தமிழகம்

பஞ்சமி: வெறும் நிலமல்ல… சமூக மாற்றத்திற்கான ஒரு விதை!

-S மீனாட்சிசுந்தரம்

நிலம் எங்கள் உடைமை!
நிலம் எங்கள் உரிமை!
நிலம் எங்கள் உயிர்!

என்ற முழக்கங்களை முன்வைத்து தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தினைத் துவங்கியுள்ளோம்.

தமிழ்நாட்டின் வறட்சியான மாவட்டங்களில் ஒன்று – திண்டுக்கல். இந்த மாவட்டத்தில் விவசாயத்தையும் விவசாயம் சார்ந்த இதர தொழில்களையும் சார்ந்துதான் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

பஞ்சமி நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட மாவட்டங்களில், அதிக எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட  மாவட்டங்களில் திண்டுக்கல் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டதில், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 3204 ஏக்கர் நிலப்பரப்பு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியச் சமூக அமைப்பில் மனுதர்மத்தின் அடிப்படையில் மனிதர்கள் சாதிய ரீதியாகப் பிளவுபடுத்தப்பட்டனர். நான்கு வர்ணத்திலும் சேர்த்துக்கொள்ளப்படாத மக்கள் திரளைப் பஞ்சமர்கள் என்று வகைப்படுத்தி, விலங்குகளைக் காட்டிலும் கீழான நிலையில் வைத்துச் சுரண்டினார்கள். இவர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடங்களில் குடிசை அமைத்து வாழ்ந்திட வேண்டும். தீண்டத்தகாதவர்கள் என்று சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட இந்த மக்கள் அனுபவித்த/அனுபவித்து வரும் துன்பங்கள் ஏராளம்!

ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த ஜேம்ஸ் ட்ரெமென்கீர் என்பவர், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும், புறக்கணிக்கப்பட்ட பஞ்சமர்களின் வாழ்வியல் நிலை மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கருதினார்; பஞ்சமர் குறித்த அறிக்கை ஒன்றைத் தயாரித்து ஆங்கிலேய அரசிடம் 1891 ஆம் ஆண்டு தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், பஞ்சமர்களுக்கு நிலம் வழங்குவதன் மூலம் அவர்கள் வாழ்வை மேம்படுத்த இயலும் என்ற கருத்தைப் பதிவு செய்திருந்தார். இந்த அறிக்கை ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் 1892, மே 16 ஆம் தேதி விவாதத்துக்கு வந்ததை ஒட்டி, பஞ்சமி நிலம் தொடர்பான சட்டம், 30 செப்டம்பர் 1892 இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

பஞ்சமி நில சட்டப்படி இந்தியா முழுவதும், 25 இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பட்டியலின மக்களுக்கு இலவசமாக அரசால் வழங்கப்பட்டது. அன்றைய சென்னை மாகாணத்தில் மட்டும் பட்டியலின மக்களுக்கு 12 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இலவசமாக அரசால் வழங்கப்பட்டது. இந்த நிலங்களில், பட்டியலின மக்கள் பயிர் செய்தோ, வீடுகள் கட்டிக்கொண்டோ அனுபவிக்கலாம். முதல் பத்தாண்டுகளுக்கு யாருக்கும் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கோ விடக் கூடாது; அதன்பிறகு அவர்கள் விற்பதாக இருந்தால், அவர்கள் வகுப்பைச் சார்ந்தவர்களிடம் (Depressed Class) தான் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை வழங்கப்பட்டது. வேறு வகுப்பினரிடம் விற்றால் அந்த விற்பனை செல்லாது. மீறி வாங்கினால், எந்த காலத்திலும், வாங்கியவரிடமிருந்து, அரசு அந்த நிலங்களைப்   பறிமுதல் செய்யலாம். அதற்கு நஷ்ட ஈடு கிடையாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இத்தகைய சட்ட ஏற்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் பஞ்சமருக்கு வழங்கப்பட்ட நிலங்கள் பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக, விளைநிலமற்ற மேடுகள் நிறைந்த, சமமற்ற நிலமாகவும், நீர்நிலையற்ற நிலமாகவும், மானாவரி நிலங்களாகவே இருந்தன.

