நவீன-தாராளமய பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டம் – சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் கூட்டத்தில் டாக்டர் கே நாராயணா முழக்கம்!
சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 22 வது கூட்டம் அக்டோபர் 26 முதல் 28 வரை கியூப நாட்டின் தலைநகரம் ஹவானாவில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அதன் தேசிய செயலாளர் டாக்டர் கே நாராயணா பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவரது சிறப்புரை பின்வருமாறு:
தோழர்களே,
சிறப்பானதொரு வருங்காலத்துக்காக, உலகம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு, இந்நேரத்தில் எமது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். எல்லைகளையும், கண்டங்களையும் கடந்து, ஒற்றுமையுடன் நாம் தொடுக்கும் போராட்டங்களைப் பற்றிய முக்கியமான நிகழ்வாக, உலகம் முழுவதிலும் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. சர்வதேசியம் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுடனான ஒற்றுமை உணர்வில் நமது மார்க்சிய வேர்கள் உறுதியாக நிலைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு தங்களது ஆதரவை நல்கிய கியூப மக்கள் மற்றும் கியூப கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பொருளாதார தடைகள் மூலமாக கியூபா மீதான தனது பிடியை மேலும் இறுக்குவதற்கு ஏகாதிபத்தியம் முயன்று வரும் இந்தச் சூழலில், கியூபா இந்தக் கூட்டத்தை நடத்துவது குறிப்பிடத்தக்கதாகும். கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின் கீழ் முன்னேறும் கியூப மக்களின் புரட்சிகர உணர்வைப் பொருளாதார தடைகள் மூலம் நசுக்க முடியாமல் ஏகாதிபத்தியம் தோல்வியுற்று வருகிறது.
கியூப மக்கள் நாள்தோறும் இன்னல்களை எதிர்கொண்டு வந்தாலும் கூட, சர்வதேசிய நெறிமுறைகளை கியூபா உயர்த்திப் பிடித்து வருகிறது; நெருக்கடியான காலங்களில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டுகிறது. கோவிட் 19 பெருந்தொற்றின் போதும், உலக நாடுகள் அனைத்தும் அவற்றைப் பாதுகாத்துக் கொள்வதையே முன்னுரிமையாகக் கொண்டிருந்தன. ஆனால், கியூபா கோவிட் பெருந்தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மருத்துவக் குழுக்களை அனுப்பியது. கியூப மக்களின் புரட்சிகர சர்வதேசியத்திற்கு எனது வீரவணக்கம்!
கியூப மக்களை ஆதரிப்பது எமது கட்சியின் முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். கியூப மக்களுக்கான எமது ஆதரவு இருமடங்காக அதிகரிக்கப்பட வேண்டும் என்று தற்போது உள்ள சூழல் கோருவதாக நாங்கள் கருதுகிறோம். சமத்துவம், சுதந்திரம் மற்றும் நீதி ஆகியவற்றுக்கான கியூப மக்களின் போராட்டங்கள் கியூப கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் கீழ் வென்றெடுக்கப்பட்டுள்ளன. சோஷலிசத்தைக் கட்டமைப்பதில் கியூப கம்யூனிஸ்ட் கட்சி முன்னேறி வருகிறது.
கண்ணியம் மற்றும் போராட்ட உணர்வின் கலங்கரை விளக்கமாகத் திகழும் கியூப மக்கள் மற்றும் கியூப புரட்சிக்கான எமது ஆதரவை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். கியூபாவிற்கு எதிரான தடைகளை நீக்க வேண்டும் என்று கூறுகிறோம்.
