தமிழகம்

தோழர் ஜீவா : தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குரல்!

-சரவணன் வீரைய்யா

உலகமயமாக்கலின் பிந்தைய இந்திய சமூகம் குறிப்பான வகையில் எல்லா மட்டங்களிலும் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்திய சமூக அரசியல் வரலாற்றை மூன்று கட்டங்களில் நின்று பகுப்பாய்வு செய்ய வேண்டியிருக்கிறது. அந்த மூன்று கட்டங்களை பின்வருமாறு பிரித்துக் கொள்ளலாம்.

  1. விடுதலைக்கு முந்தைய காலனிய சமூகம் ,
  2. விடுதலைக்கு பின்- உலகமயமாக்கலுக்கு முன்பான இந்திய சமூகம் ,
  3. உலகமயமாக்கலுக்கு பிந்தைய இந்திய சமூகம்.

இவற்றில், மூன்றாவதாகவுள்ள காலத்தின் நான்காவது பத்தாண்டில் நாம் இருக்கின்றோம். இக்காலத்தின் முதல் மூன்று பத்தாண்டுகளை முதலாளிய சமூகத்தின் நெருக்கடியானது அதனை மீட்டெடுக்கும் வகையில் அதற்கு தேவையான பல்வேறு வகையான கட்டமைப்பு மாற்றங்களைச் செய்து வந்திருக்கிறது. குறிப்பாக, முந்தைய நேரு – இந்திராகாந்தி முன்னெடுத்த அரச-சோசலிச முன்னெடுப்புகளைத் தகர்த்து, தனியார்-தாராளமய மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகளை அமலாக்கியது.

முதலாளிய சமூக அமைப்பின் நெருக்கடியில் இருந்து அதன் மீட்டெடுப்பை உறுதிபடுத்தும் வகையில் உலகவங்கி , பன்னாட்டு நிதியம் ஆகியவற்றின் உதவியோடு கொள்கையளவிலான முடிவை முன்னெடுத்தாலும் அதற்கான அரசியல் தளத்தில் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியானது முட்டுக்கட்டையாக இருந்து வந்த நிலையில், மோடி தலைமையிலான பா.ஜ.க வின் பெரும்பான்மை ஆட்சியானது விடிவைத் தந்துள்ளது.

மோடியின் முதல் ஐந்தாண்டு ஆட்சியில் முதலாளிய நிதி நெருக்கடியிலிருந்து தப்பிக்க வங்கிக்கு வெளியே சுற்றும் நிதி மூலதனத்தை வங்கிக்குள் கொண்டு வரும் விதமாக அனைவருக்கும் வங்கியோடு இணைப்பை உருவாக்கி, பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை (GST) -வரி விதிப்பு போன்ற நடவடிக்கையை மேற்கொண்டு சிறு குறு வணிகத்தையும், அதனை நம்பிப் பிழைத்த தொழிலாளர்களையும் நடுத்தெருவில் நிறுத்தியது.

பிறகான இரண்டாம் முறை ஆட்சி பொறுப்பேற்ற துவக்கத்திலிருந்தே, மூன்று வேளாண் சட்டங்கள் , தொழிலாளர் சட்ட தொகுப்புகள் ஆகியவற்றை நிறைவேற்றுவதின் மூலமாக முதலாளிய நெருக்கடி கோருகின்ற மாற்றத்தை அதாவது, அதிகமான கிராமப்புற மக்களை அவர்களின் வேளாண் உற்பத்தி முறையிலிருந்து வெளியேற்றுவதும், அதே நேரத்தில், தொழிற்சாலைகளுக்கு குறைந்த கூலியில் எந்தவிதமான நிபந்தனையுமின்றி உழைப்பு சக்திகளாக மக்கள் சக்திகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளைத் துரிதபடுத்த ஆரம்பித்துள்ளது. இந்த நெருக்கடியை உருவாக்கும் முதலாளிய சுரண்டல் முரண்பாட்டைத் திசை திருப்பும் விதமாகப் பண்பாட்டு அடையாள அரசியலை முன்னெடுக்கும் வேலைகளில், மக்களை மழுங்கடிக்கும் அரசியலை ஆளும் வர்க்கம் கையிலெடுக்கிறது. இப்படியான சமூக சூழலில், தனது வாழ்நாள் முழுவதும் தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குரலாக ஒலித்த தோழர். ஜீவாவின் அரசியல் சிந்தனைகளையும், போரட்ட வாழ்வையும் நமது சிந்தனையில் ஏந்துவது இருளில் ஒளியூட்டுவதாக அமையும்.

தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குரலாக ஒலித்த தோழர். ஜீவா

தோழர். ஜீவாவின் பொருள்முதல்வாத பார்வை

மார்க்சியத்தின் அடிப்படையான பொருள்முதல்வாத பார்வையைத் தோழர் ஜீவா தன்னகத்தே கொண்டு இந்தச் சமூகத்தோடு ஊடாடினார். ஆரம்ப காலத்தில் சிராவயல் காந்தி ஆசிரமத்தினை தோற்றவித்து மாணவர்களுக்கு கல்வி புகட்டியவர் ஜீவா. 1932 ல் கோட்டையூரில் கைது செய்யப்பட்டு கடலூரில் சிறை வைக்கப்பட்ட தோழர் ஜீவா, லாகூர் சதி வழக்கில் கைதான பி.கே.தத் உள்ளிட்ட தோழர்களுடனான தொடர்பின் காரணமாக மார்க்சிய தத்துவங்களைக் கற்றுத் தெளிந்தார்.

சிறையிலிருந்து வெளிவந்த ஜீவா, பொதுவுடைமை சிந்தனையாளராக வந்தார். அவர் சிறையிலிருக்கும் போது, சோவியத் ரஷ்யாவின் முதலாவது ஐந்தாண்டு திட்டத்தைத் தமிழுக்கு மொழியாக்கம் செய்திருந்தார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

தோழர். ஜீவா பெரியாரோடு சேர்ந்து சுயமரியாதை சமதர்ம கட்சியைத் தோற்றுவித்த போதும், கருத்தியல் முரண் கொண்டு பெரியாரிடம் இருந்து விலகுகிறார். இங்கு கருத்தியல் முரணாக சமூகம் குறித்த பொருள்முதல்வாத பார்வை முன் வருகிறது. பெரியாரின் பகுத்தறிவு நாத்திகத்திலிருந்து மாறுபட்டு பொருள்முதல்வாத நாத்திகத்தை தோழர்.ஜீவா முன் வைக்கிறார். பெரியார் சமூகத்தில் மக்களிடையே நிலவி வந்த பிற்போக்கு மத, கடவுள் நம்பிக்கைகளைச் சாடினார். மாறாக ஜீவா, மத கடவுள் நம்பிக்கைகள் மக்களிடம் நிலவுவதற்கான சமூக பொருளாதார காரணிகளை ஆய்வுக்குட்படுத்துகிறார். அதனடிப்படையில், சமூக உற்பத்தி முறையே மக்களின் துன்ப துயர வாழ்வுக்கு அடிப்படை. இந்த நெருக்கடியான வாழ்விலிருந்து விடிவைப் பெற இயலாத மனிதர்கள் மதத்தில் தஞ்சம் புகுகின்றனர் என்று மார்க்ஸ் எங்கெல்ஸ் ,லெனின் வகுத்த கோட்பாட்டில் நின்று தன்னை நாத்திக கம்யூனிஸ்ட் என இவ்வாறாக அறிவிக்கிறார்.

“எல்லாவிதமான அடக்கல் – ஒடுக்கல் அடிமைத்தனங்களையும்,
சுரண்டல் சூறையாட்டங்களையும் இந்தப் பூமண்டலத்திலிருந்து
துடைத்து எறிந்துவிட்டு மனிதனுடைய சிறந்த இன்பத்திற்கும்
வளர்ச்சிக்கும் இன்றியமையாத பெளதீகச் சூழ்நிலைகளையும்,
சாதனங்களையும் படைக்கவே நான் போராடுகிறேன். மனிதத்
தன்மையின் மாண்புகளைக் காலடியில் தள்ளி மிதித்துத் துவைக்கும்
எல்லா பிற்போக்குத் தீமைகளுக்கும் எதிரிடையான இந்த
அறப்போரில் எனது பொருள்முதல்வாதமும் எனது நாத்திகவாதமும்
எனக்கு மாபெரும் சக்தியையும் உணர்ச்சிப் பெருக்கையும் ஊட்டுகின்றன”.

மக்கள் மதம் மற்றும் பிற்போக்கு நடவடிக்கைகளிலிருந்து வெளிவர வேண்டுமெனில் இந்தச் சமூக உற்பத்திமுறையானது அடியோடு தூக்கியெறிப்பட வேண்டும், அதற்கான திட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் பணி செய்ய, கடவுள் நம்பிக்கையுள்ள வெகுசன மக்களும் உறுப்பினராக இருக்க முடியும் என்கிற அளவில் பொருள்முதல்வாத பார்வை கொண்டு தோழர்.ஜீவா இயங்குகிறார். பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட தோழர். பகத்சிங்கின் ‘நான் ஏன் நாத்திகன் ?’ நூலை தமிழுக்கு மொழியாக்கம் செய்தார்.

