படிக்கட்டு பயணமும் பொறுப்பற்ற சுற்றறிக்கையும்!
டி.எம்.மூர்த்தி
மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி சென்றால், அந்தப் பேருந்தை இயக்கும், பேருந்தின் ஓட்டுனர் மீதும் நடத்துனர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு சுற்றறிக்கையை போக்குவரத்துத் துறை வெளியிட்டிருக்கிறது.
அண்மையில் சென்னையில் ஓடிக்கொண்டிருந்த புறநகர் ரயிலில், மாணவரும் மாணவியும் போட்டி போட்டுக்கொண்டு, நடைமேடையில் கால் வைத்து உரசிக்கொண்டே போன காணொளி வெளிவந்தது. காவல் துறை சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அறிவுறுத்தி அனுப்பி வைத்தது.
ரயில் டிரைவரையும் கார்டையும் கூப்பிட்டு தண்டனை தரவில்லை. இவ்வளவுக்கும் ரயிலை ஓட்டும்போது பக்கத்திலோ எதிரிலோ, குறுக்காகவோ எந்த வாகனமும் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் வராது என்று தெளிவாக தெரியும். ஆனால் பேருந்தை இயக்குவது அவ்வாறல்ல. எந்தப் பக்கம் இருந்து என்ன வரும் என்று தெரியாத நெரிசலில் பேருந்தை ஓட்டிச் செல்ல வேண்டும். நடைகளின் எண்ணிக்கை குறைந்து விடாமலிருக்க, தாமதமாகாமல் வரையறுக்கப்பட்ட நேரத்தில் சென்றடைய வேண்டும். டீசலும் அதிகமாக செலவாகி விடக்கூடாது. இதனிடையே படிக்கட்டில் இருப்பவர்களையும் உள்ளே வரச் சொல்ல வேண்டும்! அழைத்தும் வர மறுத்தால் ஓட்டுநரால் என்ன செய்ய முடியும்? அவருக்குத் தண்டனை தருவது எவ்வகையில் பொருந்தும்?
நடத்துனர்கள் பேருந்துக்குள் இட வசதியை ஏற்படுத்தி, படிக்கட்டில் இருப்பவர்களை உள்ளே அழைக்க வேண்டும் என்கிறது சுற்றறிக்கை. பேருந்து நிரம்பியிருக்கும் போது இட வசதியை ஏற்படுத்துவது எவ்வாறு?
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளை, மீண்டும் ஓட்டத் தொடங்கியபோது குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டன இப்போது பள்ளிகள் திறந்த பிறகு, பயணிகளின் எண்ணிக்கை செங்குத்தாக உயர்ந்துள்ளது. ஓடுகிற பேருந்துகளின் எண்ணிக்கை அதற்கேற்ப அதிகரிக்கப்படவில்லை. அடுத்த பேருந்து எப்போது வரும் என்ற நிச்சயமற்ற நிலையில் பயணிகளும், மாணவர்களும் முண்டியடித்துக்கொண்டு பேருந்துக்குள் ஏறுவதை நடத்துனர்கள், ஓட்டுனர்களால் தடுக்க இயலாது.
போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதிப் பற்றாக்குறையில் உள்ளன. ஏராளமான பேருந்துப் பணிமனைகள், கடனுக்காக வங்கிகளிடம் அடகு வைக்கப்பட்டுள்ளன. உதிரி பாகங்கள், டயர்கள், பாட்டரிகள் வாங்க முடியாமல், ஓடும் நிலையில் உள்ள பேருந்துகள் பல இயக்காமல் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
பல்வேறு சமூகப் பிரிவுகளுக்கு இலவசப் பயணத்தை அரசு அறிவித்திருக்கிறது. சமூக நல நோக்கில் அது மிகவும் சரியானது தான். ஆனால் அதனால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை உடனடியாக அரசு பணமாகத் தந்து ஈடு கட்டினால் நிதிப்பற்றாக்குறை இந்த அளவுக்கு ஏற்படாது. ஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை.
ஓடுகிற பேருந்துகளுக்கு கூட போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லை. சட்டப்படி தர வேண்டிய விடுப்புகளையும் எடுக்க முடியாத நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். கூடுதல் நேரம் பணிபுரிவதாலும், பணிச்சுமை அதிகரிப்பதனாலும் தான் பணியின் போதே ஓட்டுனர்கள் இறக்கிறார்கள் என்று அண்மையில் வெளிவந்த நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது.
