கட்டுரைகள்

நேர்மை அர்ப்பணிப்பின் மறுவடிவம் தோழர் சி.எஸ்.ராமசாமி

ப.பா.ரமணி

வங்கி ஊழியர் தொழிச்சங்க இயக்கத்தின் முதுபெரும் தலைவர் சி.எஸ். ராமசாமி(94) டிசம்பர் 29 கோவையில் உடல்நலக்குறைவால் காலமானார்.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் புகழ் மிக்க தலைவர்கள் டி.பி.சத்தா, எச்.எல்.பர்வானா, பி.எல்.சயால், கே.ஜே.ஜோசப் ஆகியோருடன் தொழிற்சங்கப் பணியாற்றிய பெருமைக்குரியவர், சி.எஸ்.ஆர். என அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் சி.எஸ்.ராமசாமி.
சால்டியன் சிரியன் வங்கி என்ற தனியார் வங்கியின் பாலக்காடு கிளையில் 1944ல் பணியாற்றிய பிறகு சி.எஸ்.ஆர். பஞ்சாப் நேஷனல் வங்கியின் சென்னை கிளையில் 1946 ல் சேர்ந்தார். அதன்பின் கோவை கிளைக்கு மாற்றலாகி வந்தார். அப்போது பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் பாரத் வங்கி இணைந்தது. பாரத் வங்கியில் எச்.எல்.பர்வானா பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருடன் 800 ஊழியர்களை ப.நே.வங்கி பணியில் எடுக்க மறுத்தது. எனவே பாரத் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வெடித்தது.
இந்தச் சூழலில் சி.எஸ்.ஆர். கோவையிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டார். அங்கே டி.பி.சத்தா, டி.பி.வாஷி தலைமையில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் பாரத் வங்கி ஊழியர்களுக்காக போராட்டத்தில் இறங்கினர். . ப.நே.வங்கி சங்கத்தின் மும்பை மாநில செயலாளராக சி.எஸ்.ஆர். தேர்ந்தெடுக்கப்பட்டார். புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் வழக்கறிஞர் ஏ.எஸ்.ஆர்.சாரி பழிவாங்கப்பட்ட தோழர்களுக்காக சாஸ்த்ரி தீர்ப்பாயத்தில் வாதாடினார்.இறுதியாக 150 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். டி.பி.சத்தா தொழிற்சங்க பணிக்கு தன்னை அர்பணித்துக்கொண்டார்.
பிற்காலத்தில் சி.எஸ்.ஆரின் இணைபிரியாத் தோழராக விளங்கி அண்மையில் மறைந்த கே.ஜே.ஜோசப், பேங்க் ஆப் இந்தியா மும்பை கிளையில் அப்போது பணியாற்றி வந்தார். அவரது ஆற்றல்மிக்க எழுத்து மற்றும் செயல்பாட்டால் அவர் ஏஐபிஇஏ தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். அப்போது ஏஐபிஇஏ வின் ஏழாவது மாநாடு மும்பையில் நடந்தது. ஜோசப், சி.எஸ்.ஆர். இருவரும் மாநாட்டு மலர் தயாரிப்பதிலும்,
நிதி வசூலிப்பதிலும் சுழன்று பணியாற்றினர். ப்ளிட்ஜ் இதழில் எழுத்தாளர் கே.ஏ. அப்பாஸ் இயக்கிய “பூட் பாலிஷ்” படத்தை திரையிட்டு நன்கொடை வசூலித்தனர்.
சி.எஸ்.ஆர். தமிழ்நாடு திரும்பினார். சென்னை, மதுரை கிளைகளில் வேலை செய்துவிட்டு கோவைக்கு மாற்றலாகி வந்தார். தோழர் ஜோவும் கோவைக்கு மாற்றலாகி வந்தார். கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தை செயலூக்கமிக்க அமைப்பாக உருவாக்குவதில் இருவரின் பங்களிப்பு மறக்கமுடியாதது. அரசியல் விழிப்புணர்வுடன் இதர தொழிற்சங்கங்களுக்கு துணை நிற்பதில் கோ.மா.வ.ஊ.சங்கம் முன்னோடியான அமைப்பாக உருவாகியது. சி.எஸ்.ஆர். தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் இணை செயலாளராகப் பணியாற்றினார்.
