பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய கோரி மினி கிளினிக் பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு மினி கிளினிக் பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கிடக் கோரி மார்ச் 30 அன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மினி கிளினிக்குகளுக்காக பல்நோக்குப் மருத்துவமனைப் பணியாளர்கள் 1400 க்கும் மேற்பட்டோர் சென்ற ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு மாதம் வெறும் ரூ.6000 மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.
அவர்களை தற்பொழுது பணி நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசு முயல்கிறது. இது மிகுந்த வருத்தத்தை தருகிறது. அவர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது.
பணி நீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்!
அவர்களுக்கு பணி நீட்டிப்பு மற்றும் பணிப் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் தலைமை தாங்கினார்.
மினி கிளினிக் பல்நோக்குப் மருத்துவமனைப் பணியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர்கள் மு.சாந்தி, பெ.ராதிகா, க.சீத்தா லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் முன்னாள் மாநில பிரசார செயலாளர் எஸ்.சிவகுரு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, கூட்டமைப்பின் தலைவர் பி.காளிதாசன், பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ்.தனவந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மினி கிளினிக் பல்நோக்குப் மருத்துவமனைப் பணியாளர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் அ.ராஜ சேகர், மு.மணிகண்டன், ந.வாசுதேவன் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 700 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.