தமிழகம்

நகைக் கடன்கள் தள்ளுபடி நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.கழகம் சட்டமன்ற தேர்தலில் உறுதியளித்தது.

கொரோனா நோய்த்தொற்று பரவல் கால நெருக்கடி காலத்தில் சாதாரண மக்களும், அடித்தட்டு பிரிவினரும் தங்கள் கைகளில் இருந்த அற்ப சொற்ப நகைகளை அடகு வைத்து வாழ்க்கை நெருக்கடிகளைச் சமாளித்து வந்தனர்.

இவர்களுக்கு கடன் தள்ளுபடி உறுதிமொழி பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் 13.09.2021 ஆம் தேதி சட்டமன்றத்தில் நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டார். அதில் நகைக்கடன்கள் குறித்து, பகுப்பாய்வு செய்து. நிபந்தனைகள் விதித்து, கடன் தள்ளுபடி பெறுவதற்கான தகுதிகள் நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார். இதன்படி கடன் தள்ளுபடியால் அரசுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்றும் அறிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் 48 லட்சத்து 84 ஆயிரத்து 726 நகைக் கடன்களை பரிசீலித்து, அதில் 35 லட்சத்து 37 ஆயிரத்து 693 நகைக் கடன்கள் தள்ளுபடி பெற தகுதி இல்லாதவைகள் என அறிவிக்கப்பட்டன.அதாவது நகைக் கடன்களில் 72 சதவீதத்துக்கும் அதிகமாக கடன்கள் தள்ளுபடி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.அதாவது 48 லட்சத்து 84 ஆயிரத்து 726 நகைக் கடன்களில் 10 லட்சத்து 18 ஆயிரத்து 66 கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

முந்தைய ஆட்சிகாலத்தில் கடன் வழங்குவதிலும், பெறுவதிலும் தவறு நடந்திருப்பதைக் கண்டறிந்து தடுக்கப்பட வேண்டும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. அது உறுதியாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதேசமயம் ஏஏஒய் குடும்ப அட்டை பெற்றுள்ள, வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழும் குடும்பங்கள் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியில்லை என்று அறிவித்திருப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பரம ஏழையாக இருந்தாலும் சிரமப்பட்டு சேமித்து, கொஞ்சமாவது நகை வாங்குவதும் அணிவதும் தமிழர் பண்பாடு என்பதை அரசு கருத்தில் கொண்டு, ஏஏஒய் குடும்ப அட்டைதாரர் குடும்பங்களுக்கும் 5 சவரன் வரையான நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும் வகையில் புதிய அரசாணை வெளியிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button