பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு தனி நலத்துறை அமைத்திடுக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் கொண்ட தமிழ்நாட்டில் 20 மாவட்டங்கள் மலைகளும், அடர்ந்த வனங்களும் கொண்ட பகுதிகளாகும். இங்கு 36 வகையான பழங்குடியின மக்களும், பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மலைவாழ் மக்களும் பல லட்சக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது வாழ்வாதாரம் முழுவதும் வனம் சார்ந்து அமைந்துள்ளது.
இயற்கை சூழலுடன் இணைந்து வாழ்ந்து வரும் பழங்குடி மக்கள், மலைவாழ் மக்கள் வாழ்வுரிமைகளை பறிக்கும் வகையில் பாஜக ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் வெளியிடும் உத்தரவுகள் பழங்குடிகளையும், மழைவாழ் மக்களையும் வனத்தை விட்டு வெளியேற்றும் வஞ்சக நோக்கம் கொண்டதாகவே இருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து மாண்பமை நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஐந்து தேசியப் பூங்காக்கள், ஐந்து புலிகள் சரணாலயங்கள், முப்பதுக்கும் மேற்பட்ட வனவிலங்கு சரணாலயம் அனைத்தும் பழங்குடிகள் மற்றும் மலைவாழ் மக்கள் வாழ்வில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இவைகள் 2006 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒன்றிய அரசு நிறைவேற்றப்பட்ட “ பழங்குடிகள் மற்றும் மலைவாழ் மக்கள் உரிமைகள்” அங்கீகாரச் சட்டத்திற்கு எதிரானதாகும்.
மேலும் 1980 ஆண்டு நிறைவேற்றப்பட்ட வனப் பாதுகாப்புச் சட்டத்தில் பல திருத்தங்களை செய்து, வன உரிமை சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையில் மோடியின் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகின்றது. ஒன்றிய அரசின் மாநில உரிமைப் பறிப்பு முயற்சிகளை தடுத்து பாதுகாக்க வேண்டிய கடமை, பொறுப்புள்ள தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறையின் செயல்பாடு வருந்தத்தக்க நிலையில் தொடர்கிறது.
இந்த நிலையில் பழங்குடியினர் , மலைவாழ் மக்கள் உரிமைகளைப் பாதுகாக்க ஒன்றுபட்டு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவிப்பதுடன், தமிழ்நாடு பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய வனம் சார்ந்து வாழ்வோர் நலத்துறை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது