நாசிசத்துடனான அமெரிக்காவின் வரலாற்று தொடர்பு
நடைபெற்று வரும் ரஷ்ய-உக்ரைன் போரில், ரஷ்யாவுக்கு எதிரான சர்வதேச சமூகத்தின் பிரச்சாரம், பனிப்போர் காலத்தில் சோவியத் ஒன்றியம் மற்றும் கம்யூனிச சித்தாந்தத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களையும் மிஞ்சுவதாக உள்ளது.
பொருளாதார தடைகள் மட்டுமின்றி, ரஷ்ய கலைஞர்கள் மற்றும் தடகள வீரர்கள் மீதும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் இணைந்து ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் ஈராக் மீது போர் தொடுத்த போது, ஜனநாயகவாதிகளும் சோஷலிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும் அமெரிக்கா மற்றும் நேட்டோ வுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதில் தவறிவிட்டனர். அந்நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஏகாதிபத்திய அபிலாஷைக்காக அவற்றின் மீது போர் தொடுக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போர் முடிவுற்றவுடன், நாஜிக்கள் தங்களின் அறிவு மற்றும் தீர்க்கமான நம்பிக்கையின் அடிப்படையில், சோவியத் ஒன்றியம் மற்றும் கம்யூனிசத்திற்கு எதிரான போராட்டத்தில் தங்களை முக்கிய கூட்டாளிகளாக இணைத்துக் கொண்டனர். உக்ரைனில் அமெரிக்க ஆதரவு பெற்ற செலன்ஸ்கி அரசாங்கத்தில் நவீன நாஜிக்கள் இடம்பெற்றுள்ளது நாசிசத்தை மீண்டும் ஒரு விவாதப் பொருளாக்கி உள்ளது.
அமெரிக்காவில் கம்யூனிச சித்தாந்த எதிர்ப்பும், இனவெறியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. இனவெறி மற்றும் வெள்ளை நிற மேலாதிக்கம் ஆகிய இரண்டும் நாசிசம் மற்றும் பாசிசத்தின் பொதுவான அடிப்படைகள் ஆகும். ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களின் ஒருமைப்பாடு மற்றும் கம்யூனிசத்திற்கு எதிரான போராட்டத்தில் பாசிசம் மற்றும் நாசிசத்துடன் அமெரிக்க முதலாளிகளும், நிறவெறியர்களும் இணைந்து நின்றதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது உக்ரைன் நாட்டின் நவீன நாஜிக்களுக்கான அமெரிக்க ஆதரவைப் புரிந்து கொள்ள முடிகிறது.
பனிப்போர் காலகட்டத்தில், பூமண்டலத்தின் மீது முதலாளித்துவ பொருளாதார அமைப்பைத் திணித்து, மேற்குலக வல்லரசு நாடுகளின் மேலாதிக்கத்தை நிறுவுவதே கம்யூனிச எதிர்ப்புப் போராட்டத்தின் ஒற்றை நோக்கமாகும். அதே நோக்கத்துடன், அதே வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெறும் கம்யூனிச எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு நீட்சியாகவே தற்போதைய ரஷ்ய எதிர்ப்பு பிரச்சாரமும் இருக்கிறது.