நெல்லை சதி வழக்கில் நீண்ட காலம் சிறையிலிருந்த கம்யூனிஸ்ட் வாத்தியார் ஆர். எஸ்.ஜேக்கப் மறைந்தார்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில்
இர.முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமறைவாக இயங்கிய 1948-50களில் நெல்லை சதி வழக்கு போடப்பட்டது. ஒரு கிராமப்புற பள்ளிக்கூடத்தின் உறுதிமிக்க கிறிஸ்துவ ஆன்மிகவாதியாக, ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய ஆர். எஸ்.ஜேக்கப் அவர்கள் மீதும் சதி வழக்கு பாய்ந்தது.
கடுமையான சித்திரவதை கொடுமையிலும் கம்யூனிஸ்ட்டுகளை காட்டிக் கொடுக்க மறுத்துவிட்டதோடு, அவர் கைது செய்யப்பட்டு மூன்றாண்டு காலம் சிறையில் வாடினார்.
வாத்தியார் உபதேசியாகவும் ஆன்மீகவாதியாகவும் நல்ல சமூக சிந்தனை உள்ளவராகவும் சமத்துவ வாதியாகவும் வாழ்ந்தவர்.
மரண தண்டனையை சந்திக்க நேர்ந்தபோதிலும் சிறிதும் மனம் கலங்காமல் தன்னுடைய நிலையில் உறுதியாக நின்று ஒரு கிறிஸ்துவ கம்யூனிஸ்டாக இறுதி வரை வாழ்ந்தவர் ஆசிரியர் ஆர் எஸ் ஜேக்கப்..
கம்யூனிஸ்டு இயக்கத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்ட வாத்தியார் ஜேக்கப் அவர்களுடைய மறைவு இலக்கிய உலகத்திற்கு மிகப்பெரிய இழப்பு.
ஒரு கரிசல் காட்டு கிராமத்தின் அவல நிலையை மாற்றுவதற்காக எடுத்த நடவடிக்கைகளை ‘வாத்தியார்’ என்ற நாவலில் அழகுற விளக்கியுள்ளார். நெல்லை சதி வழக்கு சம்பவங்களை நூல்களாக அவர் எழுதியுள்ளார். மூன்றாண்டுகள் சிறைவாசத்தை ‘மரண வாயிலில்’ என்ற நாவலில் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் இலக்கிய உலகம் ஒரு மிகப்பெரிய எழுத்தாளுமையை இழந்து விட்டது.
தோழர் ப. மாணிக்கம் அவர்களோடு மிகுந்த நெருக்கத்தோடு இருந்தவர். இறுதிவரை மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு அவர்களோடும் மிக நெருங்கிய தொடர்பை பேணி வந்தவர். அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்
—
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழ்நாடு மாநிலக்குழு