பசிப்பிணி போக்கிட மானியங்கள் தொடர வேண்டும்
உலக நாடுகள் பசி மற்றும் ஏழ்மையை எதிர்கொண்டு வரும் நிலையில், உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளின் நிபந்தனைகளின் பெயரால், ஏழை மக்கள் நலனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த மானியங்களை நிறுத்திட, பெரும்பாலான வளர்ச்சியடையாத மற்றும் வளரும் நாடுகள் கட்டாயப்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகள் ஏழ்மையின் பிடியில் சிக்கித் தவித்து வரும் மக்களை மேலும் வஞ்சிப்பதாக உள்ளன.
பசியில் வாடும் மக்களுக்கு உணவளிப்பது தர்மத்தின் தொன்மையான வடிவங்களில் ஒன்றாகும். பல்வேறு நாடுகளிலும் அந்த மரபு இன்றும் தொடர்ந்து வருகிறது. அமெரிக்காவில் உணவுச் சீட்டுகள் (Food Stamps), பிரிட்டனில் உணவு வங்கிகள் (Food Banks), ஜப்பான் நாட்டு பள்ளிகளில் இலவச மதிய உணவு, எகிப்து நாட்டின் நேரடி மானிய திட்டங்கள், இந்தியாவில் விளைபொருட்கள் மீதான விலை கட்டுப்பாடு என்று பல வடிவங்களில் பசிக் கொடுமையைக் களையும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பல நாடுகளில் அத்தியாவசியப் பண்டங்கள் மீதான விற்பனை வரிக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் உலகின் 800 மில்லியன் மக்கள் (80 கோடி) போதுமான உணவின்றிப் பசியால் துன்புற்றனர். இதுபோன்ற சூழலில் மக்கள் நல நடவடிக்கைகள் அளவிலும், பண்பிலும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே ஒருவர் எதிர்பார்க்கக் கூடியதாகும்.
நுகர்வோருக்கான நேரடி மானியம் – குறிப்பாக ஆதரவு தேவைப்படுவோரை மட்டுமே இனங்கண்டு வழங்கப்படும் மானியம் (Targeted Subsidy) – என்ற முறைதான் பசிக் கொடுமையை போக்குவதற்கான மிகச்சிறந்த வழிகளில் ஒன்றாகும் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது. உலக அளவில் உணவு மற்றும் வேளாண் துறைக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் 630 மில்லியன் அமெரிக்க டாலராகும். இதில் நுகர்வோருக்கான நேரடி மானியம் வெறும் 72 பில்லியன் அமெரிக்க டாலராகும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும். எனவே, நுகர்வோருக்கான நேரடி மானியம், பசிக் கொடுமையைப் போக்குவதற்கான தீர்வாகாது என்பது தெளிவாகிறது.
வளர்ச்சியடைந்த நாடுகளில் நுகர்வோருக்கான மானியம் வேளாண் துறை உற்பத்தி மதிப்பில் 4.6 சதவீதமாகும். ஏழை நாடுகளில் இந்த எண்ணிக்கை 0.6 சதவீதம் மட்டுமே.
முக்கியமான விஷயம் என்னவென்றால், இறுதியாக விவசாயிகளுக்கு கிடைப்பது எவ்வளவு என்பதுதான்? விதை மற்றும் உரங்களுக்கான உள்ளீடு மானியமாக 92 பில்லியன் டாலர், மேலும் சுற்றுச்சூழல் காரணிகள் அல்லது பொதுவான வேளாண் உற்பத்தி அளவு, சாகுபடி செய்யப்படும் விளைநிலங்கள் அடிப்படையிலான பரந்துபட்ட ஆதரவுக்கென 152 பில்லியன் டாலர் செலவழிக்கப்படுகிறது. இதில் பெரும்பகுதி வளர்ச்சியடைந்த நாடுகளுக்குச் சென்று சேருகிறது. இதன் காரணமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள உற்பத்தியாளர்களுக்கு, உற்பத்தியில் 24 சதவிகிதம் என்ற அளவிற்கு ஊக்கத்தொகையாக கிடைத்து விடுகிறது. சீனா மற்றும் பிரேசில் போன்ற மத்திய தர வருவாய் பிரிவில் உள்ள நாடுகளில் இந்தத் தொகை 16 சதவிகிதம் என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
செல்வ வளம் குறைவாக உள்ள நாடுகளில் உள்நாட்டு நுகர்வோர்களுக்கு உதவும் வகையில் விலையைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி மீதான தடை, சர்வதேச வர்த்தக கட்டுப்பாட்டு கட்டணங்கள் மற்றும் இதர சந்தைசார் நடவடிக்கைகள் விலை குறைப்புக்கு பதிலாக விலையேற்றத்திற்கே வித்திட்டு வருகிறது. இது போன்ற நடவடிக்கைகள் விளைபொருட்கள் மீதான வரியைப் போல் எதிர்வினை புரிவதால், விவசாயிகள் சாகுபடியில் போதிய அளவிற்கு ஈடுபட்டு உற்பத்தி செய்திட விருப்பமற்றவர்களாக உள்ளனர். மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் இந்தியா போன்ற நடுத்தர வருவாய் பிரிவில் உள்ள நாடுகளில் உற்பத்தி செலவை 4 சதவிகிதம் அளவிற்கு அதிகரிக்கச் செய்கிறது என்பதோடு குறைந்த வருவாய் பிரிவில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் உற்பத்தி செலவை 9 சதவிகிதம் அளவிற்கு அதிகரிக்கச் செய்கிறது.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது மிகப்பெரிய சவாலாகும். விவசாயத்திற்கான ஆதரவு ஒரு முறை நிறுவப்பட்டுவிட்டால் பிறகு அதனை பறிப்பது மிகக் கடினமாகும் என்பதை அமெரிக்க வேளாண் சட்ட வரைவுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது வேளாண் கொள்கைத் திட்டத்தின் பின்புலத்தில் உள்ள அரசியலை உற்றுநோக்கிப் பார்ப்பவர்கள் நன்கறிவர். அதிகப்படியான மானியம் வழங்கப்படும் வேளாண் துறையில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் ஊரகப் பகுதிகளில் வருவாய் இழப்பிறகு இட்டுச் செல்லும்.
பெரும்பாலான வளரும் நாடுகளில் மிகக் குறைந்த விலையில் உணவளிப்பதே நமது பிரதான நோக்கம் என்பது தெளிவாகவில்லை. முதலாளித்துவ சமுதாய அமைப்பும், உற்பத்தி முறையும் மனிதநேயமற்றது என்பதை எதிர்வரும் உணவுத் தட்டுப்பாட்டு நெருக்கடியும் நிரூபணம் செய்து வருகிறது.
ஆதாரம் – நியூ ஏஜ் ஆகஸ்ட் 28 – செப்டம்பர் 03