தமிழகம்

நசுக்கி விடலாம் என நினைக்காதீர்! உடைத்து நுழைவான் தொழிலாளி!!

தோழர் டி எம் மூர்த்தி முகநூல் பதிவில் இருந்து…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழிலாளர் மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்து நீண்ட நேரம் மாண்புமிகு தொழிலாளர் அமைச்சர் பேசினார்.இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தி மாநிலம் தமிழ்நாடு. கார் தொழிற்சாலை, அணுமின்சாரம், அனல் மின்சாரம், சிமெண்ட் , இன்ஜினியரிங், பம்பு செட்டு தொழில், பஞ்சாலைகள் என ஏராளமான தொழில்கள்; 2 கோடி தொழிலாளர்கள், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பிரச்சினைகள்!இவையெல்லாவற்றையும்மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தனது பதிலுரையில், இரண்டே வரிகளில் கடந்து சென்றார்.

ஒன்று தமிழகத்திலுள்ள கடைகளில் ஊழியர்கள் அமர்வதற்கு ஸ்டூல் போட வேண்டும் என்று இந்த அரசு உத்தரவிட்டது. இது இடதுசாரி தொழிற்சங்க பிரதிநிதிகளால் மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியத்தின் முன்மொழியப்பட்டு, அண்ணா திமுக ஆட்சிக் காலத்திலேயே எடுத்த முடிவுதான். உத்தரவு போட்டிருக்கிறது தவிர அது கடைகளில் செயல்படுத்தப்படுகிறதா என்று கண்காணிக்க ஒரு நாதியும் இல்லை.

இரண்டாவது, மே தினத்துக்கு சம்பளத்தோடு கூடிய விடுமுறை அளித்து, மே தின பூங்கா என நேப்பியர் பூங்காவுக்கு பெயர் வைத்தது. இது நடந்து ஒரு யுகம் தாண்டிவிட்டது. மேலும் மே தினத்திற்கு சம்பளத்தோடு விடுப்பு வழங்கினோம் என்பதும் உண்மையல்ல. பண்டிகை விடுமுறை சட்டப்படி 9 நாள் விடுமுறை. அதில் ஒரு நாளாக மே தினம் அறிவிக்கப்பட்டது, அவ்வளவே! இது அறிவிக்கப்படாமல் இருந்தாலும் ஒன்பது நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கிடைக்கத்தான் செய்யும்.

இந்த இரண்டுடன் தமிழகத்தில் தொழிலாளர் பிரச்சனைகள் அனைத்தும் முடிந்துவிட்டது!

பிறகு கட்டுமானம் மற்றும் ஆட்டோ தொழிலாளர் வாரியங்களில் மட்டும் வழங்கப்படும் நிதிப் பலன்களில் சிலவற்றை உயர்த்தி அறிவிப்பு தரப்பட்டுள்ளது. இந்த உயர்வுகளும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டவை தான். அத்துடன் இந்த வாரியங்களுக்கு வசூலிக்கப்படும் நல வரியில் இருந்து தரப்படுகின்றனவே தவிர, அரசின் நிதியிலிருந்து அல்ல! இதை தவிர்த்த ஏனைய உடலுழைப்பு தொழிலாளர் வாரியங்களில் இருப்பவர்களுக்கு எந்த உயர்வும் இல்லை. ஏனென்றால் அவற்றுக்கு தனி நிதி இல்லை. உயர்த்தப்பட்டால் அதற்கான நிதியை தர அரசு தயாராக இல்லை. குறைந்தபட்சம் உடல் உழைப்பு வாரியங்களுக்கும் தனி நிதி உருவாக்க, நல வரி வசூலிப்பது குறித்து ஒரு முன்மொழிவை வைத்திருக்கலாம். புது முயற்சிகள் எதுவும் எடுக்க துணிவில்லை. இனி கட்டுமானம் மற்றும் ஆட்டோ வாரியங்கள் செல்ல குழந்தைகளாக, மீதி இருக்கிற வாரியங்கள் அனாதைகளாக தெருவில் விடப்படும்.

