நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்
சென்னை,பிப்.3- தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பி னார். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள், அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் முத லமைச்சராக பதவியேற்றதற்குப் பின்னர் நீட் விலக்கு மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. கடந்த 2021 செப்டம்பர் 13 அன்று நடை பெற்ற சட்டமன்றக் கூட்டத்தில், முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவ படிப்புகள் மற்றும் மேல் படிப்புகளில் சேருவதற்கு கட்டாயமாக்கப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு அன்று மாலை நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி யான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆத ரவு தெரிவித்துள்ளன. ஆனால் பாஜக எம்எல்ஏக்கள் தமிழக மாணவர் களின் நலனைப் பற்றி கவலைப் படாமல், மசோதாவுக்கு ஆதர வளிக்காமல் வெளிநடப்புசெய்தனர். இதையடுத்து, நீட் விலக்கு மசோதா வுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆளுநரிடம் வலியுறுத்தினார். மேலும், இது தொடர்பாக குடியரசு தலைவருக்கும் கடிதம் அனுப்பப் பட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் நேரில் சந்தித்து, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும்படி வலியுறுத்தினர். ஜனவரி 31 ஆம் தேதியன்று தொடங்கிய நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடரில் நீட் விலக்கு மசோதா வுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி தமிழக எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யும் நாடாளுமன்றத்தில் பேசுகையில், தமிழகத்தின் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கடுமையாகச்சாடினார். இந்த நிலையில், நீட் விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறை வேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீட் விலக்கு மசோதாவை சட்டப்பேர வையில் மறுஆய்வு செய்ய வலி யுறுத்தியும், நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உள்ளது என்றும், இம்மசோதா கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் நலன்களுக்கு எதிராக உள்ளது என்றும் கூறி ஆளுநர் மாளிகை பிப்ரவரி 1 ஆம் தேதி சபாநாயகருக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கை தமிழக மாணவர்கள், மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.