தமிழகம்

மருத்துவத்துறை பணி நியமனங்களில் தமிழ்நாடு அரசு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திட வேண்டும் – சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்

மருத்துவத்துறை பணிநியமனங்களில்  இட ஒதுக்கீட்டை  தமிழ்நாடு அரசு பின்பற்றாதது சமூக நீதிக்கு எதிரானது.

பணிநியமனங்களில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திட வேண்டும்.

தமிழ்நாடு அரசுக்கு , சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.

 இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர். ஜி .ஆர். இரவீந்திரநாத் விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்தி.

அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் உள்ள  2448 பலநோக்கு சுகாதாரப் பணியாளர் \ சுகாதார ஆய்வாளர்களுக்கான பணியிடங்களுக்கும், 4848 செவிலியர்  பணியிடங்களுக்கும் ,ஆக மொத்தமாக 7296  பணியிடங்களுக்குமான பணிநியமனங்களைச் செய்வதற்கான அறிவிப்பாணை தமிழ்நாடு அரசால்  வெளியிடப்பட்டுள்ளது.

பணிநியமனங்கள் மாவட்ட அளவில் நடத்தப்படும் என மாநில நலவாழ்வுச் சங்கம் மற்றும் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள்  ஒப்பந்த மற்றும் தற்காலிக அடிப்படையில்  மேற்கொள்ளப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது. இப்பணியில் சேர விரும்புவோர் 15.12.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த 7296 பணியிடங்களுக்கான ,பணிநியமனங்களில்  இட ஒதுக்கீடு வழங்கப்படுவது பற்றிய  அறிவிப்பு தெளிவாக இல்லை. இது கவலை அளிக்கிறது.

ஒப்பந்தம் மற்றும் தற்காலிக அடிப்படையில் பணிநியமனம் செய்யும் பொழுது  இட ஒதுக்கீட்டை கடைபிடித்திட வேண்டும். நிரந்தர அடிப்படையில் இல்லாத  ,தற்காலிக அடிப்படையிலான, ஒப்பந்த அடிப்படையிலான அல்லது குறிப்பிட்ட கால நிர்ணய  அடிப்படையிலான   (limited time basis ) மற்றும் வெளிக் கொணர்தல் அடிப்படையிலான, மத்திய மாநில அரசுகளின் பணிகளுக்கு இட ஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் என மத்திய சமூக நீதித்துறை அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. (https://www.hindustantimes.com/india-news/introduce-reservations-in-part-time-contractual-jobs-social-justice-ministry/story-GiLGdqmyZDeHy3VLq78jbK.html)

மத்திய அரசின் வழிகாட்டுதல் உள்ள போதிலும், தேசிய சுகாதார இயக்கம் மூலம் ,தமிழக அரசு பணிநியமனம் செய்யும் பொழுது, இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாதது வருத்தம் அளிக்கிறது. இது இட ஒதுக்கீடு உரிமை பெற்ற பிரிவினரின் நலன்களுக்கு எதிரானது. இது சமூக நீதிக்கு எதிரானது.

மருத்துவத் துறையில் பணி நியமனங்கள் அதிக அளவில் ஒப்பந்தம் மற்றும் தற்காலிக அடிப்படையிலும், மிகக்குறைந்த தொகுப்பூதியத்திலும் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய பணி நியமனங்கள் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு வழி வகுக்கிறது. இது பணியாளர்களின் நலன்களுக்கு எதிரானது. இந்நிலையில் இட ஒதுக்கீட்டையும் நடைமுறைப்படுத்தாதது  பட்டியல் சாதியினருக்கும்,பட்டியல் பழங்குடியினருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் எதிராக அமைந்து விடும்.

எனவே, தமிழ்நாடு அரசு இந்த 7296 பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதோடு, இப்பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் நியமித்திட முன்வர வேண்டும்.

இப் பணிநியமனங்கள்  மாவட்ட அளவில் தனித்தனியாக  நடத்தப்பட இருக்கின்றன. இவ்வாறு மாவட்ட அளவில் பணிநியமனங்களை செய்வது பல்வேறு குழப்பங்களுக்கும், முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும்.

 இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஒரு நபர் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும் பணிபுரிய தாயாராக இருக்கலாம்.எனவே  மாவட்ட அளவிலான பணி நியமன முறை, இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் உரிமைகளுக்கும், நலன்களுக்கும் எதிரானது.  

எனவே, இப்பணி நியமன அறிவிப்பாணையை ரத்து செய்து விட்டு,  சமூக நீதியை காக்கும் வகையில் புதிய அறிவிப்பாணையை வெளியிட்டு, மருத்துவப் பணியாளர்கள் பணிநியமன வாரியம் (MRB) மூலம் தேர்வு நடத்தி, இட ஒதுக்கீட்டையும் நடைமுறைப்படுத்தி, மாநில அளவில் பணிநியமனங்களைச் செய்திட வேண்டும்.

 சமூக நீதியை காத்திட  தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என  சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்  தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு ,

டாக்டர் ஜி ஆர் இரவீந்திரநாத்,

பொதுச் செயலாளர்,

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.

தொடர்புக்கு:

9940664343

9444181955

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button