தமிழகம்

பத்திரிக்கையாளர்களின் கோரிக்கைகளை  அரசு நிறைவேற்றித் தர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும் – மு.வீரபாண்டியன் பேச்சு

சென்னை:  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு,  பிப். 11 அன்று, தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  200க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் இளசை கணேசன், செயலாளர் க.குரு ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து மு.வீரபாண்டியன் பேசியதாவது:

பத்திரிக்கைகளே  சமூக மாற்றத்திற்கான கருவிகளாக இருந்திருக்கின்றன. சமூகத்தில் வெளிப்படும் எழுச்சிகளை,  புதுமைகளை,  பத்திரிக்கைகளே  வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டி,  மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வந்துள்ளன.

“ உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்கு அடிமைச் சங்கிலியை தவிர வேறொன்றும் இல்லை!!  பெறுவதற்கோர் பொன்னுலகு உண்டு!! “  என்ற  கார்ல் மார்க்ஸின் அறைகூவலை, உலக மக்களிடம் கொண்டு சேர்த்தது அன்று சிறு பதிப்பாக வெளி வந்த அச்சு ஊடகங்களான பத்திரிக்கைகளே.

பத்திரிக்கைகளில் சிறுபத்திரிக்கை, பெரிய பத்திரிக்கை என்கிற பாகுபாடு இல்லை. சிறு பத்திரிக்கைகளே  அடிமட்ட மக்களின் குரல்களை வெளிப்படுத்துவதாக இருப்பதை இன்றும் நாம் உணர முடிகிறது.

“ஹரிஜன்”  “இந்தியா” போன்ற பத்திரிக்கைகள்  மூலமே தேசிய விடுதலைக்கான செய்திகளை வெளியிட்டு, மக்களுக்கு  விழிப்புணர்வு ஊட்டியவர்கள் தேசத் தந்தை மகாத்மா காந்தியும், தேசிய கவிஞர் பாரதியாரும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கைகளை, பத்திரிக்கையாளர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். பத்திரிக்கையாளர்களாகிய உங்களின்  10 அம்ச கோரிக்கைகளை,  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு சார்பில் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று கோரிக்கைகளை நிறை வேற்றித்தர உரிய முயற்சிகளை மேற்கொள்வோம்.

இவ்வாறு மு வீரபாண்டியன் உரையாற்றினார்.

இந்திய வெகுஜன பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஜெகதீசன், தமிழக ஊடக உரிமை குரல் மற்றும் பத்திரிக்கை பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.எம்.தமிழன் வடிவேல்,  ஜனநாயக அனைத்து பத்திரிக்கை உறவுகள் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.தர்மராஜா, அறிஞர் அண்ணா பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் அ.பால்ராஜ். இந்திய சுதந்திர பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தலைவர் எக்ஸ்.சார்லஸ், அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் ஒருங்கிணைப்புக்குழு சங்கத்தின் செயலாளர் வீ.கண்ணையா, ஆவடி பத்திரிக்கையாளர் மன்றத்தின் தலைவர் எம்.கே. மூர்த்தி, தலைமைச் செயலக பத்திரிக்கையாளர் சங்கத்தின்  எம்.கண்ணன்,  தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கத்தின் ஜீ.நாகராஜ்  உள்ளிட்ட ஒருங்கிணைந்த சங்கங்களின் பிரதிநிதிகளும், தமிழ்நாடு பத்திரிக்கை மற்றும் ஊடக பணியாளர் சங்கத்தின் தலைவர் தாமரைப்பூவண்ணன், தமிழ்நாடு மூத்த பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவர் இதழாளர் இசைக்கும்மணி,  தமிழ்நாடு நிருபர்கள் சங்கத்தின் தஞ்சை தமிழ்ப் பித்தன், தமிழ்நாடு பிரஸ் மீடியா ரிப்போட்டர் சங்கத்தின்  தலைவர் சிவத்தமிழன் மற்றும் மூத்த பத்திரிக்கை செயல்பாட்டாளர்கள் வேல்முருகன், பா.கோபால கிருஷ்ணன், கவிஞர் சுமித்ரா, ரஜினி பாலா உள்ளிட்டவர்களும்  கலந்துகொண்டு, பத்திரிக்கையாளர்கள் உரிமைகள், -கோரிக்கைகள், அரசின் நலத்திட்ட உதவிகள், பத்திரிக்கையாளர்கள் நல வாரியம், பத்திரிக்கையாளர்கள் சிறப்பு ஆணையம்,  பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சட்டம், மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு  அரசு ஓய்வூதியம்  மற்றும் குடும்பநல நிதி  திட்டங்களில் முன்னுரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

அரசு அங்கீகார அட்டை நடைமுறை குளறுபடிகளை களைந்து,  ஆர்.என்.ஐ.  பதிவு பெற்ற அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் ஒரே விதமான அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

பதிவுபெற்ற பத்திரிக்கையாளர் அனைவருக்கும் அரசு விளம்பரங்கள் வழங்க வேண்டும்.

மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஆர்.என்.ஐ.   பதிவு பெற்று பத்திரிக்கையை நடத்தி வரும் அனைத்து பத்திரிக்கையாளர்களும் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கிட வேண்டும்.

பத்திரிக்கையாளர்களுக்கு தனியாக சிறப்பு நலவாரியம் அமைத்திட வேண்டும்.

பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றுதல்,  ஓய்வு பெற்ற அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும்  மாதாந்திர ஓய்வூதியம் வழங்கல், பத்திரிக்கையாளர்களுக்கு தனியான அரசு குடியிருப்பு உருவாக்கி தருதல்  உள்ளிட்ட கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் பங்கேற்றுப் பேசியதை முழுவதுமாக கேட்க பின்வரும் இணைப்பைச் சுட்டுங்கள்: https://www.youtube.com/watch?v=7izHlYKt1F4 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button