நளினி உள்ளிட்டோர் விடுதலை: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, பி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஆறு பேர்களையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
இந்த வழக்கில் தண்டனை பெற்ற கு.பேரறிவாளன் கடந்த மே மாதம் விடுதலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அனைவரும் முப்பதாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுக்குப் பலமுறை கடிதங்கள் அனுப்பியுள்ளது. சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீதும், தமிழக அரசின் கடிதங்கள் மீதும் அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற ஆளுநரும், ஒன்றிய அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு காலத்தில் விடுதலை செய்யத் தவறிவிட்டனர். இதன் தொடர்ச்சியாக, நடத்தப்பட்ட சட்டப் போராட்டத்தில் உச்சநீதிமன்றம் நளினி உள்ளிட்ட ஆறு பேர்களையும் விடுதலை செய்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.