தேச விடுதலைக்குப் பிறகும், ஆங்கிலேய அரசு பின்பற்றி வந்த ரயத்து முறையையே நமது இந்திய அரசும் வலியுறுத்தியது. பஞ்சமி நிலங்களைப் பாதுகாக்கும் பொருட்டு வருவாய்த்துறையின் கீழ் நடைமுறையிலும், ஆவணங்கள் வழியிலும், நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அரசாணைகள் உருவாக்கப்பட்டன. அதன்படி, வருவாய்த்துறையின் கீழ் இயங்கும் கிராம நிர்வாக அலுவலகத்தில் கண்டிஷன் ஜாரி ஆவணப்பதிவு ஏடாக தனியாக பராமரிக்கப்பட வேண்டும். மேலும், பத்திரப் பதிவினைத் தடை செய்யும் பொருட்டு ஜீரோ மதிப்பில் ஆவணமாகப் பராமரித்து ஒவ்வொரு பசலி ஆண்டிலும் நிலங்களை ஆய்வு செய்து நிபந்தனைகள் மீறப்பட்டு உள்ளனவா என்பதை அறிக்கையாக தயார் செய்து மாவட்ட வருவாய்த் துறையிடம் வழங்க வேண்டும்.

மேலும், தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியல் நிலைகளை மேம்படுத்துவதற்காக, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 366 பிரிவு 24 (scheduled caste ) பட்டியலின மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு சட்ட சரத்துகள் உருவாக்கப்பட்டன. சட்டப் பாதுகாப்புகள் அனைத்தும் எழுத்து வடிவங்களில் மட்டுமே இருந்ததே தவிர, தாழ்த்தப்பட்ட மக்களைச் சட்டங்களும், அரசு நிர்வாகமும் பாதுகாக்க தவறிவிட்டது என்பதே உண்மை ஆகும்.

தமிழகம் முழுவதிலும் பஞ்சமருக்கு வழங்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் நிலத்தில், 1,26,013 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே தற்போது அனுபவத்தில் உள்ளது. 1,73,887 ஏக்கர் நிலங்கள் தலித் அல்லாத இனத்தவரிடம் சட்டத்துக்குப் புறம்பாக முடங்கிக் கிடக்கிறது. அபகரிக்கப்பட்ட இந்த நிலங்களை மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திண்டுக்கல் மாவட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட்  கட்சியின் சார்பில் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பஞ்சமி நிலங்கள் குறித்த விவரங்களை ஆவணங்களாகப் பெற வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க அதற்கான  போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற செயல்திட்டத்துடன் 2012 லிருந்து 2019 வரை தொடர்ச்சியாக ஆவணங்கள் பெரும் பொருட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக, திண்டுக்கல் மாவட்டம் முழுமைக்கும் ஆவணங்கள் எடுக்கப்பட்டு எவ்வளவு நிலங்கள் தாழ்த்தபட்ட மக்களின் கையில் இருக்கிறது? எவ்வளவு நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருக்கிறது? என்பது பற்றிய முழு விவரங்கள் திரட்டப்பட்டன.

