நடப்பு 2021-ம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து வரும் பண வரவில் உலக நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குப் பணம் அனுப்புவது குறித்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி 2021ம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு 87 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.6.46 லட்சம் கோடி) பணம் அனுப்பப்பட்டுள்ளது. உலகிலேயே இந்தியாவிற்குத்தான் வெளிநாடுகளில் இருந்து அதிகமான பண வரவுகிடைத்துள்ளது. கடந்த ஆண்டுஇந்தியாவுக்கு 83 பில்லியன் அமெரிக்க டாலர் பணம் அனுப்பப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் 4.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதில் 20 சதவீதத்துக்கும் மேலான பண வரவு அமெரிக்காவில் இருந்து வந்திருப்பதாக உலகவங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்தியாவுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலமாக அனுப்பப்பட்ட பணம், கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்துக்குப் பெரிய அளவில் பங்களித்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு சொந்த நாட்டுக்குப் பணம் அனுப்புவதில் இந்தியர்களுக்கு அடுத்தபடியாக சீனா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், எகிப்து ஆகிய நாட்டினர் உள்ளனர். மேலும் குறைந்த மற்றும் நடுத்தரவருமான நாடுகளுக்கு வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணம்இவ்வாண்டில் 7.3 சதவீதம் என்ற வலுவான வளர்ச்சியுடன் 589 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. -பிடிஐ