தமிழகம்

நிதிநிலை அறிக்கை மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் திரு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 2022 – 23 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

சமூகத்தின் அனைத்துப் பகுதியின் உள்ளடங்கலான வளர்ச்சியை சாரமாகக் கொண்ட “திராவிட மாதிரி” கொள்கையை அரசு பின்பற்றும் என அறிவித்துள்ளது.

நிதி நிர்வாகத்தில் மேற்கொண்ட முயற்சியில் வருவாய் பற்றாக் குறையை குறைத்திருப்பது நல்ல முன்னேற்றமாகும். வகுப்புவாத, சாதி, மத, சனாதான சக்திகளால் ஏற்படும் சமூக சீரழிவை தடுக்க வாழ்நாள் முழுவதும் போராடிய

பெரியார் ஈ.வெ.ரா.வின் சிந்தனைகளை 21 மொழிகளில் வெளியிடும் திட்டம், தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி வரும் அகழாய்வுப் பணிகளை கடல் பகுதி உள்ளிட்ட பல புதிய பகுதிகளில் விரிவுபடுத்தியிருப்பது,

மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சி, இலக்கியத் திருவிழா நடத்துவது,

ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் திறன் மேம்பாடு, சர்வதேச சதுரங்க விளையாட்டு போட்டியை நாட்டிலேயே முதன் முறையாக சென்னையில் நடத்துவது

போன்ற வரவேற்கத்தக்க பல திட்டங்கள் இருக்கின்றன. பாஜக ஒன்றிய அரசின் தவறான ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுவரும் நிதியிழப்பை ஈடுசெய்யும் கால வரம்பை ஒன்றிய அரசு மேலும் இரண்டாண்டு காலம் நீடிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து, மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என நம்பிக்கையோடு எதிர்பார்த்த பெண்களும், பழைய ஓய்வூதியத் திட்டம் ஏற்கப்படும் என்ற எதிர்பார்த்த அரசுப் பணியாளர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வழங்கப்படும் வேலை நாட்களும், ஊதியமும் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்த்தோருக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

நகர்மயமாகி வரும் சூழலில் கோயில் மனைகளில் குடியிருந்து வருவோர் பிரச்சனை தீவிரமாகி உள்ளது. அரசு நிர்ணயித்துள்ள வாடகை அதீதமானது என்பதை நிதிநிலை அறிக்கை கருத்தில் கொள்ளவில்லை.

மலைப்பகுதிகளில் கால்நடை மேய்ச்சலுக்கு தடை விதித்துள்ளதும், புலிகள் காப்பகம், சரணாலயங்கள் அமைப்பதும் வனப்பகுதி நிலங்களில் வாழும் மக்களின் வாழ்வுரிமைகளை பறித்து வரும் சூழலில் “வன ஆணையம்” அமைப்பது பழங்குடி, மலைவாழ் மக்கள் வாழ்வுரிமையை பாதுகாக்கும் என நம்புகிறோம்.

முதலீட்டை ஈர்க்கும் முதன்மை மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் தனியார் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துவதில் வேலை வாய்ப்பை உருவாக்க கருதுவது போதுமானதல்ல. சிறப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும். தொழிலாளர் பணிநிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு உறுதி செய்வதில் தான் உற்பத்தி ஆற்றல் மேம்படும் என்பதை நிதிநிலை அறிக்கை கவனம் செலுத்த வேண்டும்.

சிறு, குறு, நடுத்தர தொழில்களை ஊக்கப்படுத்த நேரடி கடனுதவி உட்பட சலுகைகள் தாராளமாக கிடைக்கச் செய்ய வேண்டும்.

அரசிலும், பொதுத் துறையிலும் உள்ள தொகுப்பூதிய, ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர் பார்த்தவர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்பத் துறையிலும், அன்னிய முதலீட்டுத் தொழில்களிலும் வேலை செய்து வருவோர் நலனை பாதுகாக்க அரசு உறுதியான திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும்.

நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்தை நிறைவு செய்யும் போது நிதியமைச்சர் மக்கள் உணர்வுகளை கருத்தில் கொண்டு தீர்வு காண்பார் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு எதிர்பார்க்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button