பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கவுன்சிலிங் தர உளவியல் ஆலோசகர்களை நியமிக்க முடிவு

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பள்ளிகளில் பாலியல் தொந்தரவு நடைபெறாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள புகார் பலகையில் 14417 மற்றும் 1098 ஆகிய கட்டணமில்லா புகார் எண்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். மேலும், அருகில் உள்ள காவல் நிலையத்தின் தொலைபேசி எண்ணையும் எழுதி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதவிர, பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், மாணவ – மாணவிகளுக்கு உளவியல்ரீதியாக கவுன்சிலிங் தேவைப்படுகிறது. அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சுழற்சி முறையில் மாவட்டந்தோறும் உளவியல் ஆலோசகர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம். மிக விரைவில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.