பணி நிரந்தரம் கோரிப் போராடிய செவிலியர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுக!
பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும் எனப் போராடிய செவிலியர்களின் கோரிக்கையை ஏற்று, ஆறு மாதங்களில் 5000 செவிலியர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்படும் என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. அதே சமயம், போராடிய செவிலியர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது சரியல்ல. வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.
இது குறித்து தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் நலச்சங்கம் மற்றும் சமூக சமத்துவத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் இன்று (08/06/2022) சென்னை ஊடகவியலாளர் சந்திப்பில் விடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி:
தமிழ்நாட்டில் எம்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சி பெற்று,எம்.ஆர்.பி மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த ஏழு ஆண்டுகளாக அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. வெறும் ரூ 14000 த்தை மட்டுமே தொகுப்பூதியமாக மாதம் தோறும் பெற்று
வருகின்றனர்.
அவர்களுக்கு பணிநிரந்தரம் கோரி பல கட்டப் போராட்டங்களைத் தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர் நலச்சங்கம் நடத்தியுள்ளது. ஆனால் அவர்களுக்கு இது வரை பணிநிரத்தரம் கிட்டவில்லை.
இந்நிலையில், தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்படும் என்ற தி.மு.க வின் தேர்தல் அறிக்கை நம்பிக்கை அளித்தது. எனவே, தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு பணி நிரந்தரம் வழங்கிடக் கோரி ,நேற்று செவிலியர்களின் போராட்டம் சென்னையில் நடைபெற்றது.
போராடிய செவிலியர் சங்கத் தலைவர்களை அழைத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்த 6 மாதங்களுக்குள் 5000 செவிலியர்களுக்கு பணிநிரந்தரம் வழங்குவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
இதை நாங்கள் மனமார வரவேற்கிறோம்.
இருப்பினும் 11ஆயிரம் செவிலியர்களுக்கும் ஆறு மாதங்களுக்குள் பணிநிரந்தரம் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம்.
அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளித்துள்ள நிலையில், போராடிய செவிலியர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. மிகுந்த கவலையை அளிக்கிறது. எனவே,வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
செவிலியர்களின் சேவையை போற்றும் வகையில் அவர்களது உரிமைகளையும், நலன்களையும் காத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் மாநிலத் தலைவர் ராதாமணி,மாநில ஒருங்கிணைப்பாளர் வேல் மோகன்தாஸ்,மற்றும் நிர்வாகிகள் நிரோஷா,குருநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவண்,
டாக்டர்
ஜி.ஆர்.
இரவீந்திரநாத்
பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்,மற்றும் கௌரவத் தலைவர் ,தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் நலச் சங்கம்.
9940664343
செவிலியர் ஜி.அம்பேத்கர்
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் நலச் சங்கம்.
9943670595