அன்பார்ந்த தோழர்களே,
சர்வதேச அளவில் தற்போது, முதலாளித்துவ நெருக்கடி தீவிரமாகி வருவதையும், முதலாளித்துவம், அதன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக பாசிச வழிமுறைகளைச் சார்ந்து வருவதையும் நாம் காண்கிறோம். இந்தப் போக்கு மிகவும் அபாயகரமானது. நமது எதிர்கால உத்திகளை வகுத்திட இந்தப் போக்கு குறித்து விரிவாக ஆய்வு செய்திட வேண்டும். முதலாளித்துவம் அனைத்து வடிவிலான சமூக ஒற்றுமை உணர்வுகளை தகர்த்துள்ளது; தனிநபர் போக்கு அதிகரித்து வரும் உலக அமைப்பில், தடையற்ற நுகர்வு கலாச்சாரத்தை மேலும் வளர்த்தெடுத்துள்ளது. புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கையின்படி, சமூக நல திட்டங்களைத் திரும்பப் பெறுவது என்பது, பெரும் எண்ணிக்கையிலான மக்களைப் பாதுகாப்பற்ற, நிச்சயமற்ற நிலைக்கு கொண்டு செல்லும். சமத்துவமின்மை, வேலை இழப்பு, குடியிருப்புகள் அகற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடு, வேலையின்மை, பணவீக்கம் இன்ன பிற பிரச்சனைகள் உண்டாக்கும் கவலைகள் மற்றும் துன்பங்களை வலதுசாரி சக்திகள் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயன்று வருகின்றன. மக்களின் வாழ்வை மேம்படுத்துவதில் புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் தோல்வி அடைந்துள்ளன. இதனை மறைப்பதற்காக, இனவாத, மதவாத, சாதி அடிப்படையிலான வேற்றுமைகள் மீது குற்றஞ்சாட்டும் சிந்தனை மடைமாற்றம் செய்யப்படுகிறது; மக்களிடையே மோதல் ஏற்படுத்தப்படுகிறது. மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் வலதுசாரி சக்திகளின் வளர்ச்சியை இந்தப் பின்புலத்தில் நாம் கண்டுணர வேண்டும்.
அதிகரித்து வரும் வறுமை மற்றும் பொருளாதார இன்னல்கள் காரணமாக, இது போன்ற பிரிவினை அரசியல் நீடிக்காது என்பதை நவீன-தாராளமய பொருளாதார அறிஞர்கள் அறிந்துள்ளனர். எனவே தான், நவீன-தாராளமய முதலாளித்துவம், அதன் நலனைப் பாதுகாத்துக் கொள்ள, பாசிச அரசியல் கட்சிகள் மற்றும் வழிமுறைகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளது. இந்தப் போக்கு பொருளாதார ரீதியாக விளிம்பு நிலையில் உள்ளவர்களை மட்டுமின்றி அடிப்படை உரிமைகளற்று இருக்கும் மக்களுக்கும் ஒரு மோசமான சூழலையே உருவாக்குகிறது. முதலாளித்துவ பேராசையின் காரணமாக, மனித உரிமைகள் மற்றும் சமூக உரிமைகள் நசுக்கப்படுவதை நாம் பார்க்கிறோம். இது குறித்து நாம் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். மனித உரிமைகள் மற்றும் சமூக உரிமைகள் மீதான வன்மத்தை வெளிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் நாம் எதிர்த்துப் போராட வேண்டும்.
கியூபாவில் நாம் கூடியுள்ள இந்தத் தருணத்தில், பல நாடுகள் போரினால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன. ஏகாதிபத்திய சதித்திட்டத்தின் காரணமாக, பெண்களும், குழந்தைகளும் கட்டாய புலம்பெயர்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இராணுவ மோதல் அணு ஆயுதப் போராக மாறக்கூடிய அச்சுறுத்தல் நம் முன் உள்ளது. இந்த நிலையானது, போர் நடைபெற்று வரும் அந்தப் பிராந்தியத்தின் அமைதிக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உலக அமைதிக்கும் அச்சுறுத்தல் உண்டாக்கி இருக்கிறது. அணு ஆயுதப் போர் மனித நாகரிகத்தைப் பின்னோக்கிச் தள்ளுவதுடன், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மீது நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு துன்பங்களைக் கட்டவிழ்த்து விடும் அபாயம் உள்ளது. அணு ஆயுதமற்ற, அமைதி நிறைந்த, சமத்துவ சமுதாய அமைப்பை உருவாக்கிட உழைக்க வேண்டியது நமது கடமை ஆகும். வருங்கால தலைமுறையினருக்கு ஒரு பொன்னுலகை நாம் விட்டுச் செல்ல வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வீச்சு சக்தி வாய்ந்ததாக உள்ளது. ஆனால், வெறுப்புணர்வு, வகுப்புவாதம் மற்றும் வன்முறைகளைத் தூண்டக்கூடிய கருத்துகளைப் பரப்புவதற்காக தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இணையதளத்தில் மிகப்பெரும் பங்காற்றும் நிறுவனங்கள் வலதுசாரி ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. இணையதள நடுநிலைக்காகப் போராட வேண்டியது நமது கடமையாகும். இணையம் வழங்கும் கற்றல் வாய்ப்புகள் ஒரு சிலரின் ஏகபோகமாக இருத்தல் கூடாது. தேவையின் அடிப்படையில் அனைவருக்கும் இணையத்தின் பயன்கள் கிடைத்திட வேண்டும். அடிப்படையான மனித மற்றும் சமூக உரிமையாகப் பார்க்கப்படும் இது போன்ற வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைத்திட நாம் பாடுபட வேண்டும்.