அடுத்து கரூர் வைசியா வங்கி, லட்சுமி வைசியா வங்கி, பேங்க் ஆப் மதுரை போன்ற தனியார் வங்கிகளில் சங்கங்களை உருவாக்குவதில் இருவரும் ஈடுபட்டனர். கூடவே பல மாவட்டங்களில் மாவட்ட சங்கங்களை துவக்குவதிலும் பங்களிப்பு செய்துள்ளனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் தொழிலாளர் பிரதிநிதியாக சி.எஸ்.ஆர் நியமனம் செய்யப்பட்ட போது அவரது துணிச்சலான நடவடிக்கை வங்கி ஊழியர் இயக்கத்திற்கே பெருமை சேர்த்தது. மூன்று நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கி பின்னர் திவாலாகி விட்டதாக அறிவித்து மோசடி செய்த ராஜேந்திர சேதியா ஊழல் பற்றி வங்கித் தலைவருக்கும், மத்திய நிதி அமைச்சருக்கும் முன்னரே எழுதி எச்சரிக்கை செய்தார். அதன்படி உடன் நடவடிக்கை எடுக்காததால் ப.நே.வங்கி உள்ளிட்ட மூன்று வங்கிகள் 250 கோடி நட்டமடைந்தன.
மற்றொரு சமயம், வங்கியின் வராக் கடன் பற்றிய தகவலை வங்கித் தலைவரிடம் கேட்டார், சி.எஸ்.ஆர். அதைத் தர மறுத்தது, வங்கி. அதற்கும் மேலாக அவரை நிர்வாகக் குழுவிலிருந்து பதவி நீக்கம் செய்தது நிதி அமைச்சகம். சி.எஸ்.ஆர். நீதி மன்றம் சென்று தடை ஆணை பெற்று மீண்டும் நிவாகக் குழுவில் அமர்ந்தார்.
தனது வர்க்க கடமையை செய்யும் வகையில், கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கத்தின் பொருளாளராக செயலாற்றினார். மில் நிர்வாகங்கள் வரவு செலவு அறிக்கையில் செய்யும் ஏமாற்று வேலைகளை அம்பலப்படுத்தி ஆலைத் தொழிலாளர்கள் நியாயமான போனஸ் பெற துணை நின்றார்.
சி.எஸ்.ஆர். சிறந்த ஆங்கிலப்புலமையுடன் கூர்மையான கட்டுரைகளை எழுதியுள்ளார். யுகோ ஸ்பார்க், நியூ ஏஜ், மெயின்ஸ்ட்ரீம், இதழ்களில் அவரது ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகி உள்ளன. வங்கித்துறையில் வராக் கடன் ஊழல்கள், பொதுத்துறை வங்கிகளை பாதுகாப்பது ஆகிய தலைப்புகளில் எழுதியுள்ளார்.
94 வயதில் மரணமடைந்த சி.எஸ்.ஆரின் எழுபதாண்டு பொது வாழ்க்கையில் ஒரு சிறந்த முன்னுதாரணமான கம்யூனிஸ்டாக இருந்ததுள்ளார். வங்கி ஊழியர்கள், வங்கி ஊழல்களை எதிர்த்து போராட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பணிப்பண்பாடு விஷயத்தில் சங்கங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
கட்சியின் மாநில அலுவலகமான பாலன் இல்லம் கட்டும் பணிக்காக தனது ஓய்வூதிய பணத்தில் நான்கு லட்சம் தொகையை வட்டியில்லா கடனாக வழங்கினார்.
சி.எஸ்.ஆர். போன்ற தலைவர்களின் பொருள் பொதிந்த வாழ்க்கை, தொழிற்சங்க இயக்கத்தில் பணியாற்றுவோருக்கு சிறந்தவொரு முன்னுதாரணமாக விளங்குகிறது. இன்று வங்கி ஊழியர்கள் பெற்றுள்ள முன்னேற்றம், சமூக நிலை ஆகியவற்றிக்கு சி.எஸ்.ஆர். போன்ற அரிய முன்னோடிகளின் அர்ப்பணிப்பு பின்னிருக்கிறது என்பதை நினைவில் நிறுத்துவோம். வாழ்க தோழர் சி.எஸ்.ஆர்.புகழ்!
தொடர்புக்கு: 94421 78974

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button