தங்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட நிலத்திற்குள் பஞ்சமர்கள் செல்வதற்கும், நில உழவடை செய்வதற்கும் ஆதிக்க சமூகத்தினர் தடைகளையும் அச்சுறுத்தல்களையும் உருவாக்கி வருகின்றனர். இதுவே இன்று வரை நிலவி வரும் எதார்த்த நிலை ஆகும். தொடரும் அச்சுறுத்தல்கள், பாசன வசதிக்கு தண்ணீர் மறுப்பது, பொருளாதார பிரச்சினைகள் ஆகியவற்றை மையமாக வைத்து பெரும் திரளான தாழ்த்தப்பட்ட மக்களை அவர்களின் நிலத்தில் இருந்து வெளியேறச் செய்தனர். எஞ்சியவர்கள் இவற்றையெல்லாம் சமாளித்து நில உழவடை செய்து வாழ்ந்து வந்த  நிலையில், நகரமயமாக்கலின் விளைவாக, நிலத்தின் மதிப்பு உயர்ந்தது. பஞ்சமர்களின் அறியாமை மற்றும் பொருளாதார பிரச்சனைகளைப் பயன்படுத்தி ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நிலங்களை அபகரித்ததோடு, முறைகேடாக, போலி ஆவணங்களைத் தயார் செய்து, நிலவகை மாற்றங்கள் செய்துள்ளனர். நிலங்கள் அனைத்தும் தொழிற்சாலை கட்டிடங்ளாகவும், வீட்டுமனை இடங்களாகவும், வணிக வளாகங்களாகவும், நிலவுடைமை ஆதிக்க வர்க்கத்தின் விளை நிலங்களாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1959 லிருந்து 1979 வரையிலான இந்த இடைப்பட்ட காலத்தில் தான் அதிகப்படியான நிலங்கள் முறைகேடாக அபகரிக்கபட்டுள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் வாகரை கிராமத்தில்  பஞ்சமருக்கு ரிசர்வ் செய்யப்பட்ட கண்டிஷன் ஜாரி நிலவகை என அரசால் ஆவணப்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்களை சட்டத்துக்குப் புறம்பாக, ராயல் கிளாசிக் நிட்ஸ் இந்தியா பி லிட் என்ற நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து அபகரித்ததோடு, இந்த நிலப்பகுதியில் தொழிற்சாலை கட்டிடங்களைக் கட்டியுள்ளனர். ஆவணங்களின்படி 1898 லிருந்து நிபந்தனையுடன் கூடிய ஒப்படை பதிவேடுகளின் அடிப்படையில் பஞ்சமர்களுக்கு ரிசர்வு செய்யப்பட்ட நில ஆவணமாக பராமரிக்கப்பட்டு, அந்நிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உழைப்பின் மூலம் நிலத்தை கழனி ஆக்கி நில உழவடை செய்து வந்தனர். காலப்போக்கில், இப்பகுதியில் ஆதிக்கச் சமூகத்தினரால் நிலங்கள் அபகரிக்கப்பட்டு உள்ளது. நிலவுடைமை மேம்பாட்டு திட்டம் 1984 பிறகு முறையும் முழுமைக்கும் திருத்தப்பட்டு நிலவகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு யார் காரணம்?ஆவணங்களை முறையாக பராமரிப்பதற்கு தகுதியற்ற அரசு நிர்வாக முறைகளே இவர்களின் நிலங்கள் பறிபோனதற்கு முக்கிய காரணம் ஆகும்.

இப்பகுதி வாழ் மக்களின் பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொப்பம்பட்டி ஒன்றிய குழுவின் சார்பில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.சந்தானம் தலைமையில் பஞ்சமி நில மீட்புக்கான ஆர்ப்பாட்ட த்தை நடத்தினோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பங்கேற்ற மக்கள், அவர்கள் எவ்வாறு தங்கள் நிலங்களை இழந்தார்கள், எவ்வளவு நெருக்கடிகளைச் சந்தித்தார்கள் என்பதை விரிவாக விளக்கிச் சொன்னார்கள். வாழ்வியல், சமூக பொருளாதாரத்தில் பஞ்சமர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தை நினைக்கும் போது, இதுவரையிலான மனிதகுல வரலாறுகள் அனைத்தும், வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்ற காரல் மார்க்ஸின் கூற்று சிந்தனையில் எழுகிறது. தன்னையும் தன் நிலத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக, அனுதினமும் அவன் செலுத்திய உழைப்பு இன்றைக்கு விரயம் ஆனதோ? என்ற கேள்வி எழுகிறது. மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் பொருள் அளவு தான் குண மாற்றத்தை ஏற்படுத்தும். அதுபோல, சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஒழிய வேண்டும் என்றால், பொருள் உரிய அளவில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இந்த நிலைப்பாட்டினைக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக பொருளாதாரத்தில் மேன்மை அடைந்திட, பஞ்சமி நிலங்கள் உரிய முறையில் மீட்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இந்தத் தத்துவார்த்த அடிப்படையில் நின்று பஞ்சமி நில மீட்பு போராட்டத்தினை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்துள்ளது.

இந்தியா முழுமைக்கும் பஞ்சமி நில மீட்பு போராட்டம் வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும். பஞ்சமி: வெறும் நிலமல்ல, சமூக மாற்றத்திற்கான விதைகளில் ஒன்று!

தொடர்புக்கு: 9442475006

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button