மேலும், பெரியார் மீதான விமர்சனமாக ‘ஈரோட்டுப் பாதை சரியா ?’ என்கிற நூலினை எழுதினார். இப்படியாக, அன்றைக்குப் பண்பாட்டு தளத்தில் வேலை செய்த, பிரச்சாரத்தின் மூலமாக சமூக சீர்திருத்தவாத செயல்பாட்டை, பொருள்முதல்வாத அடிப்படையில் நின்று, விமர்சனத்தை அரசியல் தளத்தில் முதன்மையாகச் செய்தார்.

அடையாள அரசியலுக்கு எதிரான ஜீவா

திராவிட அரசியலுக்கு எதிராக சிம்ம சொப்பனமாக விளங்கிய ஜீவா, அவரின் வர்க்க சிந்தனை அரசியலில் இருந்து தொடர்ச்சியாக திராவிட இயக்க முன்னெடுப்புகளான சாதி ஒழிப்பில், மொழிப் போராட்டங்களில் அடையாள போரட்டங்களை விமர்சிக்கிறார். மொழிப் பிரச்சனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானத்தை
விளக்கி அதன் வழியில் நின்று இவ்வாறாகப் பேசுகிறார்.

“இன்று நமக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டது, அந்நியர் ஆதிக்கம் அகன்று விட்டது. தமிழ் ராஜ்யம் பெற்றுள்ள நாம், தமிழே எல்லாத் துறைகளிலும் அரசு வீற்றிருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பே. வேறு எந்தப் பிரச்னையில் நம்மிடையே கருத்து வேற்றுமை இருந்தாலும் இந்தப் பிரச்னையில் கருத்து வேற்றுமை இருக்க இடமில்லை. சட்ட சபையில் தமிழ் மொழி ஆட்சி செலுத்த வேண்டும். சர்க்கார் காரியாலயங்களில் அவை ராஜ்ய சர்க்கார் காரியாலயமாயினும் சரி, மாவட்ட, வட்ட ஸ்தல அரசாங்க
அலுவலகங்களாயினும் சரி எங்கும் தமிழே ஆட்சி செலுத்த வேண்டும். கல்லூரிகளில் தமிழ்! விஞ்ஞானத்தில் தமிழ்! தொழில்நுட்பத்தில் தமிழ்! உயர்நீதி மன்றம் முதல் சகல நீதிமன்றங்களிலும் தமிழ்! இவ்வாறு தமிழகமெங்கும் தமிழ் மொழி தனியரசு ஓச்ச
வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி இத்தனை கோரிக்கைகளோடு மட்டும் நிற்கவில்லை. இந்திய பாராளுமன்றத்தில் தமிழகப் பிரதிநிதிகள் தமிழில் பேசவும், சகல தஸ்தாவேஜுகளும் தமிழர்களுக்கு தமிழில் கிடைக்க உத்தரவாதம் வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளெல்லாம் தமிழனுக்கு தமிழில் கிடைக்க உத்தரவாதம் வேண்டும். அதுமட்டுமல்ல, தமிழ் நாட்டிலிருக்கும் மத்திய அரசாங்கத்தின் பல்வேறு துறை கிளைகள், தமிழ் மக்களோடு தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும்.”

மொழி ஒரு உற்பத்திக் கருவி என்ற அடிப்படையில் மேற்கண்டவாறு பிரதேசவாரியாக சமூக உற்பத்தியில் ஈடுபடுகின்ற உழைக்கும் மக்களின் உற்பத்தி பங்கெடுப்பிற்கு வழியாக முன் வைக்கிறார். மாறாக, திராவிட இயக்கத்தினரின் இந்தி எதிர்ப்பு என்ற அடையாள ஏமாற்றுக்களைத் தீவிரமாக விமர்சிக்கின்றார். திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல்களான, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உக்கிரமாக பங்கேற்ற, தி.மு.கவும் அ.தி.மு.கவும் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்திலிருந்தும் மேற்கண்ட நிலையை உருவாக்குவதில் இன்னும் முழுமையடையவில்லை. ஆனால், அதற்கு மாறாக, இன்றும் உற்பத்தியில் ஈடுபட்டு பொருள் ஈட்டும் வகையில் , முன்னேறிய வர்க்கத்திற்கு ஆங்கில வழிக் கல்வியை ஊக்குவித்துவிட்டு மறுபக்கம் மொழிவழி அடையாள அரசியலை முன் வைக்கின்றனர்.

ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் கம்யூனிஸ்ட்களின் பங்கு குறித்தும் அதன் நடைமுறையில் வர்க்கப் போராட்டத்திற்குள் ஜாதி ஒழிப்பு போராட்டமும் அடங்கும் என்றும், கம்யூனிஸ்ட் தலைவர்களில் தமிழகத்தில் அன்றைக்கு இருந்தவர்களில் எம்.கல்யாண சுந்தரத்தையும் , எம்.ஆர்.வெங்கட்ராமன் தவிர அனைவரும் சாதி மறுப்பு திருமணம் புரிந்தவர்கள். மேலும், எண்ணற்ற சாதி மறுப்பு திருமணங்களை முன் இருந்து செய்து வைத்துள்ளனர் என்றும், கம்யூனிஸ்ட்டுகளின் தீவிரமான சாதி ஒழிப்பு போராட்டங்களை முன்வைத்துவிட்டு, அனைத்து சாதியினரும் இணைந்து ஜாதி ஒழிப்பு
நடவடிக்கையில் இறங்குவது மட்டுமல்ல அரசாங்கத்தைச் சட்டமியற்றும் பணியைச் செய்ய வேண்டும் என்கிறார். மாறாக, குடுமி அறுப்பு , பூணூல் அறுப்பு போன்ற திராவிட இயக்க போராட்ட வடிவங்கள் சாதிய அமைப்பை வலுப்படுத்தவே செய்யும் என்று திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கிறார்.

சாதிய அடையாள அரசியலை தொண்ணூறுக்கு பிந்தைய உலகமயமாக்கல் சமூக பொருளாதார அமைப்பின் தாக்கம், அரசியலிலும் பிரதிபலிக்கத் துவங்கியது. அதன் வர்க்கப் பிரிவினை அரசியல் ஒரு போதும் சாதியை ஒழிக்க செய்யாது என தோழர். ஜீவா அன்றைய திராவிட இயக்க ஜாதி ஒழிப்பு அரசியலை விமர்சிப்பதின் மூலம் முன் வைக்கிறார்.

தொழிலாளி வர்க்க பண்பாட்டில் ஜீவா

தமிழகத்தில் தோழர்.ஜீவா அவர்கள் இலக்கிய ஆசான் , எளிமையானவர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறார். ஆய்வாளர்களில் சிலர் தங்களின் அரசியலில் இருந்து அவரை பண்பாட்டு அரசியலை முன்னெடுத்தவர் என்றும் மண்ணுக்கேற்ற மார்க்சியம் பேசியவர் என்றும் சுருக்குகின்றனர். வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்தும், சோசலிச லட்சியத்தை அடைவது நோக்கியும் தீவிரமாக அரசியல் தளத்தில் முதன்மையாக செயற்பட்டவர் தோழர்.ஜீவா.

தோழர். பி. இராமமூர்த்தி இவ்வாறாக ஜீவா குறித்து கூறுகிறார்.

“1932 ல் வட இந்தியாவிலிருந்து அமீர் ஹைதர்கான் என்ற கம்யூனிஸ்ட் தலைவர் சென்னைக்கு வந்து கம்யூனிஸ்டுக்கு ஆள் தேடும் மோப்ப முயற்சியில் ஈடுபட்டார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு எத்தகைய பண்பு தேவையோ, அத்தகைய பண்பு பெற்றவர் ஜீவா
என்பதை அவர் உணர்ந்தார். ஜீவாவை கம்யூனிஸ்ட் ஆக்கினார். அந்த ஜீவா தான் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கினார். தமிழ்நாட்டில் சோசலிசத்தைப் பற்றி இன்றைய தலைவர்கள் யாருமே இன்றைய கட்சிகள் பேசாத காலத்தில் ஜீவாதான் பேசினார்; பாடுபட்டார். சென்னையிலும், மதுரையிலும், கோவையிலும் நடைபெற்ற தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களுக்கு அவர் தான் தலைமை தாங்கினார். உத்வேகமூட்டினார்.”

1938ல் மதுரை பசுமலை மில் தொழிலாளர் போராட்டத்தில் கைது
செய்யப்பட்டு சிறை… 1940ல் சென்னை மாகாணத்தை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. கரைக்காலில் தஞ்சம் புகுகிறார். அங்கும் நுழைய தடை விதிக்கப்படுகிறது. பிறகு பம்பாய் செல்கிறார். அங்கும் கைது செய்யப்படுகிறார். 1942ல் வேலூர் சிறையிலிருந்து விடுதலையடைகிறார். மீண்டும் சென்னை மாகாணத்தை விட்டு வெளியேற உத்தரவு. சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்கிறார். அங்கும் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறை வைக்கப்படுகிறார்.