அன்பார்ந்த தோழர்களே,
முதலாளிகளே செல்வ வளங்களை உருவாக்குபவர்கள் என்று பரப்புரை செய்யும் நவீன-தாராளமயம், தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை கிஞ்சிற்றும் மதிப்பதில்லை. நவீன-தாராளமயம் கோலோச்சுகிற நாடுகளில் தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மாற்று செயல்திட்டத்தின் மூலம் உழைப்பின் மகத்துவத்தை நாம் மீண்டும் நிறுவிட வேண்டும். எனவே, எதேச்சதிகார மற்றும் பாசிச அரசாங்கங்களுக்கு எதிரான நமது போராட்டங்களில் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதே நமது போராட்டங்களின் மையக்கூறு ஆகும். நமது இக்கடமை குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் நாம் கவனமாக இருந்திட வேண்டும்.
தற்போதுள்ள சர்வதேச சூழல் மோசமாகவே உள்ளது. உலகமயம் உருவாக்கியுள்ள பிரச்சனைகளின் விளைவுகளை நேர்த்தியாகப் பயன்படுத்துவது, சமூக இயக்கங்களை அதற்கேற்ப இணைப்பதில் இலத்தீன் அமெரிக்க நாடுகள் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாக மிளிர்கின்றன. அமெரிக்க ஆதரவு பெற்ற வலதுசாரி, பிற்போக்கான அரசாங்கங்களை அதிகாரத்திலிருந்து தூக்கியெறிந்துவிட்டு, இடதுசாரிகள் அல்லது இடதுசாரி ஆதரவு கட்சிகளுக்கு இலத்தீன் அமெரிக்க நாடுகள் வாக்களித்து வெற்றி பெறச் செய்கின்றன. இலத்தீன் அமெரிக்க மக்கள் எதிர்கொண்ட துன்பங்கள் மற்றும் அவர்களது உத்வேகம் அளிக்கக்கூடிய போராட்டங்கள் நமது பரிசீலனைக்கும், பாராட்டுதலுக்கும் உரியவை ஆகும். அவை நமக்கு படிப்பினைகளையும் வழங்குகின்றன.
உரையின் நிறைவாக, தொழிலாளர் உரிமைகள், சமூக உரிமைகள், மனித உரிமைகள், சூழலியல் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான நமது போராட்டங்கள், நவீன-தாராளமயம் கட்டமைத்துள்ள ஏற்றத்தாழ்வுமிக்க உலக அமைப்பின் மீது, ஒன்றுபட்ட தாக்குதலை மேற்கொள்ள வேண்டும். உலகம் முழுவதற்கும் நம்பிக்கை அளித்து வரும் விஞ்ஞான சோஷலிச தத்துவத்தை ஆயுதமாகப் கொண்டிருக்கும் இடதுசாரிகள் அத்தகையதொரு தாக்குதலுக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
உலக அமைதியைச் சீர்குலைக்கும் ஏகாதிபத்திய தலையீடுகளை நாம் உறுதிபட மறுதலிக்க வேண்டும். நமது நாடுகள் சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கம் கொண்ட நாடுகளாகச் செம்மையுற நாம் பாடுபட வேண்டும். நாம் ஒன்றுபட்டுப் போராடினால், வருங்காலத்திற்கான செயல்திட்டத்தை மேலும் செழுமைப்படுத்த முடியும்; மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.
தோழர்களே, நம் முன் உள்ள அச்சுறுத்தல் மிகப்பெரிது என்பதால் நாம் கட்டாயம் ஒன்றுபட வேண்டும். உலகம் முழுவதிலும் அமைதி, நீதி மற்றும் சோஷலிசம் ஓங்கிட நாம் ஒன்றுபட வேண்டும்! வளம் பொருந்திய வருங்காலத்திற்காக நாம் ஒன்றுபட வேண்டும்! ஒற்றுமையே பலம்! நன்றி!
தமிழில்: அருண் அசோகன்