ஓராண்டுக்கு முன்பு, பூந்தமல்லியில் இருந்து செங்குன்றம் செல்லும் அறுபத்தி ஏழு எண் பேருந்தில் படிக்கட்டில் நின்றவரை மேலே வரச் சொன்ன ஒரே காரணத்திற்காக, அடுத்த பேருந்து நிறுத்தத்தில் ஒரு கும்பலை வரச்செய்து, பேருந்துக் கதவுகளை உடைத்து உள்நுழைந்து ஓட்டுநர் கரிகாலனையும், நடத்துனர் குபேரனையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு தாக்கியது நம் நினைவில் இருக்கிறது.
திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் மெதுவாக ஊர்ந்து சென்ற பேருந்தை, மூத்த பயணி ஒருவர் கை காட்டியபோது நிறுத்தி ஏற்றியதற்காக, ஒரு உயர் போலீஸ் அதிகாரி பேருந்துக்குள் நுழைந்து ஓட்டுநரை இழுத்துத் தாக்கியதும், அதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி பணிமனையில் நடத்தப்பட்ட காவல்துறையின் கண்மூடித்தனமான தாக்குதலையும் நாம் மறந்துவிட முடியாது.
அந்த நிகழ்விடத்துக்கு, நமது போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளனத்தின் இன்றைய பொதுச்செயலாளர் ஆர்.ஆறுமுகம் சென்ற போது கடுமையான காவல்துறை தாக்குதலுக்கு ஆளானார். பல ஆண்டுகள் ஆன பிறகும் அவருடைய முதுகு தண்டுவடத்தில் பட்ட அடியின் வலியால் இப்போதும் துன்புற்று வருகிறார். இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்திய காதர் கமிஷன் நன்கு ஆய்வு செய்து, போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சீர் செய்ய, தந்த பரிந்துரைகளை போக்குவரத்து கழக நிர்வாகங்களோ, தமிழ்நாடு அரசோ தொட்டுக் கூடப் பார்க்கவில்லை.
# மாணவர்களுக்கு பொது இடங்களில் நடந்து கொள்ள வேண்டிய முறையைப் பாடத்தோடு இணைத்து சிறுவயதிலிருந்தே போதிக்க வேண்டும்.
# கல்வி நிறுவனங்களும், பெற்றோர் ஆசிரியர் கழகங்களும் மாணவர்களின் போக்குவரத்து பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது பேசி முறைப்படுத்த வேண்டும்.
# இதுவரை சாலைப் போக்குவரத்து, பொதுப் போக்குவரத்து குறித்து பல குழுக்கள் தந்துள்ள பரிந்துரைகளை எடுத்து, வாய்ப்புள்ளவற்றை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.
போக்குவரத்து கழக நிர்வாகங்கள், காவல்துறை அதிகாரிகள், பொது மக்கள் பிரதிநிதிகள், போக்குவரத்து தொழிலாளர் பிரதிநிதிகளைக் கொண்ட குழு அமைத்து பிரச்சனைகளுக்கான காரணங்களையும், அவற்றுக்கான தீர்வுகளையும் கலந்துரையாடி முடிவு செய்து உறுதியாக அமுல் நடத்த வேண்டும்.
மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி செல்வதை தடுக்கும் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, போக்குவரத்து தொழிலாளர்கள் மீது வீண் பழி சுமத்தி, தனது பொறுப்பை போக்குவரத்து துறை தட்டிக் கழித்து இருக்கிறது. மாணவர்கள் மீது பெரும் அக்கறை இருப்பது போல பொதுமக்களுக்குக் காட்டிக் கொள்கிற கண்துடைப்பு நடவடிக்கை தான் இது. இது பெரும் கண்டனத்துக்கு உரியதாகும்.
டாஸ்மாக் கடைகளுக்கு மது வாங்க வருபவர்கள், கோவிட் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போடாதவர்களுக்கு மது விற்றால் டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை என்று இப்போது அடுத்த கட்ட நகர்வு வந்திருக்கிறது. “நோய்நாடி, நோய்முதல் நாடி, அதுதணிக்கும் வாய்நாடி” செயல்படுவதற்குப் பதிலாக, தண்டனைக் கலாச்சாரத்தைத் திணித்து, மேட்டுக்குடி அதிகார வர்க்கம், தம்மை மகாயோக்கியர்களாகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது.
இந்தச் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்று, மாணவர்களைப் பாதுகாக்க, பயனுள்ள முறைமைகளைத் தேர்ந்து செயலாக்க போக்குவரத்துத் துறை முன்வர வேண்டும்.