நவம்பர் புரட்சியின் பதாகையை உயர்த்திப் பிடிப்போம்! சாதி, மத அடிப்படைவாத சக்திகளின் பிடியில் இருந்து நாட்டைக் காப்போம்!
நவம்பர் புரட்சி தின வாழ்த்துகள்!
நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் 1917 நவம்பர் 7-ல் மகத்தான ருஷ்யப் புரட்சி தோழர் லெனின் தலைமையில் நடந்தேறியது. வரலாற்றில் முதல் முறையாக உழைக்கும் மக்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள்.
“ஆகாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி” என யுகக்கவி பாரதி அதனை வரவேற்றார்!
“கிழக்கில் உதித்த புதிய நாகரிகம்” என்றார் தாகூர்!
ருஷ்யப் புரட்சி அடிமைப்பட்டு கிடந்த நாடுகளில் விடுதலையை உந்தித் தள்ளியது. ஆசிய – ஆப்பிரிக்க நாடுகளில் விடுதலை போர்கள் வாகை சூடியது.
நட்புறவு – சமாதானம் குறித்த புதிய பிரகடனங்கள் தோன்றின.
இந்திய சோவியத் நட்புறவு வளர்ந்தது. கலாச்சார வர்த்தக பரிவர்த்தனைகள், விண்வெளி ஆய்வு, தொழில் வளர்ச்சி என ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
உலகை மறுபங்கீடு செய்யத் துடித்த பாசிச சக்திகளால் இரண்டாம் உலகப் போர் உருவெடுத்தது. இரண்டு கோடிக்கும் அதிகமான மக்களைப் பலிகொடுத்து தோழர்.ஸ்டாலின் தலைமையில் செஞ்சேனை மகத்தான வெற்றி பெற்றது. பாசிச இட்லரும், அச்சு நாடுகளும் தோற்கடிக்கப்பட்டன.
இன்றைய உலகில் நாடுகளின் சுதந்திர சிந்தனைகளால் அணிசேராக் கொள்கையும், ஜனநாயக விழுமியங்களும் வளர்ந்துள்ள சூழலில் ஏகாதிபத்தியத்தின் நிதி மூலதனமும், அமெரிக்க தலைமையிலான நேட்டோ இராணுவ கூட்டமைப்புகளும் நாடுகளை வளைக்கத் துடிக்கின்றன. அவற்றின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துகின்றன. இதன் வெளிபாடுதான் ரஷ்யா உக்ரைன் போர்.
போர்களற்ற நீடித்த சமாதானம் தான் நவம்பர் புரட்சியின் முதல் பிரகடனம்.
இந்தியாவில் இன்றைய அரசியல் சூழலில் நாடு கடந்த நிறுவனங்களின் இலாப வேட்டைகளும், ஏகாதிபத்திய அரசியல் சூழ்ச்சிகளும், ஜாதி, மத அடிப்படைவாத சக்திகளின் முன்னெடுப்புகளும் அதிகரித்து வரும் சூழலில் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டையும் உலக சமாதானம் நாடுகளின் நற்புறவைப் பேணவும், சமத்துவத்தைப் பேணவும் நவம்பர் புரட்சியின் பதாகையை உயர்த்திப் பிடிப்போம்!