நெல் விற்பனைக்கு முன்பதிவு செய்திட வலியுறுத்தும் ஆணையை திரும்பப் பெற வேண்டும்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
நடப்பு சம்பா நெல் பயிர் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் புதிய உத்தரவால், விவசாயிகள் பலர், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்திட இயலாத சூழல் உள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய வேண்டுமெனில் 15 நாட்களுக்கு முன்னரே இணையவழி மூலம் முன்பதிவு செய்திட வேண்டும். சில நாட்களுக்கு பின்னர் வாணிபகழகம் எந்த டி.பி.சி.-யில் விற்பனை செய்வது? எந்தநாள் கொண்டு வருவது? என்பதுடன் வரிசை எண்ணும் வரும்.
அந்த குறிப்பிட்ட நாளில் மட்டும் தான் அந்த விவசாயி தான் அறுவடை செய்த நெல்லை விற்க முடியும் என்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல. இதனால் எண்ணற்ற விவசாயிகள் வியாபாரிகளிடம் மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஏனெனில் இது போன்ற நடைமுறை சிக்கல்கள் பல இதில் உள்ளன.
ஒன்றிய அரசு உ.பி., பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் கூடுதல் நெல் கொள்முதல் செய்கிறபோது தொடர்ந்து தமிழக உற்பத்திக்கு ஏற்ப இங்கே கொள்முதல் செய்திட அனுமதிப்பதில்லை. இதே போல் ஈரப்பதம் விலக்கு அளிக்க தமிழ்நாடு அரசு கேட்கும் காலத்தில் வழங்காது அறுவடை முடியும் நேரத்தில் அனுமதி வழங்குகிறது.
இந்த நிலையில் தமிழக நெல் கொள்முதலை மேலும் குறைக்கவே இந்த முடிவை எடுத்திருப்பதாக கருதுகிறோம். முற்றிய நெல் கதிர்களை அறுவடை செய்யும் நாளை 15 நாட்களுக்கு முன்னரே விவசாயிகள் முடிவெடுக்க முடியாது. இது விவசாயிகளின் பொறுப்பில் இல்லை. அறுவடைக்கான இயந்திரங்கள் அல்லது தொழிலாளர்கள் கிடைப்பதை பொறுத்துதான் அறுவடை நாள் தெரியும். எதிர்பாராது மழை பொழிந்தால் நெல் அறுவடை செய்திட மேலும் பலநாட்கள் ஆகும். எனவே நெல்விற்பனை நாளை முன்கூட்டியே முடிவு செய்து பதிவு செய்வது என்பது நடைமுறைக்கு சாத்தியம் அல்ல.
நெல் விற்பனைக்கான அனுமதிக்கப்பட்ட நாளுக்கு பிறகு அறுவடை செய்தால் மறுபடியும் பதிவு செய்து பல நாட்கள் கழித்து விற்பனை செய்ய வேண்டி வரும். இப்புதிய நடைமுறையால் இரு தடவை நெல் மூட்டைகளை ஏற்றி இறக்கி வைத்து பாதுகாக்க வேண்டி வரும். இதற்கான பாதுகாப்பு இடம் பல விவசாயிகளிடம் இல்லை.
மேலும் விவசாய தொழிலாளர்கள் போதுமான அளவு கிடைக்காத நிலையில் இருதடவை ஏற்றி இறக்க கூடுதல் செலவு ஏற்படும். விவசாயிகள் விற்பனைக்கான பதிவு செய்ததற்குபின் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் இந்த விவசாயிக்கு சாகுபடி உறுதிச் சான்று அளித்தபின் தான் நெல் விற்பனைக்கு அனுமதி கிடைக்கும். காவிரி டெல்டா மாவட்டங்களில் குத்தகை விவசாயிகளே அதிகமாக உள்ளனர். இவர்களில் பலருக்கு உறுதிச்சான்று அளித்திட நிர்வாக அலுவலர்களிடம் உரியபதிவு இல்லை.
மேலும் இந்த சான்றுக்காக அலைச்சலும் பணவிரயமும் விவசாயிகளுக்கு ஏற்படும். இது போன்ற நிலைகளால் நெல் விற்பனைக்கு அனுமதி கிடைக்காமல் தடை ஏற்படுவதை கூட விவசாயிகள் அறிந்து கொள்ள இயலாத குழப்ப நிலை ஏற்படும். வெளி மாவட்டங்களில் மிகக் குறைந்த விலைக்கு நெல் மூட்டைகளை வாங்கி டெல்டா மாவட்டங்களில் விற்பனை செய்யும் வியாபாரிகளை தடுக்கவே இந்த ஏற்பாடு என்று சொல்லப்படுகிறது.
டெல்டாவின் அருகாமை மாவட்டங்களிலும் அரசு கொள்முதல் நிலையங்களை திறந்து இதை தடுக்கலாம். கொள்முதல் நிலையங்கள் தோறும் அறிவிக்கப்படும் கண்காணிப்பு குழுவை அந்தந்த கிராம விவசாயிகளை கூட்டி கொள்முதல் ஒழுங்குமுறைகளை அறுதியிட்டால் அதிகாரமிக்க குழுவாக இது செயல்படும். இதன் மூலம் கொள்முதல் தவறுகளை தடுக்கலாம் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு பி.எஸ்.மாசிலாமணி முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.