கட்டுரைகள்

நோக்க,நோக்க களியாட்டம்!

இந்த இயற்கை பொருள்களால் ஆனது என்பதை மையமாகக் கொண்ட பொருள் முதல்வாத தத்துவத்திற்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பு நடந்துள்ளது. 14 நாடுகள் சேர்ந்து, பல்லாயிரக்கணக்கான விஞ்ஞானிகளும், என்ஜினியர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் இணைந்து உருவாக்கி, 2021 டிசம்பர் 25-ஆம் தேதி விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்ட “ஜேம்ஸ் வெப்” என்னும் தொலைநோக்கி விண்வெளியை பற்றிய பல அரிய புகைப்படங்களை படம்பிடித்து அனுப்பி உள்ளது.

இந்த பிரபஞ்சம் 1380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு  ஒரு அடர்த்தி மிகுந்த முதன்மையான நுண்ணிய அணுவெடித்து சிதறி உருவானதாக விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வெடிப்பு நடந்த போது ஒரு சக்தி வாய்ந்த மின்னல் தோன்றியதாகவும், அதனுடைய வெப்பம் 10,000 கோடி டிகிரி செல்சியஸ் ஆக இருந்ததாகவும், அந்த வெடிப்பினால் ஏற்பட்ட சிதறல்கள் இந்த பிரபஞ்சம் முழுவதும் எல்லா திசைகளிலும் வினாடிக்கு பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் வேகத்தில் விரிந்து, ஒரு நிமிடத்தில் இந்த பிரபஞ்சம் ஒரு லட்சம் கிலோமீட்டர் சுற்றளவுக்கு விரிந்ததாகவும், இன்றளவும் அந்தத் துகள்கள் விரிவடைந்து கொண்டே செல்வதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த பெருவெடிப்பினால் ஏற்பட்ட வெப்பம், துகள்கள் விரிவடைய, விரிவடைய படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இது 1000 கோடி டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் போது புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் என்னும் அணுத் துகள்கள் தோன்றின. 3 நிமிடங்களில் பெருவெடிப்பின் வெப்பம் 100 கோடி டிகிரி செல்சியஸ் ஆக குறைந்தது. அந்த நிலையில் தான் புரோட்டான்களும் நியூட்ரான்களும் இணைந்து அணுக்கருக்கள் உருவாகின.

விரிவடைந்து கொண்டே சென்ற பிரபஞ்சம் 3 லட்சம் ஆண்டுகளை கடந்த போது தான் அதனுடைய வெப்பநிலை 3000 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்தது. இந்த நிலையில் தான் எலக்ட்ரான்கள் அணுக்கருக்கவுடன் இணைந்து அணு உருவாகியது. மூன்று லட்சம் ஆண்டுகள் முதல் 10 லட்சம் ஆண்டுகளுக்கு உள்ளாக பெரும்பாலான அணுக்கள் உருவாகின.

பெருவெடிப்பு நடந்து சுமார் 30 லட்சம் ஆண்டுகள் முதல் 30 கோடி ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அணுக்கள் ஒன்று சேர்ந்து ஏராளமான வாயு மேக மண்டலங்கள் தோன்றின. இதை “நெபுலா” என்று அழைப்பர். “நெபுலா” என்பது மேகத்தைக் குறிக்கும் இலத்தீன் மொழிச் சொல். ஒவ்வொரு மேக மண்டலத்தின் மையத்திலும் வாயு கூட்டங்கள் ஈர்ப்பு விசையால் ஒன்றிணைந்து நட்சத்திரங்கள் உருவாகின. இது பெருவெடிப்பு நடந்து 400 முதல் 500 கோடி ஆண்டுகளில் நிகழ்ந்தது. நமது சூரியனும் அவ்வாறு உருவாகிய ஒரு நட்சத்திரம் தான். சூரியன் 500 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது. இந்த பூமி கிரகத்தில் 370 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரின தோற்றத்தின் உயர்ந்த பரிணாம வடிவம் தான் மனிதர்களாகிய நாம்.