இப்படியாகத் தன் வாழ்நாள் முழுவதும் வர்க்கப் போராட்டத்தை
முன்னெடுத்த வர்க்கப் போராளி பின்வருமாறு எழுதுகிறார்.

“பொருளாதார அடிமைத்தனம், அரசியல் அடிமைத்தனத்தையும் சமுதாய அவமதிப்பையும் , கோடானுகோடி மக்களின் ஆத்மீக, தார்மீக வாழ்வின்
கொச்சைப்பாட்டையும் இருட்டடிப்பையும் பல்வேறு உருவங்களில் தவிர்க்க முடியாதபடி பெற்றெடுத்து பாலூட்டி வளர்க்கிறது. பொருளாதார விடுதலைப் போராட்டத்திற்குத் தேவையான அரசியல் உரிமை கொஞ்ச நஞ்சம் தொழிலாளி
விவசாயி மக்களுக்குக் கிடைக்கக்கூடும் . ஆனால், இன்றைய ஏகாதிபத்தியப் பிடிப்பையும் , நிலப்பிரபுத்துவ அமைப்பையும் ஏகபோக மூலதனத்தின் ஆதிக்கத்தையும் தூக்கியெறிந்தாலன்றி, வறுமை, வேலையின்மை, அடிமைத்தனம் ஆகிய சாபத் தீடுகளுக்குக் கழுவாய் காணமுடியாது”.

“எதேச்சாதிகார சமுதாயம், நிலப்பிரபுத்துவ சமுதாயம் ஆகிய சமுதாயங்களில் மனித வர்க்கம் நரக வேதனை அனுபவித்துத் திரட்டிய அறிவுச் செல்வத்தின் இயல்பான வளர்ச்சியின் விளைவாகத்தான் பாட்டாளி வர்க்கப் பண்பாடு உருவாகி நிற்க வேண்டும்” என்று தனது நூலில் குறிப்பிடும் ஜீவா, அப்பண்பாட்டினை தன் வாழ்வில் கடைப்பிடித்தார். பாட்டாளிகளிடமிருந்து வேறுபட்டு இருத்தல் கூடாது என்பதற்காக ஆலைத் தொழிலாளிகள் உடுத்தும் நிஜார் போன்ற உடையையே உடுத்தினார். தொழிலாளிகளின் மத்தியில் ஒலிபெருக்கி அமைப்பில்லாது அதிக சத்தத்தோடு உரை நிகழ்த்தியே காதுகள் செவிடானார்.

தொழிலாளி வர்க்க அரசியலிலிருந்து அதன் பண்பாட்டை கட்டி எழுப்பவே கலை இலக்கிய பெருமன்ற அமைப்பை உருவாக்கினார். மாறாக, பண்பாட்டு தளத்தில் வேலை செய்ய வேண்டும் எனத் தனியாக கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெளியே எழுப்பப்படவில்லை. அதனையும் கூட, அவரது மரணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தான் உருவாக்கினார். மக்சிம் கார்க்கி போன்று முதன்மையாக பண்பாட்டு தளத்தில் வேலை செய்தவர் அல்ல தோழர். ஜீவா. மாறாக, அவர் அரசியல் தளத்தில், பாட்டாளிகளின் போர்க்குரலாக, வர்க்கப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்.

நிலவுகின்ற இந்திய முதலாளிய வர்க்கத்தின் நெருக்கடியிலிருந்து தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராக முன்னகர்த்தி வரும் கொள்கை திட்டங்களை எதிர்கொள்ள ஜீவாவின் பொருள்முதல்வாத பார்வையும், அரசியல் விமர்சன கண்ணோட்டத்தோடு கூடிய வர்க்கப் போராட்ட குணாம்சமும் நமக்கு இன்றைய சூழலில் அவசியத் தேவையாக இருக்கிறது.

ஆதார நூல்கள்:

  1. ப.ஜீவானந்தம், இலக்கியசுவை, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்.
  2. ப.ஜீவானந்தம், கலையும் இலக்கியமும் , நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்.
  3. ப.ஜீவானந்தம், மதமும் மனித வாழ்வும் நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்.
  4. ப.ஜீவானந்தம், ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்.
  5. ப.ஜீவானந்தம், வர்க்கப் போராட்டம் , நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்.
  6. ப.ஜீவானந்தம், சோசலிசத்தின் சரித்திரம், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்.
  7. ப.ஜீவானந்தம், தேவிக்குளம் பீர்மேடு, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்.
  8. ஜீவா மலர்

தொடர்புக்கு – 94887 52879

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button