நாட்டுக்கு பெருமை சேர்த்த ஆஷா பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ 18 ஆயிரம் ஊதியம் வழங்க, ஒன்றிய, மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும்
சர்வதேச விருது பெற்ற ஆஷா பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள்!!!
ஜெனிவாவில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் ஆஷா பணியாளர்ளின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை பாராட்டி, “சர்வதேச மருத்துவத் தலைவர்கள் ” என்ற விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருதை வேறு ஐந்து சர்வதேச அமைப்புகளோடு சேர்ந்து ஆஷா பணியாளர்கள் பகிர்ந்து கொள்ளும் பெருமை படைத்துள்ளனர்.
கடுமையான பணிச் சூழலில், பாதுகாப்பற்ற பணியாக தொடரும் நிலையில், கோவிட் 19 அலை அலையாக, தொடர்ந்து தாக்குதல் நடத்திய போதும் தாய்- சேய் நலன், மற்றும் நோய் பரவல் தடுப்புப் பணியில் ஆஷா பணியாளர்களின் சேவை என்றென்றும் நினைவுகூறத்தக்கது. இவர்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்குவதில்லை. ஊக்கத்தொகை என்ற முறையில் சிறு தொகை வழங்கப்படுவது நியாயமற்ற பணியாளர் நடைமுறையாகும்.
அரசின் அழைப்பை ஏற்று, ஆஷா பணியில் சேர்ந்து, பணிபுரிந்து வரும் அனைவரையும் நிரந்தரமாக்க வேண்டும். ஊராட்சிக்கு ஒரு ஆஷா என்கிற முறையில் புதிய நியமனம் செய்ய வேண்டும். இதன் முக்கியத்துவத்தை உலக சுகாதார அமைப்பு உணர்ந்து பாராட்டி, விருது வழங்கியிருப்பது மிகவும் பொருத்தமானது.
நாட்டுக்கு பெருமை சேர்த்த ஆஷா பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ 18 ஆயிரம் ஊதியம் வழங்க, ஒன்றிய, மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துவதுடன் சர்வதேச மருத்துவத் தலைவர்கள் விருது பெற்று, சாதனை படைத்த ஆஷா பணியாளர்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.