பெருவெடிப்பு நடந்த போது விரிவடைந்த துகள்கள் இன்றும் விரிவடைந்து சென்று கொண்டே இருக்கிறது என்று ஐரோப்பிய விஞ்ஞானி ஜார்ஜ் லெமிரேட் கூறினார். அவர் ஒரு கத்தோலிக்க பாதிரியார். அவ்வாறு விரிவடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் முதல் துகள்களை நம்மால் இன்று காண முடியுமா? என்பதே அறிவியல் உலகத்திற்கு முன் வைக்கப்பட்ட கேள்வியாக இருந்தது. அது முடியும், படங்களை பாருங்கள் என்று “ஜேம்ஸ் வெப்” தொலைநோக்கி ஒளி படங்களை எடுத்து அனுப்பி உள்ளது.

நம் கண்களுக்கு புலப்படாத அலை நீளம் கொண்ட ஒளிகள், புறஊதா மற்றும் அகச்சிவப்பு கதிர்கள் இருப்பதாக 1800 ஆம் ஆண்டு வாக்கில் கண்டறியப்பட்டது. இதை பயன்படுத்தி பொருள்களை துல்லியமாக கண்டறியும் தொழில்நுட்பம் 1950 ஆம் ஆண்டுகளுக்கு மேல் வளர்ச்சி பெற்றது. இன்று நாம் பயன்படுத்தும் கண்காணிப்பு கேமராக்களில் இந்த அகச்சிவப்பு கதிர்வீச்சை கண்டறியும் தொழில்நுட்பம் தான், இருட்டில் ஆள் நடமாட்டத்தை துல்லியமாக படம் பிடித்து காட்டுகிறது. அமெரிக்காவும், சோவியத்யூனியனும் புற ஊதாக் கதிர்களை கண்டறியும் டெலஸ்கோப்புகளை விண்ணிற்கு அனுப்பி வைத்தன. அது அனுப்பிய படங்களில் அதிக தொலைவில் உள்ள கிரகங்கள், தூசிகள் மற்றும் வாயு கூட்டங்களால் சரியாக தெரியவில்லை. அதன் பின் 1990-களில் “ஹபிள்” என்னும் தொலைநோக்கி பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு தூரத்தில் உள்ள விண்மீன் கூட்டங்களைத்தான் அறிய முடிந்தது.

இதனுடைய அடுத்த கட்டமாக “ஜேம்ஸ் வெப்” தொலைநோக்கியை அனுப்பும் திட்டம் தயாரிக்கப்பட்டது. 20 ஆண்டுகளாக இந்த தயாரிப்பு பணிகள் நடந்தன. 6.5 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு பெரிய தொலைநோக்கி கண்ணாடி தயாரிக்கப்பட்டது. இந்த கண்ணாடியை அருங்கோணம் வடிவிலான 18 பகுதிகளாக ஒட்ட வைத்தனர். ராக்கெட்டில் செலுத்தும் போது மடித்து வைத்துக் கொள்ளுமாறு தயாரித்தனர். இதை சூரியனிலிருந்து வரும் வெப்பத்திலிருந்து பாதுகாக்க ஐந்து அடுக்குகளால் ஆன சூரிய வெப்ப தடுப்பு தகடுகளை அமைத்திருந்தனர். அதன் பரப்பளவு ஒரு டென்னிஸ் மைதானம் அளவிற்கு இருந்தது. அதனுடைய தடிமன் ஒரு ரோமத்தின் தடிமன் அளவிற்கு இருந்தது. பொருளிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சை பிரித்தறியும் ஸ்பெக்ட்ராஸ்கோபி என்னும் கருவியும் இணைக்கப்பட்டது. இந்த தொலைநோக்கி மிகக் குறைந்த அளவு வெப்ப நிலையில், அதாவது -270 டிகிரி செல்சியஸில் செயல்படும் போது, துல்லியமான படங்களை அனுப்ப முடியும் என்பதால் குளிரூட்டும் கருவிகள் இணைக்கப்பட்டிருந்தன.

இதையெல்லாம் எடுத்துச் செல்ல விண்வெளி ஓடம் ஒரு பள்ளி பேருந்தின் எடை அளவிற்கு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த பொருள்கள் அனைத்தும் காகிதங்களை மடித்து உருவங்களை செய்யும் ஜப்பானிய தொழில்நுட்பமான “ஆரிகாமி” உதவியுடன் மடித்து ராக்கெட்டுக்குள் வைக்கப்பட்டது. பின்னர் ஏரியான்-5 என்ற ராக்கெட் மூலம் தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானாவில் இருந்து விண்ணிற்கு செலுத்தப்பட்டது. பூமியிலிருந்து 10 லட்சம் மைல்கள் பயணித்து சூரிய வட்டப்பாதை L2 ல் நிலை நிறுத்தப்பட்டது. இந்த இந்த இடத்தில் தான் குறைந்த அளவு ஆற்றலைக் கொண்டு இயக்க முடியும். அந்த தேவைப்படும் ஆற்றலையும் சூரிய ஒளியிலிருந்து தயாரிக்குமாறு தகடுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. சுருக்கி மடக்கப்பட்ட விஞ்ஞான கருவிகளை எல்லாம் விரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஆறு மாதங்கள் ஆனது.

இந்த “ஜேம்ஸ் வெப்” தற்போது படங்களை அனுப்பி வருகிறது. ஒரு படத்தில் பெருவெடிப்பில் முதன் முதலில் வெளியானத் துகள் விரிந்து பறக்கும் காட்சியை படம் பிடித்து, இதுவரை கருத்து முதல்வாதிகளான, மதவாதிகள் தங்களுடைய கடவுள் தான் இந்த உலகத்தை படைத்தார் என்னும் கட்டுக்கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மற்றொருபடத்தில் தென்புலத்தில் உள்ள மேகக் கூட்டங்களுக்குள் இரண்டு நட்சத்திரங்களும் அதில் ஒன்று ஆயுள் முடிந்து வெண்குள்ளனாக மாறிவிட்ட நிலையையும் காட்டுகிறது. மற்றொரு படத்தில் கரீனா மேக கூட்டத்தினுள், புதிதாக உருவாகும் நட்சத்திர கூட்டங்கள் மிக துல்லியமாக தெரிகின்றன. மற்றொன்றில் ஸ்டீபனின் ஐந்து விண்மீன் கூட்டங்கள் துல்லியமாக தெரிகிறது. இது மேலும் நீராவி மூலக்கூறுகள் உள்ள கோள்கள் இந்த பிரபஞ்சத்தில் வேறு எதுவும் உள்ளதா என்பதையும் எதிர்காலத்தில் நமக்குத் தெரிவிக்கும்.

2027-இல் “ரோமன்” என்ற தொலைநோக்கி விண்ணில் நிலை நிறுத்தப்பட உள்ளது. அது “ஜேம்ஸ் வெப்”-ஐ விட நூறு மடங்கு பெரியது. இந்த தொலைநோக்களின் மூலம் நாம் இதுவரை அறியாத விண்வெளி ரகசியங்களை எல்லாம் எதிர்காலத்தில் அறிய இருக்கிறோம் என்ற நம்பிக்கை உருவாகி உள்ளது.

“காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம், நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை, நோக்க, நோக்க களியாட்டம்!” என்ற பாரதியின் கூற்றுப்படி மனிதர்களும், மற்ற உயிரினங்களும், இந்த பூமியில் உள்ள ஜடப் பொருள்களும், விண்வெளியில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள், மேகக் கூட்டங்கள், பொருட்கள், அணுக்கள், அணுத் துகள்கள், ஒளி, கதிர்கள், வெப்பம் யாவும் ஒரு பெருவெடிப்பில் இருந்து பிறந்தவர்களே. அந்தப் பெரு வெடிப்பின் துகள்களை காணும் போது பாரதியின் களியாட்டம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

தொடர்புக்கு: 9443244633

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button