தொழிலாளர் நல வாரியத்திற்கு என நிதி இருக்கிறது. இது முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களிடமிருந்தும் வசூலிக்கப்படுகிறது. சென்னை, மாமல்லபுரம், வால்பாறை, குற்றாலம் ஆகிய இடங்களில் உள்ள அதன் விடுதிகளை அதன் சொந்த நிதியிலிருந்து பழுது பார்க்கப் போகிறார்கள். இதைச் சட்ட சபையில் முன்வைத்து நிறைவேற்றி தான் செய்ய வேண்டும் என்று அவசியமே இல்லை. மற்றவை அனைத்தும் திறன் மேம்பாட்டு விஷயங்களாக அமைகின்றன. ஏற்கனவே கட்டுமான தொழிலாளர் திறன் பயிற்சி பள்ளி அமைத்து என்ன செய்தார்கள் என்பதை இந்த மானிய கோரிக்கையில் கூட சொல்லவில்லை.

முத்தரப்பு அமைப்புகளை கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்தது, இ-ஷ்ரம் பற்றி அமைச்சருடன் பேசி வழிகாட்டுமாறு கோரியது, தொழிலாளர் துறை அதிகாரிகள் காலி இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் தொழிலாளர்களுக்கு பல்வேறு வழக்குகள் முடிக்கப்படாமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பதைச் சொல்லி தீர்வு காண முறையிட்டது, ஒவ்வொரு வாரிய தொழிலாளர்களும் அமைச்சரை சந்தித்து தங்களுடைய வெகு சாதாரணமான எதிர்பார்ப்புகளை எல்லாம் கொட்டித் தீர்த்தது போன்றவை எல்லாம் பாலை நிலத்தில் பெய்த மழைதான் என்று இப்போது புரிகிறது.

விவாதித்து இதைச் செய்யமுடியும், இதைச் செய்ய முடியாது என்று பேசி இருந்தால் கூட பரவாயில்லை. அனைத்தையும் செய்து முடித்து விடுகிறோம் என்று சொன்னார்கள். ஆனால் எதையும் செய்யாமல் ஏமாற்றி விடலாம் என அவர்கள் இதயத்துக்குள் எழுதி வைக்கப்பட்டு இருந்ததை நிதர்சனமாகக் காணும்போது பதைக்கிறது.

தற்போது மானிய கோரிக்கையில் வைக்கப்பட்டுள்ள விஷயங்களை எல்லாம் பார்த்தால், தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் முறையீடுகள் அரசின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. அதிலும் திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்க்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ஆகச் சிறந்தது என்று புகழ் பாடி கொண்டாடுவதைக் காணச் சகிக்கவில்லை; அருவருப்பாக இருக்கிறது. இனிமேல் இது தொழிலாளர் துறை இல்லை. திறன் மேம்பாடுத் துறை மட்டுமே என்பதைத் தான் இறுதியில் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

தொழிற்சங்கங்களை கலந்து பேசியது போல மோடி அரசு எவ்வாறெல்லாம் பொய்த் தோற்றம் காட்டுகிறதோ, அதையே தமிழ்நாடு தொழிலாளர் துறையும் கடைப்பிடிக்கிறது. மோடியின் தொழிலாளர் விரோத கொள்கையை எதிர்ப்பது என்றால், அதை அப்படியே செயல்படுத்துகிற தமிழ்நாட்டு அரசையும் சேர்த்து எதிர்ப்பதுதான் என்று புரிந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லாத நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்படுகிறார்கள். புதிய சட்டத் தொகுப்புகள் வரப்போகின்றன. அவற்றின் மூலம் தொழிற்சங்கங்களை ஒழித்துவிடலாம், தொழிலாளர்களின் கோரிக்கைகளை மேலெழும்ப விடாமல் நசுக்கி அழித்துவிடலாம் என மோடி அரசுடன் சேர்ந்து தமிழ்நாடு தொழிலாளர் துறையும் மனப்பால் குடித்தால், அவற்றை எல்லாம் உடைத்து நொறுக்கி தமிழக தொழிலாளர்கள் முன்னேறுவார்கள் என்பதை மட்டும் சொல்லி வைக்கிறோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button