமொத்தமாக 50 சதத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த பாதிப்பிற்கு உள்ளாவதாகச் சொல்லப்படுகிறது.
ஐரோப்பிய யூனியனைச் சார்ந்த நாடுகளில் இப்படிப்பட்ட உளவு பார்த்தல் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இது நிறுவனங்களைப் போட்டி நிறுவனங்கள் உளவு பார்ப்பது என்பதோடு அடங்காமல் அரசு துறைகளையும் உளவு பார்த்து அதை கார்ப்பரேட் நலனுக்காகப் பயன்படுத்தும் ஒரு தகாத முறை ஆகும். இந்த முறை இன்று உலகில் புகாத துறையே இல்லை.
இந்தியாவில் உலகமய அமலாக்கத்திற்கு பிறகு, அதுவும் மோடியின் ஆட்சியின் கீழ் கார்ப்பரேட் துறை இன்று நாட்டின் கொள்கைகளை வகுக்கும் அனைத்து நிறுவனங்களையும் சீரழித்துள்ளது. கார்ப்பரேட் நலனுக்காகவே இந்த அரசு எந்த பாதகத்தையும் தொடர்ந்து செய்யத் துணிந்து விட்டது.
கார்ப்பரேட் துறை உளவு இந்தியாவில் நிலக்கரி, எண்ணெய் மற்றும் மின் சக்தி அமைச்சகங்கள், பாதுகாப்புத்துறை சம்மந்தப்பட்ட தளவாடங்கள், வெளியிடப்படாத பட்ஜெட் ரகசியங்கள் அனைத்தும் உளவாளிகளால் கசிய விடப்படுகின்றன.
அமலாக்கத்துறை அதானியின் நிறுவனம் குறித்து 2013ல் ரிசர்வ் வங்கிக்குப் புகார் அளித்திருந்தது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்குச் சொந்தமான எண்ணெய் வயல்கள் பல அம்பானிக்கு கைமாறியது. இந்தத் தகவல்களின் அடிப்படையில்தான், வோடாபோன் நிறுவனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசுத் தலைமை வழக்குரைஞருக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்களை மக்களின் வரிபணத்தில் அனுப்புகிற செயற்கைக் கோள்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. அந்த ரகசியங்கள் எல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கு அறிவிக்கப்பட்டு ஏலங்களும், பேரங்களும் நடைபெற்ற வண்ணமே இன்றைய கார்பரேட்டுகளின் வளர்ச்சி இத்தகைய உயர்வைக் கண்டிருக்கிறது. அரசின் உதவி இல்லாமல் எந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனமும் வெற்றிகரமாக இயங்க முடியாது.
இந்தியாவில் 101 நபர்கள் என்று இருந்த பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை, இந்தக் கொரோனா காலத்தில் 141 பேராக வளர்ந்துள்ளனர். அத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.23 லட்சம் கோடியாக இருந்த கார்ப்பரேட்டுகளின் சொத்து மதிப்பு இன்று ரூ.53 லட்சம் கோடிகளைத் தாண்டியிருக்கிறது என்றால், வெறும் உழைப்பால்தான் இவையெல்லாம் சாத்தியம் என்பது பச்சை அயோக்கியத்தனம் ஆகும். அரசு அள்ளி அள்ளிக் கொடுத்ததால்தான் இவ்வளவும் நடந்தது என்பதே உண்மை!
அறிவுசார் சொத்துரிமை என்ற பெயரில் பன்னாட்டுக் கம்பெனிகள் கொள்ளையடிக்க பெரும் வாய்ப்பை உலகமயம் வாரி வாரி வழங்கியது. 1987ல் பீச் & நட் கம்பெனி வெறும் இனிப்புத் தண்ணீரை ஆப்பில் பழச்சாறு என்று விற்றது. இந்த மோசடியைக் கண்டறிந்து அந்நிறுவனத்தின் மீது அரசுகள் 2.2 மில்லியன் டாலர் அபராதம் விதித்தன.
2008ல் குழந்தைகளுக்கான பால் விநியோகம் செய்கிற நிறுவனம் சீனாவில் கலப்பட பாலை விற்கிறது என்பது கண்டறியப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், 2012ல் நமது இந்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (எப்.எஸ்.எஸ்.எ.ஐ.) இந்தியாவில் விற்பனையாகும் பாலில் யூரியா என்ற ரசாயன உரமும், டிடர்ஜென்ட் சோப்பு தூள்களும் கலப்பதை கண்டறிந்தது. 1954ஆம் ஆண்டிலேயே உணவு கலப்பட தடைச் சட்டம் கொண்டு வந்திருந்தாலும் இன்று வரை அந்த நிறுவங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை இந்திய அரசாங்கம்.
குறைந்த பட்ச அரசு, அதிகபட்ச நிர்வாக ஆளுகை என்று சொன்ன மோடி ஆட்சி காலத்தில்தான் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நமது நிர்வாகத்துறை முழுவதும் ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகளின் நண்பர்களாக மாறிப்போயுள்ளன.
மக்களுக்கான எந்த நலத்திட்டங்களும் இன்று அவர்களை மீறி செயல்படுத்தப்படுவதில்லை என்பதே உண்மை. இதன் காரணமாகத்தான் நமது நாட்டின் வரிவிதிப்பில் கார்ப்பரேட்டுகளுக்கு பெரும் நன்மையும், சாதாரண மக்களுக்கு சுமையும் அளிக்கும் வழிமுறை நிறுவப்பட்டாயிற்று.
கார்ப்பரேட்டுகளின் தலைமை அதிகாரிகளுக்கு (சி.இ.ஓ.) மிக உயர்ந்த ஊதியம் அளிக்கப்படுகிறது. மறுபுறத்தில் கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களுக்கு ஊதிய உயர்வு என்பது பெயரளவுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது.
உழைப்போடு சம்பந்தமில்லாத பங்குச் சந்தையின் புள்ளிகள் ஏறுவதும், இறங்குவதும் ஏதோ கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிவேக வளர்ச்சியால் வந்த கவர்ச்சி அல்ல என்பதும், சுழற்சி முறையில் இந்த ரகசிய தகவல்களை இமயமலையில் இருக்கும் யோகிகளுக்குப் பரிமாறி அந்தப் பற்றற்ற யோகிகளும் தங்கள் மீது பற்றுள்ள பக்தர்களின் கார்ப்பரேட்டுகளுக்கு பக்கபலமாக நின்று செயல்பட்டதும் இன்று சித்ரா ராமகிருஷ்ணா மூலம் வெளிவந்து விட்டது.
இவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட செபி உண்மையில் ஒழுங்குபடுத்துவதற்கு இன்று பயன்படுத்தப்படுகிறதா?- என்பதே கேள்வி.
நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, நிதிச் சுதந்திரம் இவை அனைத்தையும் வெட்டி வீழ்த்தும் இந்த முறைக்கு மாற்று ஒன்றே இன்றைய உடனடித் தேவை. ஒரு சமத்துவ சமூக அமைப்பின் மூலமே இவை அனைத்தும் சாத்தியம்.
தொடர்புக்கு: 94444 81703